தெலுங்கு சினிமா உலகில், பிரபல சினிமா தயாரிப்பாளரும், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான தக்குபடி ராமா நாயுடு புற்றுநோய் பாதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78.
கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்: நீக்கப்பட்ட பீகார் முன்னாள் அமைச்சர்
பாட்னா: எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று, பீகார் அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டவருமான நரேந்திர சிங் புகார் கூறியுள்ளார். மேலும் அவர் மாஞ்சி அரசுக்கு 140 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவித்தார். முன்னதாக, மாஞ்சி அமைச்சரவையில் இருந்து விலகுமாறு கட்சி இட்ட கட்டளையை இவர் மறுத்திருந்தார். மாஞ்சி அமைச்சரவையில் நீடித்த நிலையில், கட்சிக்கு சீரழிவு ஏற்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டில், கட்சித் தலைவர் சரத் யாதவ், இவர் உள்ளிட்ட 7 அமைச்சர்களை கட்சியில் இருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.
கொள்கை முடிவுகள் எடுக்க மாஞ்சி அரசுக்கு நீதிமன்றம் அனுமதி
பாட்னா: பீகாரில் அரசியல் சிக்கலில் உள்ள ஜிதன் ராம் மாஞ்சியின் அரசு, கொள்கை முடிவுகளை எடுக்கலாம் என பாட்னா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, கொள்கை முடிவுகள் எதையும் எடுப்பதில் மாஞ்சி அரசுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் அந்த உத்தரவை விலக்கிக் கொண்டுள்ளது நீதிமன்றம். மேலும், மாஞ்சி அரசு எத்தகைய கொள்கை முடிவுகளையும் எடுத்துக் கொள்ளலாம் என்றும், ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்த பிறகே அதனை செயல்படுத்த வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
கர்நாடக அணை தொடர்பாக பிரதமருக்கு கடிதம்: தேமுதிக உறுப்பினருக்கு முதல்வர் பதில்
சென்னை: காவிரி விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று தேமுதிக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் தேமுதிக எம்.எல்.ஏ., பார்த்திபன் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காவிரியில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக பிரதமருக்கும், மத்திய நீர்பாசனத் துறைக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல், மத்திய தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட மாட்டோம் என கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது என்று கூறினார்.
அதிமுக அரசின் ஊழல்களை விசாரிக்க ஆணையம் தேவை: தமிழக ஆளுநரிடம் பாமக மனு
சென்னை: அதிமுக ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்களை விசாரிக்க நீதிபதி தலைமையில் ஆணையம் தேவை என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவிடம் பாமக மனு கொடுத்துள்ளது. பாமக நிறுவுனர் ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அவரை நேற்று சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில்…. கிரானைட் கொள்ளை தொடர்பாக மதுரையில் விசாரணை நடத்தி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு அரசு நிர்வாகம் ஆதரவளிக்க மறுக்கிறது. கிரானைட் கொள்ளை ஊழலில் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் கடந்த 9 மாதங்களில் 4.45 டன் எடையுள்ள தாதுக்களை ஏற்றுமதி செய்துள்ளது இதனால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆற்று மணல் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ரூ.188 கோடி மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மின்வெட்டால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தரம் ஆகியவை குறைந்துள்ளன. இதற்கு மின்துறையில் உள்ள ஊழலே காரணம். மின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் ரூ. 4,510 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுமான மற்றும் கட்டட அனுமதி வழங்குவதில் ஊழல், பருப்பு கொள்முதலில் ஊழல், ஆவின் பால் ஊழல், அரசுத்துறை ஒப்பந்தங்களில் ஊழல் என ஏராளமான ஊழல்கள் உள்ளன. இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் விளக்கம் கேட்க வேண்டும். அவரது பதில் திருப்தி அளிக்காவிட்டால், அது தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்.
- என்று கோரப்பட்டுள்ளது.
அரசியல் என் நீண்ட நாள் ஆசை: ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்
சென்னை: தான் புதிதாக அரசியலில் தற்போது இறங்கியது ஏன்? என்பது குறித்து நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘தமிழ் மாநிலக் கட்சி’யில் நேற்று தன்னை இணைத்துக் கொண்ட பவர் ஸ்டார் சீனிவாசன், அக்கட்சியின் கலைத்துறைப் பிரிவின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திடீர் அரசியல் பிரவேசம் ஏன் என்பது குறித்து ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “ஆமாம்… நான் அரசியலில் இறங்கியிருப்பது உண்மை. கலைத்துறையில் சேவை புரிந்து வருகிறேன். அரசியலில் இறங்கலாம் என்பது என் நீண்ட நாள் ஆசை. தற்போது வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து தமிழ் மாநிலக் கட்சி தொடங்கியிருக்கிறார்கள். அக்கட்சியின் தலைவர் கனகராஜ் எனது நண்பர். ஆகவே, அக்கட்சியில் இணைந்துள்ளேன்” என்று பதிலளித்துள்ளார்.
