Home Blog Page 6312

மதுரையில் லஞ்சம் கேட்ட ஆவண காப்பக ஊழியர் கைது

மதுரை : மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவண காப்பக நகல் பிரிவில் உதவியாளர், முதுநிலை வரைவாளராகப் பணியாற்றி வருபவர் அந்தோணிச்சாமி. இவர் அனுப்பானடியைச் சேர்ந்த ஒருவரிடம் லஞ்சம் கேட்டாராம். இந்நிலையில், இன்று அவர் மீது கொடுக்கப்பட்ட லஞ்சப்புகாரை அடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

குன்னூர் அருகே இருவர் விஷம் குடித்து தற்கொலை

ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த ஆசிப், நீலு என்ற தம்பதி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுகவினர் வன்முறை: விஜயகாந்த் கண்டனம்

vijayakanth ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வன்முறை குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அவரது கட்சி நிர்வாகிகளுடனும், தொண்டர்களுடன் வீதி வீதியாக வாக்கு சேகரிக்க சென்ற போது, ஆளும் அதிமுக கட்சியை சேர்ந்த சிலர் வன்முறையை கையில் எடுத்து அனைவரையும் தாக்கி உள்ளனர் அதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மற்றும் அந்த கட்சியினரும் ஆளும்கட்சியால் தாக்கப்பட்டுள்ளனர். இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான செயலாகும் இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இடைத்தேர்தல் என்றாலே ஓட்டுக்கு பணம், வேட்டி, சேலை, மது, பிரியாணி வழங்குதல் என்று இலவசங்களை வாரி வழங்கி, ஏற்கனவே ஆட்சி செய்த திமுகவும், இப்பொழுது ஆட்சி செய்யும் அதிமுகவும், தேர்தலையும், ஜனநாயகத்தையும், பண நாயகத்தின் மூலமும், ஆட்சி அதிகாரத்தின் மூலமும் கேலிக் கூத்தாக்கி வருகின்றன. இந்த லட்சணத்தில் தேர்தல் நடப்பதால் மக்களுக்கு தேர்தல் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் முற்றிலும் நம்பிக்கை இல்லாத நிலை உருவாகி உள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடந்திட, ஊழல் வாதிகளின் மீதும், வன்முறையாளர்கள் மீதும், இரும்புக் கரம் கொண்டு அடக்க தேவையான கடுமையான தேர்தல் விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அமல்படுத்த வேண்டும். இல்லை என்றால் நம் தலைவர்கள் போராடி வாங்கி தந்த சுதந்திரமும், ஜனநாயகமும் வீணாகிவிடும். மேலும் காவல் துறையினர் வன்முறையை கையில் எடுத்த, ஆளும் அதிமுகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும். வன்முறையின் மூலம் பாதிக்கபட்டவர்களுக்கு சம்பந்தபட்டவர்களிடம் இருந்து உடனடியாக இழப்பீடு பெற்றுத்தர தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய, சட்டத்தை கையில் வைத்துள்ள காவல்துறை, ஆளும் கட்சியினரின் ஏவல் துறையாக மாறிந்து காலத்தின் கொடுமை என்று தான் சொல்ல வேண்டும். மாற்றம் ஒன்று தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு. ஊழலுக்கு எதிராக ஒட்டு மொத்த சமூகமும் ஒன்று சேர்ந்து தமிழகத்தில் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை மலர செய்வோம். ஜனநாயகத்தை நிலை நாட்டுவோம். -என்று கூறியுள்ளார்.

