Home Blog Page 6219

புதிய தலைமைச் செயலக கட்டட வழக்கில் ஸ்டாலினை விசாரிக்க இடைக்கால தடை

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான வழக்கில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோரை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில், தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரகுபதி கமிஷன் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி வழக்கு தொடர்ந்து தன்னிடம் விசாரணை நடத்த தடை உத்தரவு பெற்றார். இந்நிலையில் நீதிபதி ரகுபதி கமிஷன், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருக்கு நீதிபதி ரகுபதி கமிஷன் அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம்: அடுத்த மாதம் செயல்படத் தொடங்கும்!

துர்காபுர்: இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் அடுத்த மாதம் 14ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று தெரிகிறது. மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் இந்த விமான நிலையத்தை பிஏபிஎல் என்ற பெங்கால் ஏரோட்ரோபொலிஸ் பிராஜக்ட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்குகிறது. இந்த விமான நிலையம் அனேகமாக ஏப்ரல் மாதம் 14ம் தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துர்காபுரில் மாநில போக்குவரத்து செயலர் அலபன் பந்தோபாத்யாய கூறுகையில், புதிய விமான நிலையத்திற்கான பணிகள் நிறைவடைந்து விட்டன, மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் ஒப்புதலை எதிர்நோக்கியுள்ளோம் என்றார். காஸி நஸ்ருல் இஸ்லாம் விமான நிலையம் என்று பெயரிடப் பட்டுள்ள இந்த விமான நிலையம், வங்க காலண்டரின்படி, வருட முதல் நாளான ஏப்ரல் 14ம் தேதி தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஐசிசி தரவரிசை: தோனி 2 இடங்கள் முன்னேற்றம்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கேப்டன் தோனி 2 இடங்கள் முன்னேறி 8-ம் இடத்தில் உள்ளார். பேட்டிங் தரவரிசையில் ஷிகர் தவான் 7-ம் இடத்திலும், விராட் கோலி 4ஆம் இடத்திலும் உள்ள்னார். தென்னாப்பிரிக்காவின் ஏ.பி.டிவில்லியர்ஸ் 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். அவருக்குப் பின்னர் இலங்கையின் சங்ககரா 861 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளார். இலங்கையின் தில்ஷன் 5-ம் இடத்திலும் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில், கேன் வில்லியம்சன், ஷிகர் தவன், தோனி, மேக்ஸ்வெல், ஜார்ஜ் பெய்லி ஆகியோரும் உள்ளனர். சுரேஷ் ரெய்னா 17-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 25-ம் இடத்திலுள்ளார். பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலில், முதல் பத்து இடங்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் எவரும் இல்லை. பந்துவீச்சு தரவரிசை விவரம்:

போலீஸ் என மிரட்டி காதலனுடன் சென்ற பெண்ணைக் கடத்தி பலாத்காரம்: 2 பேருக்கு வலைவீச்சு

காரைக்குடி: காரைக்குடியில் தாங்கள் போலீஸ் என்று கூறி மிரட்டி, காதலனுடன் சென்ற பெண்ணை மிரட்டி கடத்திச் சென்று பலாத்காரம் செய்த 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். காரைக்குடி கல்லூரிச் சாலையில் மொபைல் கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் ஒரு பெண்ணும் அவரது காதலனான தேவகோட்டை ரஸ்தா காளிதாசும் (26) நேற்று இரவு 7 மணிக்கு மேல் தனியாகச் சென்றுள்ளனர். வேலங்குடி செல்லும் சாலையில் ரயில்வே டிராக் அருகே இருவரும் தனியாகப் பேசி கொண்டிருந்தனராம். இந்த சாலையின் இருபுறமும் முந்திரிக் காடு உள்ளது. அப்போது அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தாங்கள் “போலீஸ்’ எனவும், “அய்யா’ கூப்பிடுகிறார் வண்டியில் ஏறு எனவும் அந்தப் பெண்ணை மிரட்டி ஏற்றியுள்ளனர். உடன் வந்த காளிதாசையும் மிரட்டி விரட்டியுள்ளனர். இதன்பின்னர் அந்தப் பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரிடம் இருந்த இரண்டரை பவுன் தங்கச் செயினையும் பறித்துள்ளனர். இதனிடையே அவர்களிடம் இருந்து தப்பி வந்த காளிதாஸ் செட்டிநாடு போலீசில் சென்று புகார் செய்தார். இதை அடுத்து, டி.எஸ்.பி.,முத்தமிழ் தலைமையில் போலீசார் காட்டுக்குள் சென்று தேடினர். இந்நிலையில், அதிகாலை 4 மணிக்கு, அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றவர்கள், காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் அவரை விட்டுவிட்டு தப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தான் வேலை செய்த மொபைல் கடை உரிமையாளருக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். அவர் போலீசுக்கு தகவல் அளித்ததன் பேரில், டி.எஸ்.பி., முத்தமிழ், அப்பெண்ணை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். தப்பியோடிய 2 பேரை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

