Home Blog Page 6229

பெண் போலீஸிடம் உதவி ஆணையர் ஆபாசப் பேச்சு: வாட்ஸ்அப்-பில் பரவும் “கொஞ்சல் வாய்ஸ்”

chennai-police-asst-commissionerசென்னை: சென்னையில் காவல் உதவி ஆணையர் ஒருவர், சக பெண் போலீஸ் ஒருவரிடம் ஆபாசமாகப் பேசும் ஆடியோ வாய்ஸ், வாட்ஸ்அப்பில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து, சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் அதிகாரிகள் மட்டத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த வாய்ஸ் தொடர்பாக, காவல் துறை உயர் அதிகாரிகள், அந்த உதவி ஆணையருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பவுள்ளனராம். இதனிடையே இந்த ஆபாசப் பேச்சு குறித்து சம்பந்தப் பட்ட உதவி ஆணையர், இது பணி தொடர்பான ஏமாற்றத்தில் கூறப்பட்டுள்ள பழிவாங்கல் வேலை என்று கூறியுள்ளார். ஆனாலும், ஆபாசமாகப் பேசிய உதவி ஆணையர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று பரவலாக கேள்வி எழுந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, இந்த விவகாரத்தில், தொடர்புடைய பெண் போலீஸ், அந்த உதவி ஆணையர் மீது புகார் கொடுக்கும் பட்சத்தில், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆபாசமாகப் பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதே நேரம் அந்த பெண் போலீஸ், புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் வேறு மாதிரியான சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார். எப்படி இருந்தாலும், பிரச்னைகளுக்கு நாம் போய் நிற்கக் கூடிய போலீஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு நடந்து கொண்டது தற்போது ஊடகங்களில் பெரும் சர்ச்சைக்குரியதாகப் பேசப்படுகிறது.

தேசிய விடுமுறை தினங்களைக் குறைக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்

suresh-joshiநாகபுரி: கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, விடுமுறைகள் தினப் பட்டியலில் இருந்து, காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதியை நீக்க முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில், காந்தி ஜெயந்தி விடுமுறை தினப் பிரச்னையில் தாங்கள் கருத்து கூற விரும்பவில்லை என்றும், ஆனால், நாட்டில் தேசிய விடுமுறைகள் குறைக்கப் பட வேண்டும் என்று தாங்கள் எண்ணுவதாகவும், அது நாட்டில் பணிக் கலாசாரத்தை மேம்படுத்தும் என்றும் அது தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலர் சுரேஷ் ஜோஷி இதுகுறித்து ஞாயிற்றுக் கிழமை இன்று தெரிவிக்கையில், கோவா விவகாரம் என்ன காரணம் என்று தெரியவில்லை. இது எப்படி நிகழ்ந்தது என்பது குறித்துக் கேட்போம். ஆனால், ஒரு ஆய்வு முடிவின் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் மக்கள் 150-155 நாட்கள்தான் பணி செய்கிறார்கள், வருடத்தில் விடுமுறைகள் அதிகம் இருப்பதால். இந்த விடுமுறை தினங்கள் குறைக்கப்பட்டால், பணிக் கலாசாரம் சிறப்படையும் என்று கூறினார். முன்னதாக கோவா அரசின் விடுமுறைகள் தினப் பட்டியலில் மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்.2 விடுபட்டுப் போயிருந்தது. இது குறித்து ஆளும் பாஜகவினரே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இது அச்சிட்டதில் நேர்ந்த தவறு என்றும், அது சரிசெய்யப்படும் என்றும் தெளிவுபடுத்தியிருந்தது.

குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்ப கேரள ஆளுநர் சதாசிவம் முடிவு

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள கேரள மாநில ஆளுநர் சதாசிவம், இது குறித்து விரிவான அறிக்கையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்ப இருப்பதாகக் கூறியுள்ளார்.