எம்.ஆர்.எப். தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காண முன்வரவேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் … எம்.ஆர்.எப். தொழிற்சங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான ஊதிய உயர்வு ஒப்ந்த பேச்சுவர்த்தை மற்றும் சமரச பேச்சுவர்த்தை முறிவு ஏற்பட்டு, வழக்கு தொழிற் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. இந்pலையில் நிர்வாகம் பழிவாங்கும் உணர்வுடன் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதுடன், தொழிலாளர்களின் பணி பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கின்றது. எம்.ஆர்.எப். நிர்வாகம் தொழிலாளர் நல ஆணையரின் அறிவுகைளை ஏற்க மறுக்கிறது ; தொழிலாளர் நலச் சட்டங்களை அப்ட்டமாக மீறி வருகிறது ; தொழிலாளர்கள் மீது நியாயமற்ற முறையில் ஊதிய வெட்டு, தற்காலிக வேலை நீக்கம், பணி நீக்கம் செய்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் தொழிற்சாலையின் தொழில் அமைதி மற்றும் தொழில் உறவுக்கு ஊறு எனவே எம்.ஆர்.எப். நிர்வாகத்தின் நேர்மையற்ற தொழில் நடவடிக்கைகளை கண்டித்தும், தொழிலாளர் விரோத நிர்வாகத்தின் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கேரியும், எம்.ஆர்.எப். தொழிற்சங்க கட்டிடத்தில் சங்க நிர்வாகிகள் தோழர் இராமச்சந்திரன் மற்றும் தோழர் கே.எஸ். வெங்கடெஷ் காலவரையற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தை 2.2.2015 முதல் மேற்கொண்டு வருகின்றனர். தொழிலாளர் நலச் சட்டங்களை எம்.ஆர்.எப். நிர்வாகம் காலில் போட்டு மிதித்து அப்ட்டமான தொழிலாளர் விரோதப்போக்கை கையாண்டு வருகிறது. ஊதிய உயர்வு ஒப்ந்தம் 6.7.2013 அன்றுடன் முடிவடைந்து, புதிய ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தைகளில் முடிவு எட்டப்டாத நிலையில் தற்போது தொழில் தீர்பாயத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தொழிலாளர் மீது நியாயமற்ற முறையில் ஊதிய வெட்டு, தற்காலிக வேலை நீக்கம், பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எம்.ஆர்.எப். தொழிலாளர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கான முத்தரப்பு பேச்சுவர்த்தைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

  • என்று கூறியுள்ளார்.

நாய்க்கு மது கொடுத்ததை கண்டித்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை!

கோவை: நாய்க்கு மது கொடுத்ததைக் கண்டித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானல் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் பிரதீப் அலெக்ஸ்சாண்டர். தனியார் பள்ளி தாளாளரான இவர் வீட்டில், மதுரை கொடிமங்கலத்தை சேர்ந்த பாண்டி செல்வி (25) என்பவர் 3 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாண்டி செல்வி வீட்டில் தனியாக இருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளது. சம்பவத்தின்போது, பாண்டி செல்வி போட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அப்போது, 2 பேர் தப்பி ஓட, ஒருவர் மட்டும் போதை தலைக்கேறிய நிலையில் கிடந்துள்ளார். அவரைப் பிடித்து கொடைக்கானல் போலீசில் அக்கம் பக்கத்தினர் ஒப்படைத்துள்ளனர். வழக்கு பதிவு செய்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், மதுரை நரிமேட்டை சேர்ந்த கேசவன் மகன் சம்பத்குமார் (32) என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடியவர்கள் அவரது நண்பர்களான சிவகங்கை மாவட்டம் லாடனேந்தலை சேர்ந்த ஜெகதீசபாண்டி, சென்னையை சேர்ந்த சக்திவேல் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து சம்பத்குமார் கொடுத்த தகவலின்படி தப்பி ஓடிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், போலீசாரிடம் சம்பத்குமார் கொடுத்த வாக்குமூலத்தில், ”நான் பியர்சோழா ரோட்டில் தனியார் காட்டேஜில் வேலை பார்த்து வந்தேன். மேலும், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறை எடுத்து கொடுக்கும் வேலையும் பார்த்து வருகிறேன். என்னை தேடி எனது நண்பர்கள் அடிக்கடி கொடைக்கானல் வருவது வழக்கம். அதுபோல் கடந்த 6 ஆம் தேதி ஜெகதீசபாண்டியும், சக்திவேலும் வந்தனர். நாங்கள் 3 பேரும் காட்டேஜில் மது குடித்து கொண்டிருந்தோம். எங்கள் காட்டேஜ் அருகில் உள்ள பிரதீப் அலெக்ஸ்சாண்டரின் நாய் குரைத்து கொண்டே வந்தது. நாங்கள் அதற்கு மதுவும், பிரியாணியும் கொடுத்தோம். இதைப் பார்த்த பாண்டிச் செல்வி எங்களை திட்டிவிட்டு நாயை அழைத்துச் சென்றுவிட்டார். வீட்டிற்கு சென்ற பிறகும் கூட பாண்டி செல்வி எங்களை திட்டி கொண்டே இருந்தார். இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் மூன்று பேரும் அவரது வீட்டிற்குள் சென்றோம். ஆனால், எங்களை வீட்டிற்குள் விடாமல் அவர் கதவை அடைத்து கொண்டார். ஆனாலும் கதவை தள்ளிக் கொண்டு 3 பேரும் உள்ளே சென்று பாண்டி செல்வியை சரமாரியாக தாக்கினோம். அப்படியும் எங்களுக்கு ஆத்திரம் தீராததால், அவரது ஆடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்தோம். அப்போது பாண்டி செல்வி சத்தம் போட்டார். உடனே விஷயம் வெளியே தெரிய கூடாது என்பதற்காக அவரை கத்தியால் குத்தினோம். இதில், ரத்த வெள்ளத்தில் பாண்டி செல்வி அதே இடத்தில் இறந்து போனார். உடனே என்னுடன் வந்தவர்கள் தப்பியோடி விட்டனர். நானும் தப்ப வெளியே வந்தபோது அக்கம்பக்கத்தினர், போதையில் இருந்த என்னை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்” என்று கூறி உள்ளார்.

