Home Blog Page 6341

ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை!

malar_manam11 உன் ஒற்றைச் சொல் வாய்மொழிக்காய்… எத்தனை நாள் தவம் கிடந்தேன்! விருப்பத்தின் இருப்பைக் காட்ட விழியிரண்டால் ஊடுருவிப் பார்த்தேன்! உன்னைக் காணாத நாட்களிலும் என் நெஞ்சத்தில் நீ அமர்ந்து மஞ்சத்தின் ஏக்கம் விதைத்தாய்! இப்படியே நகர்ந்தன நாட்கள்! ஆனால்… இன்னும் எத்தனை நாட்கள்தான் இப்படி? கிட்டாதாயின் வெட்டென மற! – ஔவைப் பாட்டியின் அறிவுரை! கிட்டுவதாயின் சட்டென நினை! – மனசில் தோன்றிய முகவுரை! நீ… கிட்டுவாயா? கிட்டாமற் போவாயா? உன்னை உடனே மறக்கவா? இல்லை… நினைவிலேயே கொள்ளவா? இதையேனும் வாய் திறந்து சொல்வாயோ? இதமாகவோ; பதமாகவோ! இல்லை… இதயத்தில் இரும்பைக் காய்ச்சி உருக்கியேனும்… ஒரு வார்த்தை! ஒரே ஒரு வார்த்தை!

உறவெனத் தேடுபவனை உதறும் கலை!

thrishapic கலைகளின் தாய் அருகேயிருந்து அருள் புரிகின்றாள்… ஆனால் நீ … கேட்டுப் பெற்றதென்னவோ நடிப்புக் கலை மட்டுமே! நடிப்பென்றால் சிவாஜி கணேசன்! சிவாஜி என்றால் கட்டபொம்மன்! நீ என்ன மாமனா மச்சானா மானங்கெட்டவனே…! எனும் போது எத்தனை கைத்தட்டல்கள்! நீயும் கட்டபொம்மன் ஆனாய்… ஒருநாள்! உன் மீது நான் வைத்த பாசத்தை மோசமாக்கினாய்! என் கனிவுப் பார்வையை இழிவுபடுத்தினாய்! உன்னை நான் உரிமை கொண்டாட… உனக்குரியவள் நானில்லை என்றாய்! போகட்டும்..! ஆனால்… நான் என்ன உனக்கு மாமன் மகளா? இல்லையெனில்… உனக்கெனப் பிறந்தவளா…? ஏனிந்த ஆதிக்கம் என் மீது? நான்… எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ செல்லப் போகிறேன்… – என்றாய்! உன் ஒவ்வொரு சொல்லிலும் என் கன்னத்தில் எத்தனை கைத்தட்டல்கள்..? உறவாய் ஆன பின்னே… உடன் பிறந்த உறவுகளை வெட்டிவிடும் பெண்ணைப் பார்த்திருக்கிறேன்…! உரிமையாய்… உறவென ஆகத் துடிப்பவனையே வெட்டிவிட்டு நீ வேடிக்கை பார்க்கின்றாயே!

உன் வழியில் நானும் ஒரு பொய்யனாக!

நீ உரைப்பது பொய்… உன்னில் வெளிப்படுவதும் பொய்… உன் முகப்பூச்சும் நகப்பூச்சும் உதட்டுப்பூச்சும் மேனியின் வாசனைப்பூச்சும்.. எல்லாம் பொய்மையின் வெளிப்பாடு! எத்தனை பொய்கள் உன்னில் இருந்து… பெண்மையை நாடி நான் நின்றேன்.. பொய்மையைக் காட்டி நீ சென்றாய்! உண்மையைக் கேட்டு நான் நின்றேன்… ஊமையாய்க் காட்டி நகர்ந்து சென்றாய்… உன்னில்தான் எத்தனை பொய்கள்! அறிமுகத்துக்கு ஒரு பொய் அவசரத்துக்கு ஒரு பொய் ஆதரவு காட்டின் விலக்க ஒரு பொய் என் அன்பை மறுதலிக்க ஒரு பொய் என்னைப் புறக்கணிக்க ஒரு பொய் உன் ரகசியம் மறைக்க ஒரு பொய் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டேன்… ஆனால்.. நான் உன்னை விரும்பும் காரணம் இதுதான் என நீயே தீர்மானித்து… உன் உறவையே பொய் சொல்லி மறுத்தாயே! சகிக்க முடியவில்லை சகி! பொய்களெல்லாம் ஒன்றுகூடி உன் உள்ளத்தில்தான் மகாநாடு நடக்கிறதோ? உன் உதடுகள் அதன் தீர்மானத்தை முன்மொழிகின்றனவோ? ஆனால் … பொய்யுரைப்பதில்… உன் வழிக்கு நானும் வந்தேன்! உனக்கு மட்டும்தான் பொய்கள் பிரவாகம் எடுக்குமோ? எனக்கும் பொய் பூக்கும்! நானும் பொய்யுரைப்பேன்… எத்தனை குறைகள் உன்னில் இருந்தும் உனை உயர்த்திச் சொல்லும் கவிஞன் என்பதாக! rose

