ஈராக்கில் 45 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக்கின் மேற்கு மாகாணமான அன்பாரில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் இவ்வாறு எரித்துக் கொன்றவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட செய்தியில், போலீஸ் அதிகாரி கர்னல் காசிம் அல்-ஓபெய்டி தெரிவிக்கையில், 45 பேர் மேற்கு அல்-பாக்தாதி நகரில் எரித்துக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அல்பு-ஒபிட் சன்னி பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர்கள், இவர்களில் போலீசாரும் அடங்குவர் என்றார். ஒவ்வொரு நாளும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வெறிச்செயல்கள் அதிகரித்து வருவது, உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்பார் மாகாணத்தில் 80 % பகுதி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடிக்குள் வந்துவிட்டது. அமெரிக்கப் படையைச் சேர்ந்த வீரர்கள் இந்தப் பகுதியில், ஈராக் படைப்பிரிவுக்கும் ஈராக் ராணுவத்தின் துணைப் படைப்பிரிவுகளுக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர். [su_youtube url=”https://youtu.be/Wzf_E9B1UUE”]
45 பேர் உயிருடன் எரித்துக் கொலை: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெறிச்செயல்
லிங்கா பட நஷ்ட விவகாரம்: தியேட்டர்கள் முன் பிச்சை எடுக்கும் போராட்ட தேதி நாளை அறிவிப்பு
லிங்கா பட நஷ்ட விவகாரம் தொடர்பாக தியேட்டர்கள்முன் பிச்சை எடுக்கும் போராட்ட தேதி நாளை அறிவிக்கப் படுமென்று விநியோகஸ்தர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தெரிவித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், லிங்கா படத்தின் நஷ்ட ஈடு தொடர்பாக உண்மை நிலை என்ன என்பதைத் தெரிவிக்கும் வகையில் விநியோகஸ்தர்கள் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப் படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிக்கை:
சர்ச்சைக்குள்ளான மோடியின் கோட் சூட் ஏலம்: ரூ. 1 கோடிக்குக் கேட்ட தொழிலதிபர்
சூரத்: பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த பெரும் சர்ச்சைக்கு உள்ளான ரூ.10 லட்சம் மதிப்பு என்று சொல்லப்பட்ட கோட் சூட் இன்று ஏலத்துக்கு வந்தது. ரூ. 10 லட்சம் மதிப்புள்ளதாகக் கூறப்பட்ட அந்த கோட் சூட்டை ரூ. 1 கோடிக்கு ஏலம் கேட்டார் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர். முன்னதாக ரூ. 51 லட்சத்துக்கு ராஜுபாய் அகர்வால் என்ற பாஜகவைச் சேர்ந்த ஒருவர் ஏலம் கேட்டார். ஆனால், சுரேஷ் அகர்வால் அதை விட இரண்டு மடங்குக்கு ஏலம் கேட்டார்.
தனக்கு அன்பளிப்பாக வழங்கப் பட்ட சுமார் 450 பொருட்களை ஏலத்தில் விட்டு, அரசு கஜானாவில் நிதியைச் சேர்க்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்தார். அதன்படி இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் கலந்துகொண்ட சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் அகர்வால் ரூ. 1 கோடிக்கு மோடியின் கோட் சூட்டை ஏலம் கேட்டார். தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அண்மையில் நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது, சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரவேற்றபோது, மோடி அணிந்திருந்த கோட் சூட் பெரிதும் பேசப்பட்டது. அவரது பெயர் பொறிக்கப்பட்ட அந்த கோட்டின் விலை, ரூ. 10 லட்சம் மதிப்பு இருக்கும் என்று பிரசாரம் செய்யப்பட்டது. பிரதமர் இந்த அளவுக்கு விலை உயர்ந்த ஒரு கோட் சூட் அணியலாமா என்று பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு விலை உயர்ந்த கோட் சூட்டை பிரதமர் அணியலாமா என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் அதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த பிரசாரம் தில்லி சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தது. பாஜக தோல்விக்கு அதுவும் ஒரு காரணம் என்று இப்போது விமர்சிக்கப் பட்டு வருகிறது குறிப்பிடத் தக்கது.