ஒரு நாளைக்கு 90 ஆயிரம் டிவிட்கள்: ஐ.எஸ்.ஐ.எஸ். பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராகிறது
வாஷிங்டன்: உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளுக்கு பல வகையிலும் போர்த் தந்திரங்களைக் கையாண்டு அமெரிக்கா பதிலடி கொடுத்து வருகிறது. ஒபாமாவின் நிர்வாகத்துக்கு இது பெரும் தலைவலியாகவும் உருவெடுத்துள்ளது. ஆனால், ஆயுத ரீதியான நேரடி போர்த் தந்திரங்களைக் காட்டிலும் இப்போது ஒபாமா நிர்வாகம் பெரும் சிக்கலில் திளைப்பது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மற்றும் அதன் ஆதரவாளர்களின் தீவிர பிரசாரம்தான். இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள், மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வலைத்தளங்கள் மூலம் தீவிர பிரசாரத்தை உலகம் முழுவதும் மேற்கொள்கின்றனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவர்களின் செயல்பாடுகள் அதி தீவிரமாக உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 90 ஆயிரம் டிவிட்கள் அவர்களால் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த அளவுக்கு மிக அதிக டிவிட்களையும், அவர்களின் நடவடிக்கைகளையும் தனித்தனியாக கண்காணித்து அவர்களின் செயல்பாடுகளை ஆராய்வது மிக கடினமான பணி என்கின்றனர் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பினர். ஈராக்கில் அதிக தீவிரத்துடன் செயல்படும் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பினர், சிரியாவில் தங்கள் கைகளை ஓரளவு விரிவாக்கியுள்ளனர். இந்நிலையில், இந்த பயங்கரவாதிகளின் பிரசாரங்களையும் நடவடிக்கைகளையும் சமூக தளங்கள், மற்றும் இணைய வெளியில் கண்காணிக்க செண்டர் ஃபார் ஸ்ட்ராடெஜிக் கவுண்டர் டெரரிசம் கம்யூனிகேஷன் என்ற ஒரு நிறுவனத்தை அமெரிக்க அமைப்பு நிறுவத் தீர்மானித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இஸ்லாமிக் ஸ்டேட் என்பது ஐ.எஸ்.ஐ.எஸ். அல்லது ஐ.எஸ்.ஐ.எல். என்ற பெயர்களில் இயங்கி வருவதும், அவர்களின் இலக்கு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் என்பதும், அமெரிக்க அரசால் கூட நெருங்கி நம்பிக்கை ஏற்படுத்த முடியாத இத்தகையவர்களிடம் தனது பிரசாரம் மூலம் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் நெருங்குவதும் இப்போது இந்த அமைப்பால் பலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு வேலைவாய்ப்பை பெருக்க மோடி வேண்டுகோள்
பெங்களூர் : நாட்டில் இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டுத் தயாரிப்பைப் பெருக்கி வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். மேலும், நாட்டின் பாதுகாப்புத்துறை, மேக் இன் இந்தியா திட்டத்தின் இதயம் போன்றது என்றார். இன்று பெங்கரூவில் துவங்கிய விமான கண்காட்சியை திறந்து வைத்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கர்நாடக மாநிலம் பெங்களூருல் 10வது ஆண்டு ஏரோ இந்தியா 2015 கண்காட்சி இன்று துவங்கி பிப்ரவரி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை இன்று துவக்கி வைத்த பிரதமர் மோடி, பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர், “இங்கு நடைபெறுவது இந்தியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சி. இது இந்தியாவின் புதிய நம்பிக்கையை மட்டுமல்ல, உலக நாடுகளின் கவனத்தையும் நம் பக்கம் திருப்பியுள்ளது. பாதுகாப்புத் துறையில், இறக்குமதியை 20 – 25 % வரை குறைத்தாலே நேரடியாக ஒரு லட்சம் முதல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை வேலைவாய்ப்புக்களை புதிதாக நம் ஏற்படுத்த முடியும். உள்நாட்டில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பை 40- 70 % வரை உயர்த்த வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் நமது பாதுகாப்பு துறையில் இருப்பு இரு மடங்காக அதிகரிக்கும். “வலிமையான பாதுகாப்புத்துறை இந்தியாவுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும். மேலும், இந்தியாவை வளப்படுத்தவும் செய்யும். பாதுகாப்பு துறை எப்போது தயார் நிலையில் இருப்பது மிக அவசியம். நமது பாதுகாப்பு படையை மேலும் நவீனமயமாக்க வேண்டும். வரும் காலத்தில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால் அதன் தேவைக்கு ஏற்ப நாமும் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உலக நாடுகளின் பாதுகாப்பு மையமாக இந்தியா திகழ்கிறது. ஆற்றல் வாய்ந்த ஒரு துறையாக இந்தியாவின் பாதுகாப்புத் துறையை மேம்படுத்த விரும்புகிறோம். பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு அமைப்புக்களின் பங்களிப்புடன் பாதுகாப்புத் துறையை புது வடிவில் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். – என்று மோடி பேசினார்.
