சென்னை: உடன்குடி அனல்மின் நிலையத் திட்டம் ரத்து என்னும் செய்தி அரசின் நிர்வாகக் குளறுபடிக்கு ஒரு உதாரணம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி…. உடன்குடி அனல் மின் நிலையத் திட்டம் ரத்து என்னும் செய்தி அதிமுக அரசின் ஊழல் மற்றும் நிர்வாகக் குழறுபடிகளுக்கு மற்றுமொரு சிறந்த உதாரணம். கழக அரசு இந்த திட்டத்தை பெல் என்னும் மத்திய அரசு நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்வாரியமும் இணைந்து நிறைவேற்றும் வகையில் 2008 ம் வருடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு 2012 ம் வருடம் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு 2013ம் வருடம் மின்வாரியமே நிறைவேற்ற டெண்டர் கோரினார். 1320 மெகாவாட் மின்சாரம் அளிக்கும் இந்த திட்டம் பலவகையிலும் தாமதம் செய்யப்பட்டு, இதில் பங்கேற்ற சீனா நிறுவனம் டெண்டா் விதிகள் மீறப்படுவதாகக் கூறி நீதிமன்றம் சென்றது. மாநில தேவைக்கு தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை இப்போது அமைச்சராக இருக்கும் நத்தம் விசுவநாதனும், முன்பு தமிழ்நாடு மின்வாரிய தலைவரும் தற்போது தலைமை செயலாளர் ஆக இருக்கும் ஞானதேசிகனும் சேர்ந்து தான் வாங்கினார்கள். இந்த திட்டம் தாமதம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும். ஏற்கனவே 80,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருக்கும் மின்வாரியத்தில் ஒரு திட்டத்தை ரத்து செய்து 80 கோடி ரூபாயை தேவையற்ற முறையில் நஷ்டப்படுத்தி இருப்பது தான் இன்றைய அதிமுக அரசின் அவல நிலைமை.
கே.பாலசந்தர் பவுண்டேஷன் அறக்கட்டளை குறித்து புஷ்பா கந்தசாமி விளக்கம்
சென்னை: மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கே.பாலசந்தர் பவுண்டேஷன் அறக்கட்டளை குறித்து அதன் நிர்வாக அறங்காவலர் புஷ்பா கந்தசாமி கூறியதாவது.. கடந்த வருடம் டிசம்பர் 23ம் தேதி இயக்குனர் சிகரம் திரு. கே. பாலசந்தர் அவர்கள் அமரரான செய்தி கேட்டு பெருவாரியாக வந்து எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராய் இணைந்து எனது தந்தைக்கு மரியாதைசெலுத்தி வேண்டிய உதவிகள் செய்த பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் எனது தந்தையின் தயாரிப்பு நிறுவனமான “கவிதாலயா” விற்கு இத்தனைக்காலம் பெரும்பாலமாக இருந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறவிழைகிறேன். எங்களது தந்தை திரு கே. பாலசந்தர் அவர்களின் பெயரில் “கே.பாலசந்தர் பவுண்டேஷன்” (K. Balachander Foundation) என்ற ட்ரஸ்ட் அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். இந்த அமைப்பிற்கு கே.பியின் குடும்ப உறுப்பினர்களான திருமதி ராஜம் பாலசந்தர், திருமதி புஷ்பா கந்தசாமி, திரு பிரசன்னா, திருமதி கீதாகைலாசம், திரு கந்தசாமி பரதன் இவர்களுடன் இயக்குனர் திரு வசந்த் சாய்ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அமைப்பின் மூலம் கீழ்க்காணும் திட்டங்களை நாங்கள் விரைவில் முறையாக அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் அளித்துவிட்டு செயல்படுத்த உள்ளோம்.
- கே.பி. அவர்களின் விருப்பபடி திரைப்படத் துறையைச் சேர்ந்த நலிந்த தொழிலாளிகளின் குழந்தைகளுக்குகல்வி உதவி.
ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் Visual Communication துறையில் பயிலும் மாணவர்களில்சிறந்தவருக்கு கே பாலசந்தர் பெயரில் “Creative Excellence” விருது வழங்குதல்.
ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த தினமான ஜுலை 9ல் விழா நடத்தி நாடகம், திரைப்படம்,சின்னத்திரை ஆகிய மூன்று துறைகளில் சிறந்து விளங்கும் படைப்பாளிகளுக்கு விருது வழங்குதல்.