விஷ மீன் தாக்கி காயமடைந்த தமிழக மீனவரை இலங்கை கடற்படை காப்பாற்றி அனுப்பி வைத்தது
ராமேஸ்வரம்: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது விஷ மீனின் கொடுக்கு தாக்கி தமிழக மீனவர் காயமடைந்தார். அவரை மீட்ட இலங்கைக் கடற்படையினர் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றி பின்னர் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறீசேனா அதிபர் ஆன பின்னர் இலங்கைக் கடற்படையினரின் போக்கு மாறியிருப்பதாக மீனவர்கள் மத்தியில் பேசப்படுகிறது. அதற்கு ஏற்றார்ப் போல், நேற்று முதல் முறையாக தமிழக மீனவரை மனிதாபிமானத்துடன் இலங்கைக் கடற்படையினர் அணுகியுள்ளனர். நேற்று ராமேஸ்வரம் கடலோரப் பகுதியை சேர்ந்த மீனவர் குபேந்திரன் இந்தியா- இலங்கைக்கு இடைப்பட்ட கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது, அவர் பிடித்த மீன்களில் ஒன்று விஷக் கொடுக்கினால் குபேந்திரனை தாக்கியது. இதில் அவர் மயங்கி விழுந்தார். அவர் தனியாக படகில் மயங்கிக் கிடப்பதை ரோந்து சென்ற இலங்கைக் கடற்படையினர் கவனித்தனர். அவரது உடலில் தைத்திருந்த மீனின் விஷ முள்ளை அகற்றிய இலங்கைக் கடற்படையினர், அவருக்கு விஷ முறிவு மருந்துடன் கூடிய குளுக்கோஸ் ஏற்றி, சுயநினைவுக்குத் திரும்பிய பின்னர் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்தனர்.
உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்: கேஜ்ரிவாலுக்கு கிரண் பேடி அறிவுரை
புதுதில்லி: உடல் நிலையை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று கேஜ்ரிவாலிடம் கிரண் பேடி அறிவுரை கூறினார். ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் இணைந்து வேலை செய்த அரவிந்த் கேஜ்ரிவாலும் கிரண் பேடியும் தில்லி சட்டசபைத் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டனர். கேஜ்ரிவால் முதல்வராகி விட்டார். கிரண் பேடி தோல்விக்கு தானே பொறுப்பு என்று கூறிவிட்டார். இந்நிலையில் நேற்று தில்லி காவல் ஆணையர் பீம் சைன் பஸ்சி அளித்த விருந்து நிகழ்ச்சியில், கேஜ்ரிவாலும், கிரண் பேடியும் அருகருகே அமர்ந்திருந்தனர். கிரண் பேடிக்கு கேஜ்ரிவால் வணக்கம் தெரிவித்தார். இருவரும் சற்று நேரம் உரையாடினர். அப்போது, கேஜ்ரிவாலிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்த கிரண் பேடி, உடல்நிலையை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
ஐ.நா. அறிக்கை தாக்கலாவது தாமதமாவதால் போர்க் குற்றவாளிகள் தப்ப இடமளித்துவிடக் கூடாது: அம்னெஸ்டி இண்டர்நேஷனல்
புது தில்லி: ஐ.நா. அறிக்கை அவையில் தாக்கலாவது தாமதமாவதால் போர்க் குற்றவாளிகள் தப்ப இடமளித்துவிடக் கூடாது என்று சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. இலங்கை அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து, இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணைகளின் மீதான அறிக்கை தாக்கல் செய்யப் படுவதை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு 6 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளது. இது குறித்து சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு ஆம்னெஸ்டி இன்டர்நேசனல்- இந்திய திட்ட இயக்குனர் ஷெமீர் பாபு விடுத்துள்ள அறிக்கையில்…. இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அறிக்கையால் தங்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கும் என பல காலமாக காத்திருந்து வந்துள்ளனர். கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்வதால் மேலும் பலமான அறிக்கை கிடைத்து, அதன்மூலம் தகுந்த நடவடிக்கையை எடுக்க புதிய இலங்கை அரசாங்கம் உறுதி மேற்கொண்டால் மட்டுமே தாமதிப்பது நியாயமானது. மேலும், போர்க் காலங்களில் நடைபெற்ற அத்துமீறல்களை இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு ஐ.நா.வுடன் இணைந்து ஆய்வுசெய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும். ஆனால், நீதி கிடைப்பதைத் தடுக்க நினைப்பவர்களால், சாட்சி கூற முன்வருபவர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பை அளிக்கவும் அவ்வாறு செய்பவர்களைக் கண்டறியவும் மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். – என்று கூறப்பட்டுள்ளது.