சுங்கக் கட்டணக் கொள்ளையை ஒழிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன் கோரிக்கை!

சென்னை தமிழ்நாட்டில் சுங்கக் கட்டணக் கொள்ளையை ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: நெடுஞ்சாலைகளில் 100 கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். அதற்கான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மாநிலங்களவையில் கூறியிருக்கிறார். ஏற்கனவே 62 சுங்கக் கட்டண சாவடிகளில் வசூல் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் சுமார் ஐந்தாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கான சாலை மத்திய மற்றும் மாநில அரசுகளின் நெடுஞ்சாலைத் துறைகளால் பராமரிக்கப்படுகின்றன. அதில் சுங்கக் கட்டண வசூலுக்கென 41 மையங்கள் அமைக்கப்பட்டு தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தமது விருப்பம்போல அவ்வப்போது சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வருகிறார்கள். இந்தக் கொள்ளையின் காரணமாக பேருந்துக் கட்டணங்கள் உயர்வது மட்டுமின்றி சரக்குக் கட்டணம் உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்கிறது. எந்தவொரு வாகனத்தைப் பதிவுசெய்வதென்றாலும் வாகனத்தின் விலையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு சாலை வரியாக மொத்தமாக வசூலிக்கப்படுகிறது. அதே வாகனத்துக்கு மீண்டும் சாலையில் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமானதாகும். அரசு தனியார் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் போடப்படும் சாலைகளின் செலவுக்காகத்தான் கட்டணம் வசூலிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அந்தச் செலவை ஈடுகட்ட எத்தனை ஆண்டுகளுக்குக் கட்டணம் வசூல் செய்வார்கள் என்பதை அரசாங்கம் சொல்வது இல்லை. இது முழுக்க முழுக்க தனியாரின் கொள்ளைக்கு வழிவகுப்பதாகவே உள்ளது. தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் நடைபெறும் சுங்கக் கட்டணக் கொள்ளைக்கு உடனடியாக தமிழக அரசு முடிவுகட்டவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தில்லி நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் ஆஜர்

புது தில்லி: தில்லி நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து, நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் அரவிந்த் கேஜ்ரிவால்! அவதூறு வழக்கில் தில்லி நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நேரில் ஆஜரானார். அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோர் மீது சுரேந்தர் ஷர்மா என்ற வழக்கறிஞர் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியதாக தில்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கேஜ்ரிவால், சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, பிற்பகல் 2 மணிக்குள் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று பிற்பகல் நீதிமன்றம் கூடியபோது அரவிந்த் கேஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, யோகேந்திரா யாதவ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான உத்தரவு வரும் மே மாதம் 2-ந் தேதி பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் மே 2 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

ஹரியானா தேவாலயத் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் ஹிஸ்ஸார் அருகே கட்டப்பட்டு வந்த கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு குழுவால் சேதப் படுத்தப் பட்டது. அங்கிருந்த சிலுவைக்கு பதிலாக அனுமன் சிலையை அங்கு வைத்துச் சென்றதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தேவாலயத்தின் பாதிரியார் சுபாஷ் சந்த் அளித்த புகாரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக அனில் கோத்ரா என்ற முக்கியக் குற்றவாளியை இன்று போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். நேற்று சட்டப் பேரவையில் இது குறித்து விளக்கம் அளித்தபோது, தேவாலயம் சட்ட விரோத நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. அந்த மதகுருவுக்கும் சில உள்ளூர் நபர்களுக்கும் இடையே வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்த தேவாலயம் தாக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்பணி தொடங்கியது மதிப்பீடு செய்வதில் தவறு ஏற்பட்டால் ஆசிரியரே பொறுப்பு