கே.பி அவர்களின் படைப்புகளை Digitize செய்து பாதுகாத்து அவரைப் பற்றிய எல்லா தகவல்களையும் ஆவனப்படுத்தி, எதிர்கால தலைமுறையினருக்கு பயன்தரக்கூடிய ஒரு கண்காட்சியகம் ஏற்ப்படுத்துதல்.
கே.பி அவர்களின் மகன் மறைந்த திரு.கைலாசம் அவர்கள் பெயரில் தொலைகாட்சித் துறையைச் சேர்ந்தஒருவருக்கு சிறந்த படைப்பாளி விருது அளித்தல்.
கே.பி அவர்களைப் பற்றிய புத்தகங்களை வெளிக் கொணர்வது. அதில் முதல் புத்தகம் ஜுலை 9, 2015 அன்றுவெளிவர இருக்கிறது. இதை எழுதியவர் இயக்குனர் வசந்த் சாய்.
இது போன்ற பல பணிகளை மேற்கொள்ள உள்ளோம். எங்களது பணி சிறந்து விளங்கிட தங்களுடைய மேலானஒத்துழைப்பை வேண்டுகிறோம்.
அஜித்-விஜய் ரசிகர்களிடையே மோதலை தூண்டிவிடும் ‘கங்காரு’ படம்..!
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் ‘கங்காரு’ படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சாமி இயக்கியுள்ளார். அர்ஜுனா கதாநாயகனாக நடிக்க அவரின் தங்கையாக பிரியங்கா நடித்துள்ளார். அர்ஜுனாவின் காதலியாக வர்ஷா அஸ்வதி நடித்துள்ளார். மேலும் தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் இயக்குநர் ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளராக பாடகர் ஸ்ரீநிவாஸ் அறிமுகமாகிறார். ‘கங்காரு’ படத்தில் அஜித் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் மோதவிடும் காட்சி ஒன்றை வைத்துள்ளார் சாமி. படத்தில் பிரியங்கா தல அஜீத்தின் ரசிகையாகவும், வர்ஷா விஜய்யின் ரசிகையாகவும் வருகிறார்கள். இருவரும் ஒரு காட்சியில் தங்கள் நாயகனின் அருமை, பெருமைகளை சொல்லி காரசாரமாக மோதிக் கொள்வார்கள். பிரியங்கா அஜித்தின் புகழ் பாட, வர்ஷா அதற்கு காரசாரமாக பதிலடி கொடுப்பதோடு விஜய்யின் புகழ் பாடுவார். இப்படியாக இவர்களின் சண்டை ஐந்து நிமிடங்களுக்கு நீடிக்கிறதாம். படத்தில் தல ரசிகரையே பிரியங்கா மணந்து கொள்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ‘கங்காரு’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி 150 திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.
பாலாவின் தாரைதப்பட்டை படப்பிடிப்பில் விபத்து: இயக்குனர் எம்.சசிகுமாருக்கு கைமுறிவு
இயக்குனர் பாலாவின் தாரைதப்பட்டை படபிடிப்பில் விபத்து! நடிகர் இயக்குனர் M.சசிகுமாருக்கு கை முறிந்தது! இயக்குனர் பாலா எழுதி இயக்கி வரும் “தாரை தப்பட்டை” படத்தில் M.சசிகுமார், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுபுர இடங்களிலும் படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடிகர் M.சசிகுமார் வில்லனுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சண்டைக்காட்சியின் போது யாருக்கும் விபத்து ஏதும் நேர்ந்தால் உடனடியாக சிகிச்சை பெற மருத்துவர்கள் குழுவும், 2 ஆம்புலன்சும் தயார் நிலையில் இருந்தனர். இன்று படமாக்கப்பட்ட ஆக்ரோஷமான, அதிரடியான சண்டைக்காட்சி தொடர்ச்சியின் போது நடிகர் M.சசிகுமார் சற்றும் எதிர்பாரா வண்ணம் விபத்துக்குள்ளானார், அவரது இடது கை எலும்பு முறிந்தது. உடனடியாக அங்கிருந்த மருத்துவ குழுவினர் உதவியோடு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின் M.சசிக்குமாரின் இடது கைக்கு மாவு கட்டு போடப்பட்டுபட்டது. சிறிது காலம் ஒய்வெடுக்கும் படி மருத்துவர்கள் M.சசிகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளதால் இயக்குனர் பாலா படபிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். நடிகர் மற்றும் இயக்குனர் M.சசிக்குமார் ஒய்வெடுக்க மதுரை சென்றுள்ளார். படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர். M.சசிகுமார் உடல்நலம் முழுமையாக குணமடைந்ததும் படபிடிப்பு துவங்கும்..