உன் நினைவு; என் உணவு!

malar_manam ஞாயிற்றுக் கிழமை! சோம்பல் தினம்! வாரத்தில் ஒரு நாளேனும்..?! ம்ஹும்.. இயலவில்லை! எனக்காக… எத்தனை வேலைகள் காத்திருப்பில்! ஆனால்…நானோ உனக்காக… எத்தனை வேளைகள் காத்திருப்பில்! ஆதவன் உச்சியைக் கடந்து மேற்கில் சாய்கிறான்..! அமிலம் வயிற்றில் சுரந்து அகோரப்பசி என்கிறது! ஆனாலும்… நான் இன்னும் இடம் விட்டு எழவில்லை வலம் ஒன்றும் செய்யவில்லை! சமைக்கத் தோன்றவில்லை… சாப்பிடவும் தோன்றவில்லை… தலைசாய்க்கவும் எண்ணமில்லை! என்ன செய்வது..? அலை மோதும் உன் நினைவுகள் அவை போதும் என் உணவுகள்..!

தோஷம் உனக்கே பிரம்ம தேவா!

Thirupattur-brahma-1 அடேய் பிரம்ம தேவா… எந்த நேரத்திலடா எம்மை இங்கு அனுப்பி வைத்தாய்? உன் படைப்புகளின் ஜனனக் குறிப்பு கண்டு ஒருவன் சொல்கிறான்… கர்ப்ப தோஷம்… ஒருவன் சொல்கிறான்… சர்ப்ப தோஷம்! இன்னும்… எத்தனை எத்தனை தோஷங்கள்? செவ்வாய் தோஷமாம்.. நாக தோஷமாம்! மாங்கல்ய தோஷமாம்! மங்கள தோஷமாம்! சயன தோஷமாம் சங்கட தோஷமாம்! பிதுர் தோஷமாம்… புத்ர தோஷமாம்! அட… இன்னும் சிலரின் உருவத்தை உருக்குலைத்து குற்றுயிராய்க் கிடத்துகிறாய்… தோஷங்கள் இல்லையென்று சிரித்துச் சொன்ன சோசியன் பொடிவைத்துச் சொல்கிறான்… உங்களுக்கு திருஷ்டி தோஷம்! அடேய்.. இது திருஷ்டி தோஷம் இல்லையடா.. உன் பார்வைக் குறைபாடு! உன் படைப்புத் திறனின் குறைபாடு… எங்கள் பணியில் குறைபாடு இருந்தால் பணியிடை நீக்கம் செய்து பழியை விலக்கிக் கொள்ளும் மேலதிகாரிகள் சிலர் உண்டு! ஆனால்… உன் அதிகாரிகளும் உதவாக்கரையாய்ப் போய்விட்டார்களோ!? அடேய் பிரம்ம தேவா.. திருஷ்டி தோஷம் எமக்கு இல்லையடா.. உமக்கே..! அது உம் சிருஷ்டி தோஷம்!