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி தொடங்கியது. மதிப்பீடு செய்வதில் தவறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியரே பொறுப்பு ஏற்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கியது. தேர்வு ஏப்ரல் 19-ந்தேதி முடிவடைகிறது. மாணவ-மாணவிகளின் நலன் கருதி விடைத்தாளை விரைவாக மதிப்பீடு செய்து, அதே நேரத்தில் எந்தவித பிரச்சினையும் இன்றி, சரியான முறையில் தேர்வு முடிவை வெளியிடவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசு தேர்வுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி விடைத்தாள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் நேற்று 70 மையங்களில் தொடங்கியது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தாள்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணியை நேற்று அதிகாரிகள் தொடங்கினார்கள். ஒட்டுமொத்த பணியை அரசு தேர்வு இயக்குனர் கு.தேவராஜன் கண்காணித்து வருகிறார்.
விடைத்தாள்களை திருத்தும் போது  பல புதிய முறைகளை கடைபிடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பொறுப்பு
விடைத்தாள்களில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வழக்கம் போல் இடதுபுறம் குறிக்காமல் வலதுபுறமாக குறிக்க வேண்டும். அதற்கு என தனியாக இடம் விடைத்தாள்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.முகாம் அலுவலரிடம் இருந்து முதன்மை தேர்வர்கள் விடைத்தாள் கட்டுகளை பெற்றுக்கொண்டு அதற்கான ஒப்புகையினை சரிபார்த்து அளித்தல் வேண்டும்.உதவித்தேர்வர்கள் விடைத்தாள் உறைகளை பெற்ற உடன் விடைத்தாள்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதையும், விடைத்தாள்கள் ஒவ்வொன்றின் அனைத்து பக்கங்களும் உள்ளனவா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் முதன்மை தேர்வாளரின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். அவ்வாறு கொண்டு வராவிட்டால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு உதவித்தேர்வாளரே (ஆசிரியர்கள்) முழுப்பொறுப்பேற்க நேரிடும்.திருத்தப்பட்ட விடைத்தாளுக்குரிய மதிப்பெண்கள் முதன்மை விடைத்தாளின் முதல் பக்கத்தில் அதற்குரிய கட்டத்தில் பதியப்பட்டுள்ளதா என்பதை விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
கூர்ந்தாய்வு அலுவலர் விடைத்தாள் களை கூர்ந்தாய்வு செய்ய மட்டுமே வேண்டும். அவர் உதவித் தேர்வாளர்அளித்த மதிப்பெண் களை குறைப்பதற்கோ அல்லது மாற்றி அமைப்பதற்கோ அதிகாரம் இல்லை. மதிப்பெண் குறைந்தாலோ அல்லது அதிமானாலோ முதன்மை தேர்வாளரின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.விடைத்தாளின் முதல் பக்கத்தில் வலது கை மேல்புறத்தில் உதவி தேர்வாளர், கூர்ந்தாய்வு அலுவலர், முதன்மை தேர்வாளர் கையொப்பம் இட வேண்டும்.
 விடைத்தாளில் காணப்படும் கூட்டலில் பிழை இருந்தாலோ, மதிப்பீடு செய்யப்படாமல் விடை இருந்தாலோ அல்லது மதிப்பீடு செய்யப்பட்ட விடையின் மதிப்பெண் பதியப்படாமல் இருந்தாலோ கூர்ந்தாய்வு (ஆசிரியர்கள்) அலுவலரே முழு பொறுப்பேற்க வேண்டும்.மதிப்பெண்கள்விடைத்தாளின் ‘‘பி’’ பகுதியில் மொத்த மதிப்பெண்கள் எண்ணாலும், எழுத்தாலும் எழுதப்பட வேண்டும். இந்த மதிப்பெண்களை விடைத்தாள் முகாம் அலுவலர் அன்றே கம்ப்யூட்டரில் பதிவு செய்து தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