பெண்கள் வாழத் தகுதியற்ற நிலையில் தமிழகம்: பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டதாக ராமதாஸ் குற்றச்சாட்டு

ramadossசென்னை: பெண்கள் வாழத் தகுதியற்ற நிலையில் தமிழகம் மாறி வருகிறது. இங்கே பாலியல் குற்றங்கள் 22% அதிகரித்துள்ளன என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 22 விழுக்காடு அதிகரித்திருப்பதாக மாநில குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெண்களை போற்றும் மண்ணான தமிழகம் படிப்படியாக பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறி வருவது பெரும் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. தமிழ்நாடு குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி கடந்த ஆண்டில் 1126 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். இது கடந்த 2013 ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 923 குற்றங்களை விட 22% அதிகமாகும். கடந்த ஆண்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களில் 655 பேர் சிறுமிகள் என்பது கூடுதல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கும் விஷயமாகும். தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்களில் தான் பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்றுள்ளன. சென்னையில் மட்டும் 104 பெண்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் 74 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆறாம் வகுப்பு மாணவி கடந்த டிசம்பர் மாதத்தில் அவருடன் ஒரே பள்ளியில் பயிலும் மாணவனால் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும், கடந்த ஜூலை மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் கல்லூரி மாணவி ஒருவரை 4 பேர் காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் தமிழகத்தில் பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு நிலவுகிறது என்பதற்கு உதாரணமாகும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதலே தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டில் 677 ஆக இருந்த பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டில் சுமார் 10% அதிகரித்து 737 ஆக உயர்ந்தது. 2013 ஆம் ஆண்டில் 26% அதிகரித்து 923 ஆக இருந்தது. 2014 ஆம் ஆண்டில் மேலும் 22% அதிகரித்து 1126 என்ற உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அதாவது அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 67 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலங்கள் என்று விமர்சிக்கப்படும் மேற்குவங்கம், பிகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கூட பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒரு பெண் முதலமைச்சராக இருந்த காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம் ஆகும். பாலியல் வன்கொடுமைகள் இந்த அளவுக்கு அதிகரித்திருப்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும். கடந்த 2012 ஆம் ஆண்டு இறுதியில் தலைநகர் தில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு மரணம் அடைந்த போது, தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக 13  அம்சத் திட்டத்தை 01.01.2013 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அவற்றில் ஒன்று கூட நடைமுறைப்படுத்தப் படவில்லை. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு தான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உமா மகேஸ்வரி என்ற மென்பொருள் வல்லுனர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமைகள் உட்பட அனைத்துக் குற்றங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது மது தான். பெரும்பாலான குற்றங்கள் மது போதையில் தான் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறேன். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை. ‘ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்’ என்று பாடிய பாரதி பிறந்த மண்ணான தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான பகுதியாக திகழ்வதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். இதை உணர்ந்து அதிக எண்ணிக்கையில் பெண் காவலர்களை நியமிப்பது, பெண்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், இதற்கெல்லாம் மேலாக மதுக்கடைகளை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