செல்போனை சார்ஜ்போட முயன்ற போது ரயிலில் தவறி விழுந்த டாக்டர் மரணம்

சென்னை: ரயிலில் செல்போனை சார்ஜில் போட முயன்றபோது கால் இடறி கீழே விழுந்த சென்னையைச் சேர்ந்த டாக்டர் பலியானார். சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ரேணுகா தேவி தம்பதியின் ஒரே மகன் எழில்நம்பி (34). ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் படிப்பு படித்து வந்தார். மைசூரில் நடந்த மருத்துவக் கருத்தரங்கில் பங்கேற்க சென்னையில் இருந்து காவேரி எக்ஸ்பிரஸில் சென்றார். அவருடன் அவரது நண்பர்களும் சென்றனர். அதிகாலை 2 மணி அளவில் ரயில் அரக்கோணம் அருகே உள்ள மேல்பாக்கத்தில் சென்றபோது, செல்போனுக்கு சார்ஜ் போட ரயிலின் கதவு அருகே சென்றார் நம்பி. அப்போது கால் தடுக்கி அவர் ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், உடனே சங்கிலியைப் பிடித்திழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில்வே போலீசார் நம்பியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் நம்பியின் உடல் நேற்று மாலை பல்லாவரத்தில் தகனம் செய்யப்பட்டது. நம்பிக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.

அமெரிக்கா சென்றாலும் புலிகளால் என் உயிருக்கு ஆபத்து: கோத்தபய ராஜபட்ச

gothapaya-rajapaksha கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்ச, தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது… “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. புலிகள் அமைப்பு மட்டுமல்லாது மற்ற சில அமைப்புகளும் என்னை மிரட்டி வருகின்றன. எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். அரசு என்னை விரட்டி விரட்டித் துன்புறுத்துகிறது. அமெரிக்கா சென்றாலும் அங்கே புலிகள் என்னைக் கொன்று விடுவார்கள். இதுவரை நான் எந்தக் கட்சியிலும் இருந்ததில்லை. வருங்காலத்தில் நான் அரசியல் கட்சியில் சேரக்கூடும்” என்றுள்ளார். இலங்கையில் அரசுப் பணியாற்றிய போது கோத்தபய ராஜபட்ச மேற்கொண்ட சட்டரீதியான செயல்களுக்கு இப்போது குற்றம் கற்பிக்கப் படுவதாக புகார் கூறியுள்ளார் அவரது சகோதரரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபட்ச. மேலும், ஒரு முன்னாள் பாதுகாப்புச் செயலராக இருந்த அவர் தனது கடமையைத்தான் செய்துள்ளார். ஆனால் அவர் எடுத்த முடிவுகள் குறித்து இப்போது கேள்வி எழுப்பப் படுகிறது என்று கூறியுள்ளார் மகிந்த ராஜபட்ச.