தெற்கு பிரேசில் மலைப் பகுதியில் பஸ் கவிழ்ந்து 51 பேர் பலி
ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டின் தெற்குப் பகுதியில் சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 51 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு பிரேசிலில் உள்ள சண்டா கட்டாரினா மாகாணத்தில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அது மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 1300 அடி பள்ளத்தில் சரிந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 32 பேர் பலியானதாக, முதல் கட்டத் தகவலில் போலீஸார் தெரிவித்தனர். உடனையாக விபத்து நடைபெற்ற இடத்துக்கு மீட்புக் குழுவினர் சென்றனர். விபத்து நடைபெற்ற பகுதி மரங்களும், புதர்களும் நிறைந்து காணப்பட்ட இடம் என்பதால், மீட்புக் குழு சம்பவ இடத்துக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 12 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில் மேலும் 19 பேர் உயிரிழந்துவிட்டதாக மீட்புக் குழுவினர் கூறினர். இதனால் பலியானவர் எண்ணிக்கை 51 ஆக அறிவிக்கப்பட்டது. இந்த பஸ், அது சென்றடையும் ஜோன்வில்லே நகருக்கு 6 மைல் முன்னதாக இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்து நிகழ்ந்த போது, சாலையும், பருவ நிலையும் நன்றாகத்தான் இருந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். பஸ் பிரேக் பிடிக்காமல் இருந்திருக்கலாம் என்றும், இருப்பினும் விபத்துக்கான உடனடிக் காரணம் தெரியவில்லை என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.
லாகூர் அருகே சர்ச்களில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்: 14 பேர் பலி
லாகூர்: பாகிஸ்தானில் கிறிஸ்தவ சர்ச்களில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளனர். 75க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை சர்ச்களில் கிறிஸ்துவர்களை மையப்படுத்தி இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. பாகிஸ்தானில் லாகூர் அருகே உள்ள யுகானாபாத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான கிறிஸ்துவர்கள் வசிக்கிறார்கள். இங்குள்ள கத்தோலிக்க சர்ச்சிலும், கிறிஸ்து சர்ச்சிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது தாலிபன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் இருவ
ர் இந்த சர்ச்களை குறி வைத்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 14 பேர் உடல் சிதறி பலியாயினர். இத்தகவலை அங்குள்ள ஊடகம் தெரிவித்துள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்பட 75க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். லாகூர் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டுவெடித்ததும் பீதி அடைந்த பொதுமக்கள் உயிரைக் காத்துக் கொள்ள தப்பி ஓடினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மூச்சுத் திணறினர். இதனிடையே வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமான ஒரு இளைஞரை ஆத்திரமடைந்த சிலர் அடித்துக் கொன்றனர். அவரது உடலை தீ வைத்து எரித்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் சிறுபான்மை கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 43 பேர் காரைக்கால் வந்தனர்
காரைக்கால்: இலங்கைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட காரைக்கால் மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் 43 பேர் நேற்று மாலை காரைக்கால் வந்து சேர்ந்தனர். பிப்.26,27-ல் நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 86 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். அவர்களின் 10 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் மோடியின் இலங்கைப் பயணத்தை முன்னிட்டு, கைதான மீனவர்கள் அனைவரையும் அதிபர் சிறிசேனா உத்தரவுப்படி, இலங்கை அரசு விடுவித்தது. அவர்களில் நெடுந்தீவு அருகே பிடிபட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள், பருத்தித்துறை நீதிமன்றத்தால் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் 43 பேர் நேற்று காலை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மீனவர்களை 2 கப்பல்கள் மூலம் இந்திய கடற்படையினர் நேற்று மாலை காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு அழைத்து வந்து தமிழக, காரைக்கால் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மீனவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 43 மீனவர்கள் மார்ச் 17-க்குள் காரைக்காலுக்கு வந்து சேருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