ரிங்டோன் ரீங்காரம்!

smartphone உலகம் வேகமாக மாறுகிறது நாம் மட்டும் அப்படியே! உலகம் ஸ்மார்ட்டாக மாறுகிறது… பழமைவாதத்தின் புகலிடமாய் நீயும் நானும்! எத்தனை நாளுக்கு இப்படி? முடிவெடுத்தோம் ஒருநாள்! இப்போது… உன் கையிலும் என் கையிலும் ஸ்மார்ட் போன்கள்! சொல்லில் முகம் கண்டு அழகை அசைபோட்டு ரசிக்கும் நிலை போயாச்சு! செல்லில் முகம் பதித்து ரகசியமாய் முத்தம் பதித்து உன் அண்மையை உணர்தலாச்சு! நம் பிம்பங்களை நமக்குள் பகிர்ந்து கொண்டோம்! உன் முகம் என் செல்லில்! என் முகம் உன் செல்லில்! திரையில் பதித்துக் கொண்டோம்… திரை ஒளிரும் நேரும் தீர்க்கமாய் கண்களின் சந்திப்பு! முகத்தின் லட்சணங்கள் முழுதாய்ப் பரிமாற்றம்! ஆனால்.. என்ன ஆயிற்று உனக்கு? செல்லை மவுனத்தில் ஆழ்த்தி என்னை கொல்லப் பார்க்கின்றாய்? ஏனடி? உன் முகம் காண ஏங்கி ஏங்கி… எத்தனை முறை உன் புரொஃபைல் பிக்சருக்கே போவது..? உன்னிடம் பேசி என்னுயிர் தேற்ற உன்னை அழைத்தால் எடுப்பது யார்? உன் செல்லக் குரல் அழைப்பைக் கேட்க என் செல்பேசியும் ஏங்குது பார்..! எவர் கொடுத்த யோசனையோ? என் செல் அழைப்பு வந்தால் அதை செல்லாத அழைப்பாக்கு என்று?! இப்போதெல்லாம் என் அழைப்பை உன் செல்பேசி மறுக்குது பார்..! உனக்கும் எனக்கும் இடையில் மூக்கை நுழைப்பது யார்..! எத்தனை நாள் காத்திருந்தேன் உன் பெயரை உரிமையுடன் உச்சரிக்க! உரிமையை நீ தரவில்லை உறவையும் நீ பெறவில்லை! ஆனாலும்… என் செல்லப் பெண் உன் பெயர் வரும்படியாய் பாடல் வரி தேடித்தேடி… என் செல்ல போனில் உன் அழைப்புக்கான ரிங்டோனாய் வைத்திருந்தேன்! வைத்ததுதான் மிச்சம்! ஆசை தீர அதைக் கேட்கும் மகிழ்ச்சி வரவேயில்லை! ஆனால் இப்போது… அழகாய் காதல் வரியுடன் உன் பேரும் சேர்ந்தே ஒலிக்கிறது… என் இன்னொரு செல் அழைப்புக்கும் அந்தப் பாடல் ரிங்டோனை வைத்துக் கொண்டேன் ~ உன் பெயரைக் கேட்கும் ஆவலில் எனக்கு நானே அழைப்பு விடுத்துக் கொண்டு!

உன் மீதான என் விருப்பும் வெறுப்பும்!