வாகனங்களில் ஐஎன்டி நம்பர் பிளேட் பொருத்தினால் அபராதம்

சென்னை: வாகனங்களில் ஐ.என்.டி. (IND) நம்பர் பிளேட் பொருத்தினால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அனைத்து வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு பதிவு எண் (ஐ.என்.டி.) நம்பர் பிளேட்டுகளை பொருத்த மத்திய அரசு கடந்த 2011ஆம் ஆண்ட உத்தரவிட்டது. இந்த நம்பர் பிளேட்டில், எழுத்து, எண் வடிவங்கள் ஒரே சீராகவும், வாகன இன்ஜின் எண், வாகன உரிமையாளர்கள் விவரங்கள் அடங்கிய, ‘ஹாலோகிராம்’ முத்திரை இடப்பட்டிருக்கும். மத்திய அரசின் உத்தரவையடுத்து பல்வேறு மாநிலங்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஐ.என்.டி. நம்பர் பிளேட் இன்னும் அமலுக்கு வரவில்லை. இருப்பினும், சிலர் தங்களது வாகனங்களில் போலியான ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை பொருத்தியுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக விசாரிக்குமாறு கோவை காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதை அடுத்து, ”தமிழ்நாடு முழுவதும் ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை உபயோகிகக்கூடாது என தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற நம்பர் பிளேட்டுகளை அகற்றிவிட்டு, பழைய நடைமுறைப்படியான நம்பர் பிளேட்டுகளை பொருத்தவும் அறுத்தப்பட்டுள்ளது. மேலும், திங்கட்கிழமை இன்று முதல் ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை பொருத்தியிருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் புகார்

tamilisai-soundararajan சென்னை: தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சக்சேனாவை கோட்டையில் சந்தித்து புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது அ.தி.மு.க.வினர் நேற்று கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எங்கள் வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அமைதியாக நடந்து கொண்டிருந்த பிரசாரத்தை சீர்குலைக்கும் வகையில் அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த சம்பவம் போலீசாரின் அனுமதியுடன்தான் நடந்திருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை அங்கிருந்து மாற்ற வேண்டும். அங்கு ஜனநாயகம், பணநாயகமாக மாறி இப்போது அராஜகமாக உருவெடுத்துள்ளது. 9 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அந்த பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கி விட்டு புதுபட்டியல் வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை நீக்கப்படவில்லை. அவர்கள் அராஜகம் செய்வதற்காகவே தொகுதியில் முகாமிட்டுள்ளனர். திருப்திகரமாக திருத்தப்பட்ட பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். அவ்வாறு திருத்திய பட்டியலை வெளியிட முடியாவிட்டால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். சட்டம்–ஒழுங்கு கெட்டு ஒரு அசாதாரண நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. பொதுத்தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏற்கனவே பணப்பட்டுவாடா முடிந்து விட்டது. இப்போதுதான் நடவடிக்கை எடுக்க தொடங்கி இருக்கிறார்கள். இது காலதாமதமான நடவடிக்கை. சொத்து குவிப்பு வழக்கில் முதல்–அமைச்சர் தண்டனை பெற்றதால் இடைத்தேர்தல் வந்திருக்கிறது. பொதுமக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். – என்றார்.