அப்பா இயக்கத்தில் நடிக்கிறேன்: ஐஸ்வர்யா அர்ஜுன்

aishwarya ஒரு இனிய காலை வேலை ! அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவை சந்தித்தோம்.. “பட்டத்துயானை” படத்தின் மூலம் கதாநாயகியாக பரிவட்டம் கட்டிக்கொண்ட அவரிடம் காணப்பட்ட எளிமை அவருக்கு இன்னு வலிமை சேர்த்தது. அடுத்த படம் எப்போ? என்று கேள்வியை உதிர்க்கும் முன்னே.. அதற்குத் தான் தயாராகி கொண்டிருக்கிறேன். அப்பாவோட இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன் அதில் கதக் நடனமாடுகிற மாதிரியான வேடம். அதனால் கதக் நடனம் கத்து கிட்டு வர்றேன். ஏற்கனவே நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். ஆனால் கதக் தெரியாது. மத்த டைரக்டர்ன்னா பரவா இல்லை அப்பா டைரக்ஷன்.. அவர் உருவாக்கின காரக்டருக்கு நான் உயிர் கொடுக்கணும் இலன்னா திட்டு விழும்.அதுக்காக கத்துக்கறேன். ஒரு இடைவெளி விழுந்து விட்டது மாதிரி தெரியிதே ! இரண்டு ஹிந்தி படம் வந்தது. வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நல்ல படம் வந்தால் நடிப்போம். இலன்னா வேற வேலையில கவனம் செலுத்தலாம்னு பேஷன் டிசைனிங் கத்துகிட்டேன். இப்ப அப்பா இயக்கும் படத்திற்கு நான்தான் காஸ்டியூம் டிசைனர். லண்டன்ல போய் பேஷன் டிசைனிங் படித்தது நல்லதுக்குத் தான்னு தெரிகிறது. அப்பா இயக்குற படம்னா சில நல்லது கேட்டது இருக்குமே? அப்பாங்கிறது வீட்ல.. ஷூட்டிங் ஸ்பாட்டுன்னு வந்துட்டா குரு, சிஷ்யை உறவுதான். அவர் சொல்வதை செய்து விட்டு நல்ல பெயர் எடுக்கணும். நல்ல நடிகை என்று எல்லோரும் பாராட்டனும் அது தான் என் லட்சியம். அதுவும் அப்பா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் நடிக்கிறேன் ஹீரோ யார் என்று அப்பா விரைவில் அறிவிப்பார். இந்த படத்திற்காக அப்பா ஒர்க் ஷாப் வைத்து எல்லா நடிகர்களுக்கும் பயிற்சி அளித்து படம் எடுக்க போகிறார்.. -என்றார் ஐஸ்வர்யா.

அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புகிறேன்: ராஜபட்ச

கொழும்பு; தாம் சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க விரும்புவதாகக் கூறியுள்ளார் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச. மேலும், தன்னையும், தன் குடும்பத்தாரையும் இலங்கை அரசு தொந்தரவு செய்கிறது என்றும், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்புவில் நடந்த புகைப்படக் கண்காட்சியைக் காண வந்த ராஜபட்சவிடம் செய்தியாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவரிடம், தற்போதைய இலங்கை அரசின் போக்கு குறித்து ஒரு கேள்வியைக் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “நான் தற்போது அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன். நான் சுதந்திரக் கட்சியின் சிறந்த தொண்டன். என சகோதரர்களையும் குழந்தைகளையும் விமர்சித்து வருவதை நிறுத்துங்கள். நான் தவறு செய்திருந்தால் எங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள். எதற்கும் நாங்கள் தயார் என்று கூறினார்.

கனவில் ஓர் உருவமே; அது எனக்குப் பிடிக்குதே! மகேந்திரன் – மனீஷாஜித் நடிக்கும் ’விந்தை’

vindhai காதல் 2014 படத்தையடுத்து அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின், R.Y.கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ விந்தை “ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். மற்றும் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, சிசர்மனோகர், டெலிபோன் ராஜ், நெல்லைசிவா, டி.ரவி, கவுதமி, செந்தி ஜெகநாதன், ஐசக், ஆதேஷ், சிவநாராயணமூர்த்தி, சுமதி, தவசி, சுப்புராஜ் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ரத்தீஷ்கண்ணா / இசை – வில்லியம்ஸ் பாடல்கள் – பாரதி, பொன்முத்துவேல் / கலை – பத்து / எடிட்டிங் – நதிபுயல் நடனம் – தினா / தயாரிப்பு மேற்பார்வை – கார்த்திக் ரெட்டி நிர்வாக தயாரிப்பு – பொன்ராஜ் இணைதயாரிப்பு – R.Y.ஆல்வின், R.Y.கெவின் தயாரிப்பு – R.L.யேசுதாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் லாரா. இவர் ஏற்கெனவே வர்மம் என்ற படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் லாராவிடம் கேட்டபோது ….. ”இந்த படம் முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கப் பட்டுள்ளது. சமீபத்தில் கொடைக்கானலில் மகேந்திரன் – மனீஷாஜித் பங்கேற்ற பாடல் காட்சியான “ கனவில் ஓர்உருவமே ! அது எனக்கு பிடிக்குதே “ என்று இருவரும் ஆடிப் பாட டான்ஸ் மாஸ்டர் சங்கர் நடன அமைப்பில் படமாக்கப் பட்டது. இரண்டு மணி நேரம் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது.. இன்றைய சினிமாவே மக்களை எண்டர்டைன் பண்ண வைக்க வேண்டும். என்ற பார்முலாவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அதை தான் நானும் பாலோ செய்யறேன். படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிந்துவிட்டது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது” என்றார் அவர்.