நிலம் கையகப்படுத்தும் மசோதா: சோனியா தலைமையில் கண்டனப் பேரணி

march-towards-president-house-lead-by-soniaபுது தில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவைக் கண்டித்து சோனியா தலைமையில் செவ்வாய்க் கிழமை இன்று மாலை தில்லியில் பேரணி நடந்தது. குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று சோனியாவும் சில எம்பிக்களும் மனு கொடுத்தனர். முன்னதாக, நேற்று சென்ற பேரணிக்கு உள்துறை அனுமதி வழங்கவில்லை. தடையை மீறிச் சென்ற காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீசாருடன் மோதலிலும் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்றும் சோனியா தலைமையில் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இந்தப் பேரணி நடந்தது. சோனியா தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் தொண்டர்கள், இளைஞர் காங்கிரஸார் திரண்டு சென்றனர். இதில், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரிக் கட்சிகள் உள்பட 11 எதிர்க் கட்சிகளை சேர்ந்தவர்களும் பேரணியில் கலந்து கொண்டனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100 எம்.பி.,க்கள் இந்தப் பேரணியில் சென்றனர். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு 1 கி.மீ., முன்பே அவர்கள் தடுத்த நிறுத்தப் பட்டனர் சோனியாவும் 26 எம்.பி.,க்கள் மட்டும் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று மனு கொடுத்தனர். முன்னதாக, இன்று பிற்பகல் வரை பேரணிக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை. பேரணிக்கு சற்று நேரம் முன்னர்தான் அனுமதி கொடுத்தது.

பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை முன்னெச்சரிக்கை தீவிரம் : அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

பன்றிக்காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில்  மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் ஆட்சியர் கருணாகரன் தலைமையில், மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுத்திடும் பொருட்டு மாவட்ட அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி மற்றும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கருணாகரன் பன்றிக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை ஆகியன போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை மூலமாக மேற்கொள்ள வேண்டும்.
இந்த காய்ச்சலின் அறிகுறிகளாக சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டை வலி, சிலருக்கு வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஆகியன ஏற்படலாம். வைரஸ் கிருமியானது நோய் தொற்று ஏற்பட்டவர்; இருமும் போதோ அல்லது தும்மும் போதோ ஏற்படும் நீர்த்திவலைகள் மூலமாக காற்றில் பரவுகிறது. இந்த நீர்த்திவலைகள் படிந்த பொருட்களை தொடும்போது கைகளில் இந்த கிருமி ஒட்டிக்கொள்கிறது.
கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடும்போது கிருமித்தொற்று ஏற்படுவதை பொதுமக்களிடத்தி;ல விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இந்த நோய் பன்றிகளிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்றுவது இல்லை என்பதையும், தற்பொழுது இந்த நோய் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து மட்டுமே மற்றவர்களுக்கு பரவுகிறது என்பதை பொது மக்களிடத்தில் தெளிவு படுத்த வேண்டும்.  எந்த விதமான காய்ச்சல் ஏற்பட்டாலும் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதிக்கப்பட்டு மருந்தினை ஐந்து தினங்கள் உட்கொண்டால் இந்த நோயை எளிதில் குணப்படுத்தலாம்.
ஆகவே, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை உடனிருந்து கவனிப்பவர் களுக்கு மருத்துவ ஆலோசனையில் பெயரில் தற்காப்பாக மருந்துகளை வழங்க அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இந்நோய்க்கான பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, கல்வித்துறை ஆகியவற்றின் மூலம் பொது இடங்கள், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்கள் (பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள்) ஆகியவற்றில் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு சுவரொட்டிகள், பேனர்கள் ஆகியன வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பன்றிக்காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.
மேலும், அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் கை சுகாதாரம் பேணுதல் மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு குறித்து சுகாதார நலக்கல்வி வழங்குவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு இலவச பரிசோதனை மையம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. மேலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பன்றிக்காய்ச்சல், கண்காணிப்புக்கென தனிவார்டுகள் அமைக்கப்பட்டு போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, தேவையான அளவு பாதுகாப்பு உபகரணங்கள், மாத்திரைகள், சிரப்புகள் ஆகியன இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் காய்ச்சல் கண்காணிப்புப் பணிகள் ஆகியன தொடர் தீவிர நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே பொது மக்கள் அனைவரும் பன்றிக்காய்ச்சல், அறிகுறிகள், பரிசோதனை முறைகள், கை சுகாதாரம் பேணுவதன் அவசியம் ஆகியவற்றை குறித்து அறிந்து கொள்ளவும், நோய் அறிகுறிகள் இருப்பின் காலம் தாழ்த்தாது அரசு மருத்துவமனையை அணுகி முறையான இலவச ஆலோசனை பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ளவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மருத்துவர்கள் தனித்துவத்துடன் பணியாற்ற வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.