jadai1 உன்னை நான் விரும்பத் தொடங்கினேன்! எப்படியோ என் உள்ளம் புகுந்து என்னை அடிமை கொண்டாய்! தப்படி … இது என் தவிப்படி! பெண் மட்டும்தான் கருவைச் சுமப்பாள்? உலகம் சொல்லி வைக்கும்! பெண் மட்டும்தான் உயிரைச் சுமப்பாள்! உலகம் சொல்லி வைக்கும்! ஆனால்.. என் இதயத்தைக் கேட்டுப் பார்! உன் நினைவுக் கருவை நான் சுமக்கிறேன்! உன் உயிர் மூச்சை என்னில் சுமக்கிறேன்! சொல்லத்தான் மனம் துள்ளும் சொல்லவே ஆசை கொள்ளும்! அழகிற் சிவந்த முகம் காண அருகில் வந்தால்… கோபத்தில் சிவந்த முகம் கண்டு கோணித்தான் போகிறேன்! இனி ஓர் உலகம் இல்லை என எனக்குத் தந்தவள் நீ! தனி ஒளி இளமை காட்டி எனைத் தவிக்க வைத்தவள் நீ! அழகாகப் பின்னலிட்டு அங்குமிங்கும் ஆடும் ஜடை இடதும் வலதுமாய்ச் சுற்றி நீ காட்டும் கண்களின் ஜாடை அட… உன்னையே யோசித்து யோசித்து… என் முடி மட்டும் கொட்டவில்லை! கவிதையும்தான்! காற்றில் சாய்ந்தாடும் உன் கூந்தலில் கவலையிற் தோய்ந்த முகம் புதைத்து சோகம் மறக்கத்தான் ஆசை! குளிர் அதர இதழ் பதித்து உதிரச் சூட்டை உருக்குலைக்கத்தான் உள்ளத்தில் எழுந்த ஆசை! பின்னலெனும் சன்னல் விலக்கி உன் சங்குக் கழுத்தில் என் விரல் நர்த்தனம் புரியத்தான் ஆசை! துடிக்கும் ஆசைகள் ஆயிரம்தான்! ஆனால்… உன் உள்ளத்தின் விலாசம் தேடி இத்தனை நாள் அலைந்தும் காலம் கனியவில்லை! முகவரி தொலைந்து முதல்படியில் நிற்கின்றேன்! உன்னை நான் விரும்பக் கற்கவில்லை… இயல்பாய்ப் பூத்தது அது! ஆனால்… வெறுக்கக் கற்கவேண்டும்! முயற்சி செய்கின்றேன்… முடியவில்லை! என் பாசத்துக்குரியவர்களை என்னில் இருந்து பிரித்துவிடுகிறான் இறைவன்! என் தனிமை வரம் அப்படி! நீ நலமாய் வாழ என் பாசக் கருவூலத்துக்கு வெறுப்புப் பூட்டு போட வேண்டும்! உன்னை நான் வெறுக்கத் தொடங்குகிறேன்!

உள்ளம் : உனதும் எனதும்!

maruthiart உன் மனசைப் பார்த்தேன் காதல் வந்தது… சொல்லத்தான் எனக்கும் ஆசை! ஆனால்… உன் மனசைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை! உன் உள்ளப் பொலிவைக் காணும் ஆவலில் நாள்கள் கடந்து போயின… தாபத்தில் தவித்து நான் நிற்க கோபத்தில் முறைத்து கோணி நின்றாய்! உள்ளத்தை மறைத்து ஊடல் கொண்டாய்! பாரென்றெனைப் பார்க்க வைத்து வேறென்று நீ வேறாகிப் போனாய்! ஆனாலும்… உன் பொலிவான நிலா முகமும் ஊடுருவும் திராட்சைக் கண்களும் சரிவான சங்குக் கழுத்தும்தான் கவர்ந்திழுத்து கபளீகரம் செய்தன! நெற்றிமேல் கோடிட்ட நடு வகிடு இடை வரை நீளும் பின்னிய கூந்தல் புருவ மத்தியில் மின்னும் கருப்புப் பொட்டு நெற்றியில் ஒளிரும் குங்குமக் கீற்று இயற்கையின் திருஷ்டிப் பொட்டாய் மரு முகத்தில் ஒளிரும் ஒற்றைக் கீற்றாய் மூக்குத்தி புன்னகை பூக்கையில் குவியும் கன்னக்குழி சிரிக்கையில் பளீரிடும் பற்களின் வரிசை அடடா… இவை எல்லாம்தான் இந்த ஈர்ப்பின் அடித்தளமோ..? என் மனதில் உன் பிம்பம் அழகாய்ப் பதிவானதில் உன் தவறு எதுவுமில்லை… என் தவறும் எதுவுமில்லைதான்! இது இயற்கையின் சதி! உன்னில் விழுந்தது என் விதி! நமக்குள் ஒரு பரிவர்த்தனை யோகம் அறிவின் தெளிவை அளிக்கிறேன் நான்… அழகின் அமுதை அளிக்கிறாய் நீ! ஞானச் சூரியனாய் நான்… நிலவின் குளிர்ச்சியாய் நீ! என் ஒளி வாங்கி எதிரொளித்துப் பிரகாசிக்கிறாய்! உன்னாலே என் உள்ளம் ஒளி பொருந்தி நிற்கிறது! உள்ளத்தின் அன்பை உலகுக்குக் காட்டியபடி!