நான் டி.ஆரின் பரம ரசிகன்: ஜெயம் ரவி

jeyam-ravi ஜெயம்ரவி, ஹன்சிகா, பூனம்பாஜ்வா நடிக்க எஸ்,.நந்தகோபால் தயாரிப்பில் லஷ்மன் இயக்கத்தில் உருவாகும் படம் ரோமியோ ஜூலியட். இமான் இசையில் அனிருத் பாடிய டண்டணக்க பாடல் தமிழகமெங்கும் பரபரப்பாக ஹிட் அடிக்கிறது.  அதே நேரத்தில் சில விமர்சனங்களும் எழுந்திருக்கிறது.. இது பற்றி நடிகர் ஜெயம்ரவி கூறியிருப்பதாவது.. [su_highlight]ரோமியோ ஜூலியட் படத்தில் நான் டி.ஆரின் ரசிகனாக நடித்திருக்கிறேன். அவரது தன்னபிக்கையும், எதுவும் என்னால் முடியும் முயற்சி செய்து பார்.. இதுவும் முடியும் இதுக்கு மேலும் முடியும் என்கிற அவரது தன்னம்பிக்கை தான் என் கதாப்பாத்திரத்தின் இன்ஸ்பிரேசன். அதனால் தான் அவரது எவர்கிரீன் வரிகளான “ டண்டணக்கா” என்கிற வரிகளையும், அவரையும் சேர்த்து இந்த பாடலில் பதிவு செய்து இருக்கிறோம். எந்த ஒரு வரிகளிலும், வார்த்தைகளிலுமே அவரை குறைவாகவோ குறிப்பிடவில்லை. அவரை பெருமை படுத்தும் விதமாகவே பாடல் உருவாக்கப் பட்டுள்ளது. நான் எப்போதுமே எந்த விதமான கருத்து மோதல்களிலும் சிக்கியதில்லை. எங்க அப்பா, அம்மாவுக்கு எப்படி செல்லப் பிள்ளையாக இருக்கிறேனோ அதே மாதிரியே எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாக இருக்க ஆசைப் படுகிறேன். அதனால் தயவு செய்து இந்த பாடலை யாரும் ரீமிக்ஸ் செய்து தன்னம்பிக்கை தமிழனான டி.ஆர் அவர்களை புண்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேடடுக்கொள்கிறேன்.[/su_highlight]   அன்புடன்,  ஜெயம் ரவி

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர முயன்ற பிரிட்டிஷ் சிறுவர்கள் 3 பேர் மீட்பு

அன்காரா: சிரியாவில் இயங்கிவரும் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாத இயக்கத்தில் சேர வேண்டும் என்று கூறிக் கொண்டு அங்கே செல்ல முயன்ற பிரிட்டிஷ் சிறுவர்கள் 3 பேர் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப் பட்டனர். ஞாயிற்றுக் கிழமை இன்று இது குறித்து தகவல் தெரிவித்த துருக்கி அதிகாரிகள், அவர்கள் மூவரின் பெயர்களை வெளியிடவில்லை. அவர்கள் மூவரையும் லண்டனுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், மூவரையும் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் இந்த வாரத்துக்குள் ஒப்படைத்து திருப்பி அனுப்பப் படுவர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து முன்னதாக தகவல் தெரிவித்திருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், 17 வயதுடைய சிறுவர்கள் இருவர், சிரியாவுக்குச் செல்வது குறித்து தங்களுக்கு தகவல் வந்ததாகவும், அவர்கள் இருவருடன் 19 வயது நபர் ஒருவரும் செல்வதாகவும், அவர்களைத் தாங்கள் தேடியதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.