சோதனை என்ற பெயரில் தோனியை அலைக்கழித்த விமான நிலைய அதிகாரிகள்
அடிலெய்ட் சோதனை என்ற பெயரில் இந்திய அணி கேப்டன் தோனியை விமான நிலைய அதிகாரிகள் அலைக்கழித்துள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வரும் பிப்.22 ஆம் தேதி மெல்பேர்ன் நகரில் நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி விளையாடுகிறது. இதற்காக, மெல்போர்ன் செல்ல இந்திய அணி வீரர்கள் அடிலெய்டு விமான நிலையத்துக்கு வந்தனர். பொதுவாக விமான நிலையங்களில் வி.ஐ.பி-க்களுக்கு தனியாக சோதனை செய்வர். ஆனால், இந்திய அணி வீரர்கள், மற்ற பயணிகளைப் போல் வரிசையில் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது, இந்திய அணி தலைவர் தோனி பரிசோதனை இயந்திரத்துக்கு அனுப்பப்படும் ‘டிரே’யில் தனது உடைமைகளை வைத்து விட்டு, ‘மெட்டல் டிடெக்டர்’ வழியாக அதை எடுக்கச் சென்றார். அந்தக் கருவி அப்போது ஒலி எழுப்பியது. இதனால் அதிகாரிகள் அவரை அழைத்து உடைகள் முழுதும் சோதித்தனர். அதில் ஒன்றும் இல்லை. பின்னர் மீண்டும் மெட்டல் டிடெக்டர் வழியாக அவர் சென்ற போது மறுபடியும் ஒலி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சந்தேகத்தில் அதிகாரிகள் தோனியின் ஷூவை கழற்றிப் பார்த்தனர். ஷூவின் வடிவமைப்பில் இருந்த சிறிய அளவிலான உலோகத் தகடு காரணமாக மெட்டல் டிடெக்டர் ஒலி எழுப்புவது கண்டுபிடிக்கப்பட்டதால், அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்தச் சம்பவம் அங்கே பரபரப்பை எற்படுத்தியது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை 19ம் தேதி வரை ஒளிபரப்பலாம்: தூர்தர்ஷனுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
உலகக் கோப்பை போட்டிகளை வரும் 19-ம் தேதி வரை தொடர்ந்து ஒளிபரப்பலாம் என்று தூர்தர்ஷனுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, பிரசார் பாரதி இது தொடர்பாக மேல்முறையீட்டு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மேல் முறையீட்டுமனு விசாரணைக்கு வந்தது. அப்போது, தூர்தர்ஷன் கேபிள் ஆபரேட்டர் மூலம், போட்டிகளை ஒளிபரப்பினால் வருமான இழப்பு ஏற்படுவதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், தற்போதைய சூழலில் முடிவுகள் எடுத்தால் போட்டிகள் ஒளிபரப்புவதில் தடை ஏற்படும் என்றும் தனியார் சேனல்களும், தூர்தர்ஷனும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுக்குமாறும் கூறினர். இதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், வரும் 19-ம் தேதி வரை கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப தூர்தர்ஷனுக்கு அனுமதி அளித்தனர். மேலும், புதிய சேனல் தொடங்கி, கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப முடியுமா என்பது குறித்து பதில் அளிக்குமாறும் பிரசார் பாரதிக்கு உத்தரவிட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பிப்.25 முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம்