புறக்கணிப்பின் வலி உணராயோ?

white-eyes11 கோவைப் பழ உதட்டின் ஈர்ப்பு… கோவையாய்க் கிளம்பின சொற்கள்! விட்டுப் போய் விலகி நின்றாய்! விட்டு விட்டுக் கிளறும் எண்ணம்!


இது இயலாது என என்னால் கைவிடப்பட்ட வேலை! தடைப் பூட்டு தொங்கியது! உன் விழியோர வீச்சு அதைத் திறக்க வைத்தது! எல்லாம் காதலின் அபார வலிமைதான்! உணர்ந்து கொண்டேன்!


உன் மலர் விழிகளுடன் என் மலர்ந்த விழிகள் மோதிக் கலந்த போது… என் தேவைகள் தீர்ந்த நிறைவு! இனி வேண்டுவது எதுவும் இல்லை என்ற நினைப்பு.. ! அட.. நானும் காதல் வயப்பட்டிருந்தேன்!


எனக்குள்தான் எத்தனை எத்தனை கேள்விகள்… எத்தனை பிரார்த்தனைகள்! எல்லாவற்றுக்கும் கிடைத்தது ஒரே விடை ! கண்டு கொண்டேன் அதை! – உன் மீதான காதலின் வடிவாய்!


ஆனால்… ஆனால்… முதல் கோணல் முற்றும் கோணல்! கோலம் போடும் கை! கோணித்தான் போகிறது! காத்திருந்து காத்திருந்து.. என் வாழ்நாளில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்றபடியாய்… உன்னில் வயப்பட்டேன்..! ஆனால்.. வாழ்க்கை வண்டியில் பயணம் தொடங்க… முதல் கியர் போடும்போதே ப்ரெக்-டவுன் ஆனது என் துரதிர்ஷ்டம்தான்!


உன்னைச் சுற்றியே உலகை மறந்திருந்தேன் ~ உன்னை நெருங்கிய போதெல்லாம்… நீ இத்தனை நாளாய் என்னை முறைத்தாய்! கணிக்க இயலாதவனாய்.. என்னைப் புறக்கணித்தாய்! போதும் பெண்ணே போதும்! உன்னில் நான் விழுவதும் தன்னில் பின் எழுவதும்! இதோ… இனி என் முறை..! புறக்கணிப்பின் வலியை உன்னை உணரச் செய்கிறேன்! இனி நான் முறைத்துச் செல்வேன்! உன்னை முழுதாய்ப் புறக்கணிக்கிறேன்! இனி என் உலகம் என்னுள்ளேயே இருக்கட்டும்! என்னுள்ளேயே இயங்கட்டும்!

உன்னாலே பிடிக்கிறது ~ வாழ்க்கை!

painting அனுபவம் ஆயிரமல்ல.. ஒன்றே ஒன்றுதான்! உனைக் காணும் முன்… வாழ்க்கைப் பாதையின் வசந்தச் சுவடுகள்… பார்வையில் பட்டபின்… காதல் பாதையில் கசந்தச் சுவடுகள்… என் மீதான உன் அச்சம்! நன்றாய்த் தெரிகிறது! எனைக் கண்டால் ஏதோ வெளிப்பூச்சுக்காய் புன்னகைத்து வைக்கிறாய்! உன் மீதான என் நேசம்… நன்றாய்த் தெரிந்து கொள்! உனைக் காணாது இருக்கும் போதும் நான் உள்ளுக்குள்ளும் வெளியிலும் சிரித்துத் தொலைக்கிறேன்! நான் ஒருவனே..! ~ நம்பிக்கையின்றி வாழ்ந்திருந்தேன்- இலக்கு இதுவெனத் தெரியாமல்! உலகு பிடிக்கவில்லை… உற்றாரும் ஊரும்… எனக்காய் இல்லை! தனி ஒருவனாய்… முடங்கிக் கிடந்தேன் ! உனைக் கண்ட பின்னே… உனக்காகவே வாழத் தொடங்கினேன்! எனக்காக நீ இருக்கிறாய் என்ற எண்ணம் என்னுள்! இப்போது – உலகு பிடிக்கிறது; உலகில் வாழப் பிடிக்கிறது; உன்னால் வாழ்க்கை பிடிக்கிறது; இப்போது நீயே என் உலகமாய்..! இதோ… அயராமல் சுற்றுகிறேன்!