வரி செலுத்தாத வி.ஐ.பி.க்கள் பட்டியல்: சென்னை மாநகராட்சி வெளியீடு

சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் சில அரசியல் வி.ஐ.பி.க்கள் இருக்கின்றனர். அவர்களின் பெயர், முகவரி, செலுத்த வேண்டிய தொகை என அனைத்து விவரங்களையும் சென்னை மாநகராட்சி இணைய தளத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டது. அதோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸும் விநியோகிக்கப்பட்டது. இருப்பினும் மாநகராட்சியின் நடவடிக்கைகளை சிலர் கண்டுகொள்ளவில்லை. இந்த பட்டியலில் முதலில் இடம் பிடித்து இருப்பவர் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசியா. இவருக்கு சொந்தமான ஓட்டல் தி.நகரில் உள்ளது. இந்த ஓட்டல் 4 கோடியே 21 லட்சத்து 75 ஆயிரத்து 19 ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது. இந்த தொகையை செலுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்ததும் ஒரு கோடி ரூபாயை மட்டும் செலுத்தி விட்டு மீதமுள்ள தொகைக்கு மாநகராட்சியிடம் மேல்முறையீடு செய்திருக்கிறது ஓட்டல் நிர்வாகம். தி.மு.க. பிரமுகரைப் போல மேலும் சில வி.ஐ.பி.க்களின் பெயரும் இந்த பட்டியலில் உள்ளது. மாநகராட்சி வெளியிட்ட பட்டியலில் அடுத்த இடத்தில் ‘கிவ்ராஜ் டெக் பார்க் பிரைவெட் லிமிடெட்’ உள்ளது. இந்த நிறுவனம் 2 கோடியே 99 லட்சத்து 33 ஆயிரத்து 679 வரி பாக்கி வைத்துள்ளது. இதே போன்று ரமணி ஓட்டல் லிமிடெட் ராமி மாலுக்கு ஒரு கோடியே 15 லட்சத்து 55 ஆயிரத்து 811 ரூபாயும், ஆயிரம் விளக்கில் உள்ள டிஎம்பி அன்வர் அலி, 98 லட்சத்து 94 ஆயிரத்து 652 ரூபாயும், மீனம்பாக்கம், நியூ கார்கோ காம்பளக்ஸிக்கு 57 லட்சத்து 72 ஆயிரத்து 494 ரூபாயும், மயிலாப்பூர் சென்னை சிட்டி சென்டர் 38 லட்சத்து 18 ஆயிரத்து 149 ரூபாயும்,  சி.எஸ்.ஐ. டயோசீசன் 23 லட்சத்து 60 ஆயிரத்து 492 ரூபாயும், தி.நகரில் உள்ள சைரன் வேளாங்கண்ணி சீனியர் மேல்நிலைப்பள்ளி 13 லட்சத்து 34 ஆயிரத்து 60 ரூபாயும், ஆயிரம் விளக்கில் உள்ள பார்க் ஓட்டல் லிமிடெட் 11 லட்சத்து 7 ஆயிரத்து 356 ரூபாயும் உள்பட 182 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 26 கோடியே 57 லட்சத்து 73 ஆயிரத்து 139 ரூபாய் வரி பாக்கி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவியின் தலைமுடியைக் கத்திரித்த ஆசிரியர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலையில் பள்ளி மாணவியின் தலைமுடியை கத்திரித்த ஆசிரியைகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருவண்ணாமலை-போளூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில், கருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 5) அன்று சுருட்டையாக இருந்த தலைமுடிக்கு “கிளிப்’ போட்டு வந்திருந்த அந்த மாணவியை பள்ளி ஆசிரியை சுமதி சக மாணவர்கள் முன்னிலையில் கண்டித்துள்ளார். பின்னர், மாணவியின் தலைமுடியையும் ஆசிரியை கத்திரித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார். அவர்கள் மாணவியை சமாதானப்படுத்தினர். இருப்பினும் அன்றைய தினம் இரவு மாணவி எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆபத்தான நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம், மாணவியின் தலை முடியைக் கத்திரித்தது தொடர்பாக பள்ளி ஆசிரியைகள் இருவரை பணியிடை நீக்கம் செய்தது.