என் இடுப்பில் கை வைத்தார்- கடித்தேன்: காங்கிரஸ் உறுப்பினரைக் கடித்த கம்யூனிஸ்ட் உறுப்பினர்
திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் ஆனபோது, ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பெரும் பிரச்னை வெடித்தது. இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டு களேபரம் நிகழ்ந்தது அப்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவதாசன் நாயரை கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஜமீலா பிரகாசம் கடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள சட்டசமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை கேரள நிதி அமைச்சர் கே.எம்.மாணி தாக்கல் செய்தார். அப்போது எதிர்க் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜமீலா பிரகாசம் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. கே.சிவதாசன் நாயரை கடித்துவிட்டார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. நான் முதல்வர் உம்மன் சாண்டியை பாதுகாக்க அவர் அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது, ஜமீலா திடீர் என என்னைக் கடித்துவிட்டார் என்று சிவதாசன் நாயர் தெரிவித்தார். ஆனால், இந்தச் சம்பவம் பற்றி ஜமீலா தெரிவித்தபோது, எம்.எல்.ஏ. தனது ஒரு கையால் பின்னால் இருந்து என் கையை முறுக்கினார். மறு கையை என் இடுப்பில் வைத்தார். பின்னர், என் பின்னால் இருந்தபடி, முழங்காலால் என்னை நிமிட்டித் தள்ளினார். யார் என்று தெரியாமல் நானும் அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தேன். அங்கே சிவதாசன் நாயர் இருந்தார். நான், அவரிடம் என்னை விட்டுவிடுங்கள் இல்லை என்றால் கடித்து விடுவேன் என்றேன். முடிந்தால் கடித்துப் பாருங்கள் என்றார் அவர். அதனால்தான் கடித்தேன். நான் முதல்வரை தொடக்கூட இல்லை என்றார். இந்நிலையில், சட்டப்பேரவையில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து பேரவைத் தலைவரிடம் ஜமீலா புகார் அளித்துள்ளார். https://www.youtube.com/watch?v=UZJzKCnTO-g
கணவர் கொடுமைப் படுத்துகிறார்: நடிகை ரதி போலீஸில் புகார்
மும்பை: தனது கணவர் அனில் தன்னைக் கொடுமைப் படுத்துவதாக முன்னாள் நடிகை ரதி போலீஸில் புகார் அளித்துள்ளார். மும்பை காவல் துறை ஆனையர் அலுவலகத்துக்கு வந்த நடிகை ரதி தனது கணவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், என் கணவர் என்னை அடித்துத் துன்புறுத்துகிறார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்துகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். அவரது புகார் குறித்து கருத்து தெரிவித்த துணை ஆணையர் எஸ்.ஜெயகுமார், ரதியின் புகாரின் பேரில் அனில் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்றார் நடிகை ரதி, புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர். இப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான அவர் ரஜினியுடன் முரட்டுக் காளை உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகர் கமல் ஹாஸனுடன் உல்லாசப்பறவை உள்பட சில படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் ஹிந்தி திரையுலகம் சென்ற அவர் 1985ம் ஆண்டு அனில் விர்வானி என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். அவரது மகன் தனுஜ் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
ராஜபட்சவை மோடி சந்தித்தது தமிழர்களுக்கு செய்த துரோகம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: தமிழர்களை அழித்த ராஜபக்சேவை மோடி சந்தித்தது தமிழர்களுக்கு செய்த துரோகம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சுற்றுப் பயணத்தை மேற்கொண்டது குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ளன. 1987–ல் இந்திய–இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொழும்பு சென்றார். அப்போது அதிபர் ஜெயவர்த்தனாவோடு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாகத்தான் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரே தமிழ் தாயகப் பகுதி உருவாக்கப்பட்டது. அப்படி உருவான