Here are some more photos from Aero India 2015. pic.twitter.com/zD0xSilMsI — Narendra Modi (@narendramodi) February 18, 2015
Wonderful being at Aero India 2015. https://t.co/b0duyErwpc pic.twitter.com/BvIZSTimAi — Narendra Modi (@narendramodi) February 18, 2015
எங்கள் உறுப்பினரை கோமாளி என்பதா?: பேரவையில் கொதித்தெழுந்த திமுகவினர் வெளியேற்றம்
சென்னை: தி.மு.க. உறுப்பினர் அன்பழகனை கோமாளி என அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்து பேசினார். இதனால், கொதித்தெழுந்த திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதை அடுத்து, திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார் அவையின் துணைத் தலைவர். இதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியபோது, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்ததாகக் கூறினார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் திமுக உறுப்பினர் அன்பழகன். மேலும் அவர், பொள்ளாச்சி ஜெயராமனின் கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், முழக்கமிட்டபடி இருந்தார். இதை அடுத்து, திமுக உறுப்பினர் அன்பழகன் கோமாளி போல் செயல்படுகிறார் என்று கூறினார் பொள்ளாச்சி ஜெயராமன். அவரின் இந்தக் கருத்தால் மிகவும் ஆத்திரம் அடைந்த திமுக உறுப்பினர்கள், இந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். அப்போது, கோமாளி என்ற வார்த்தை நீக்கத்தக்க வார்த்தைப் பட்டியலில் இல்லை என அவைத்தலைவர் தனபால் விளக்கம் அளித்தார். அவரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த திமுகவினர், அவைத்தலைவர் தனபாலின் இருக்கை அருகே விரைந்தனர். இதனால், திமுகவினரை வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு பி.தனபால் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அரசியலில் குதித்தார் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்: ஈ.வி.கே.எஸ். முன்னிலையில்!
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென அரசியலில் குதித்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் அவர் தனது அரசியல் பிரவேசத்தைத் தொடங்கியுள்ளார். வழக்குரைஞர் பால் கனகராஜ் நடத்தி வரும் தமிழ் மாநிலக் கட்சியில் அவர் திடீரென இணைந்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் தொடங்கிய தமிழ் மாநில கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை ஏ.இ.கோவில் தெருவில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் திடீரென மேடை ஏறிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தான் தமிழ் மாநிலக் கட்சியில் இணைவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கட்சி நிறுவனர் ஆர்.சி.பால்கனகராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் இளங்கோவன் பேசியபோது…. ஆர்.சி.பால்கனகராஜ் ஆரம்பித்த தமிழ் மாநில கட்சியில் சட்டத்துறையை சார்ந்தவர்கள் மட்டுமின்றி ஏராளமான இளைஞர்களும் சேர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. ஊழலை ஒழிக்க முன்னெடுத்து நடத்தும் இவர்களது போராட்டத்துக்கு காங்கிரசின் ஆதரவு நிச்சயம் உண்டு… என்றார். தமிழ் மாநில கட்சியின் தேர்தல் சின்னமாக ‘சங்கு’ சின்னத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக கட்சி நிறுவனர் ஆர்.சி. பால் கனகராஜ் அறிவித்தார். [su_permalink id=”2480″][/su_permalink]