புதுதில்லி: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பிப்.25 முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர். இந்த 4 நாட்கள் வேலை நிறுத்தம் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும், இதனால் வங்கியின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கும் என்றும் பொதுத்துறை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் முன்கூட்டியே தெரிவித்துள்ளன. இருப்பினும், வங்கி சேவைகள் தடையின்றி இயன்ற அளவில் தொடர நடவடிக்கை எடுப்பதாகவும் வங்கிகள் தெரிவித்துள்ளன. மார்ச் 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலைநிறுத்தத்தையும் சேர்த்து மொத்தம் 5 நாட்களுக்கு வங்கிகள் முடங்கும் அபாயம் உள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில், கூட்டமைப்பினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் 24-ந்தேதி வரை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்தது. இருப்பினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப் படாததால், வரும் பிப்.25-ந் தேதி முதல் 4 நாட்களுக்கு இந்தியா முழுவதும் வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்தத் தகவலை இந்திய வங்கிகள் சங்கத்துக்கும், மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 16-ம் தேதிக்குள் ஊதிய உயர்வு தொடர்பான உடன்பாடு ஏற்படவில்லை என்றால் மார்ச் 16-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய நேரிடும் என்றும் வங்கிகளின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்து ராஷ்டிரம் குறித்து ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் 6 கேள்விகள்: இந்த்ரேஷ் குமாரை சந்தித்த இஸ்லாமிய மதகுரு
கான்பூர்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த இந்த்ரேஷ் குமாரைச் சந்தித்த முஸ்லிம் மதகுரு அவரிடம் 6 கேள்விகள் எழுப்பினார். இதனை அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் சன்னி உலமா கவுன்சில் பொதுச் செயலாளர் முகமது சலீஸ் செவ்வாய்க்கிழமை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்தது…. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரசாரகரும், மூத்த நிர்வாகியுமான இந்திரேஷ்ஜியை நாங்கள் ஒரு தூதுக் குழுவாகச் சென்று சந்தித்துப் பேசினோம். அப்போது அவரிடம் நாங்கள் 6 கேள்விகள் எழுப்பினோம். அந்தக் கேள்விகளுக்கு அவரிடம் அப்போது பதில்கள் இல்லை. நாங்கள் எழுப்பிய அந்த 6 கேள்விகள்:
- இந்தியாவை ஆர்.எஸ்.எஸ்., ஒரு இந்து நாடாக கருதுகிறதா?
- இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கு ஒரு வடிவத்தை ஆர்.எஸ்.எஸ். தயாரித்திருக்கிறதா?
- இந்து நாடு, இந்து மத நூல்களின்படி அமையுமா அல்லது ஆர்.எஸ்.எஸ். புதிய சித்தாத்தங்களை வகுத்திருக்கிறதா?
- மத மாற்றத்தை விரும்புகிறீர்களா?
- எந்த மாதிரியான தேசப்பற்றினை முஸ்லிம்களிடமிருந்து ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது?
- இஸ்லாமிய சமயத்தை ஆர்.எஸ்.எஸ். எப்படி பார்க்கிறது?
சுமார் 90 நிமிடம் நாங்கள் நடத்திய சந்திப்பின்போது, நாங்கள் ஒரு மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்றும், அந்த மாநாட்டில் நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிப்போம் என்றும் அவர் கூறினார். ஓர் அறைக்குள் இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க முடியாதபோது, மாநாட்டில் நீங்கள் எப்படி பதில் அளிப்பீர்கள்? என்று கேட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