பகுதியின் இடைக்கால நிர்வாக கவுன்சிலின் முதல்–அமைச்சராக வரதராஜ பெருமாள் தேர்வு செய்யப்பட்டார். சிங்கள மொழிக்கு இணையாக தமிழும் ஆட்சிமொழி என்ற தகுதி பெற்றது. ஒப்பந்தப்படி, முதலில் ஒப்புக்காக ஆயுதங்களை ஒப்படைத்த விடுதலைப் புலிகள் பொருந்தாதக் காரணங்களைக் கூறி மீண்டும் ஆயுதமேந்தி இந்திய அமைதி காக்கும் படை மீது போர் தொடுத்தனர். அதன் விளைவாக ஒப்பந்தத்தின் செயல்பாடுகள் தடைப்பட்டது. ஆனால், இந்திய பிரதமர் வலியுறுத்தலின் பேரில் இலங்கை நாடாளுமன்றத்தில் அதே ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்ட உரிமைகளை உறுதி செய்யும் வகையில் செய்யப்பட்டதுதான் 13–வது அரசமைப்புச் சட்டத் திருத்தம். அதுதான் இன்றைய இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை தமிழர்களுக்கு இருக்கிற ஒரே பாதுகாப்புக் கவசம். அதன் அடிப்படையில் தான் அதிகாரப் பகிர்வு நடைபெற வேண்டும். ஆனால், அது நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்த அன்றைய பிரதமர் ராஜபக்சே அதை செயலுக்குக் கொண்டு வர எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இந்திய அரசு பலமுறை வலியுறுத்தியும், அதை அசட்டையுடன் புறந்தள்ளியது அவரது பேரினவாத ஆணவப் போக்கையே வெளிப்படுத்தியது. இலங்கை தமிழர்களுக்கு எதிராக ஆணவ அரசியல் நடத்திய ராஜபக்சேவும், நரேந்திர மோடியும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதற்கு பல கருத்தொற்றுமைகள் உள்ளன. பெரும்பான்மையினரை, சிறுபான்மையினருக்கு எதிராக அணி திரட்டி ஆதரவை பெருக்குவதுதான் இவர்களது செயல்முறை திட்டம். இவர் மதத்தின் பேரால் செய்கிறார். அவர் இனத்தின் பேரால் செய்கிறார். இவர்கள் இருவரும் நேற்று உதவியாளர்கள் துணையில்லாமல் தனிமையில் சந்தித்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார்கள். அதுவும் இந்த சந்திப்பு இந்திய அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது என செய்திகள் கூறுகின்றன. இந்த சந்திப்புக்கு 2 நாட்களுக்கு முன்னால், ராஜபக்சே அளித்த பேட்டி ஒன்றில், ‘‘தமது தேர்தல் தோல்விக்கு ‘‘ரா’’ இந்திய உளவுத்துறைதான் முழுக்காரணம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அமைப்பு சதி செய்து, எனக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் வெற்றி பெற்றுள்ளது’’ என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ராஜபக்சே கூறிய குற்றச்சாட்டு மூலம் இந்தியாவின் பாதுகாப்பையே கண்காணித்து உறுதி செய்கிற உளவுத்துறையையே களங்கப்படுத்தி, இழிவுபடுத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை இந்தியத் தரப்பிலிருந்து எவரும் கடுமையான முறையில் மறுக்கவோ, ஆட்சேபனையோ தெரிவிக்க வில்லை. ராஜபக்சேவுக்கு எதிர்த்துக் கருத்துக் கூறுவதில் இந்திய அரசுக்கு என்ன தயக்கம். நரேந்திர மோடியும், ராஜபக்சேவும் நெருக்கமான நண்பர்கள் என்பது தான் காரணமா? இதை விட இந்தியாவிற்கு தலைகுனிவும், அவமானமும் வேறு ஏதாவது இருக்க முடியுமா? 125 கோடி மக்கள் கொண்ட இந்திய நாட்டின் உளவுத்துறை அமைப்பையே, அண்டையில் உள்ள 2 கோடி மக்கள் வாழ்கிற இலங்கை நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே கொச்சைப்படுத்திப் பேச எங்கேயிருந்து வந்தது துணிச்சல்? இதைக் கண்டித்திருக்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி அவரோடு தனிமையில் கூடிக் குலாவுவது ஏன்? அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே, ராஜபக்சே வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக் கூறியவர் தான் நரேந்திர மோடி. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை தோற்கடித்தது அங்கே வாழ்கிற 25 லட்சம் தமிழ் பேசுகிற மக்களின் வாக்குகள் தான். இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, உடமைகளை, உரிமைகளை பறித்த ராஜபக்சேவை, நரேந்திர மோடி ஆதரிப்பது ஏன்? அரவணைப்பது ஏன்? முன்னாள் அதிபர் ராஜபக்சே, இந்தியாவின் எதிரி, சீனாவின் நண்பர். இலங்கையில் வாழ்கிற தமிழர்களின் ஒட்டு மொத்த எதிரி. அங்கே வாழ்கிற தமிழர்களுக்கு எதிராக கொடிய அரசியலை நடத்தி இலங்கை மக்களால் தேர்தலில் வீழ்த்தப்பட்டு பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ராஜபக்சேவை, நரேந்திர மோடி தாங்கி பிடிப்பதன் ரகசியம் என்ன? இதைவிட தமிழர்களுக்கு செய்கிற துரோகம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

