அனுபவம் ஆயிரமல்ல.. ஒன்றே ஒன்றுதான்! உனைக் காணும் முன்… வாழ்க்கைப் பாதையின் வசந்தச் சுவடுகள்… பார்வையில் பட்டபின்… காதல் பாதையில் கசந்தச் சுவடுகள்… என் மீதான உன் அச்சம்! நன்றாய்த் தெரிகிறது! எனைக் கண்டால் ஏதோ வெளிப்பூச்சுக்காய் புன்னகைத்து வைக்கிறாய்! உன் மீதான என் நேசம்… நன்றாய்த் தெரிந்து கொள்! உனைக் காணாது இருக்கும் போதும் நான் உள்ளுக்குள்ளும் வெளியிலும் சிரித்துத் தொலைக்கிறேன்! நான் ஒருவனே..! ~ நம்பிக்கையின்றி வாழ்ந்திருந்தேன்- இலக்கு இதுவெனத் தெரியாமல்! உலகு பிடிக்கவில்லை… உற்றாரும் ஊரும்… எனக்காய் இல்லை! தனி ஒருவனாய்… முடங்கிக் கிடந்தேன் ! உனைக் கண்ட பின்னே… உனக்காகவே வாழத் தொடங்கினேன்! எனக்காக நீ இருக்கிறாய் என்ற எண்ணம் என்னுள்! இப்போது – உலகு பிடிக்கிறது; உலகில் வாழப் பிடிக்கிறது; உன்னால் வாழ்க்கை பிடிக்கிறது; இப்போது நீயே என் உலகமாய்..! இதோ… அயராமல் சுற்றுகிறேன்!
உன்னாலே பிடிக்கிறது ~ வாழ்க்கை!
காதல் கடந்து வந்த பாதை!
சிறு வயது முதல் எனக்குள்தான் எத்தனை எத்தனை ஆசைகள்?! எத்தனை ரசனைகள்? எத்தனை ஏக்கங்கள்? எல்லாம் உள்ளத்தின் ஓர் ஓரத்தில் ஒடுங்கியே கிடந்தன… என்னவளாய் உன்னைக் கண்டு ஏக்கத்தை வெளியில் விட்டேன்! சேமிப்புக் கிடங்கில் அடங்கிக் கிடந்த ஆசை அம்புகள் ஒவ்வொன்றாய் வெளியில் சீறிப் பாய்கின்றன! பார் பெண்ணே…! பார்வையில் பட்ட பின்னே பாரங்கள் பட்டுப் போச்சு! உன் மீதான என் அன்பு… நான் கண்ட மேற்குத் தொடர்ச்சி மலையை விட உயரமானதுதான்! ஏறுவது எவ்வளவு கடினம்! எனக்கும் தெரியும்! ஆனால் அன்பே… உச்சிக்குச் சென்ற பின்தான் நான் ஏறிவந்த பாதையின் அழகு எனக்குத் தெரிகிறது! உன் காதலுக்காய் நான் கடந்து வந்த பாதையைப் போல்!
நோக்கும் திசையெலாம் நீயே~!
காதலுக்குக் கண் இல்லையாம்! சொல்பவர்கள் ரசனையின் எச்சம் அறியாதவர்கள்… ஆனால்… பார் பெண்ணே … நான் ரசனையின் உச்சம் கண்டவன்! உன் ரசிகனாய்… உன்னை என் கண்களால் உயிர்ப்புடன் விழுங்கியவனாய்! என் நாளின் அதிக பொழுதுகள்… உன் நினைவுகளுடன்! நின்றால்… என் பார்வையில் நீ வாசம் செய்கிறாய்! நடந்தால் என் பாதையில் நீயே உடன் வருகிறாய்! படுத்தாலும் என் போர்வையில் உன் வாசம் நாசி துளைக்கிறது! உன் மீது காதலுற்றவனாய் நான்… எனக்குத் தெரியும் உன் மீதான என் கனிவுப் பார்வையின் வீச்சு! என்னை வைத்தே உன்னைப் பார்த்துப் பார்த்து…! ஏனோ ஓர் ஆசை என்னுள்! உன்னை வைத்து உலகைப் பார்க்க! உன் அழகுக் கண்களை உள்ளத்தில் இருத்தினேன்.. உன் கண்களால் என் உலகைக் கண்டேன்! என்ன அற்புதம் பெண்ணே! உலகின் மூலை முடுக்கெல்லாம்.. திரும்பிய பக்கத்தில் எல்லாம்.. நான் காணும் ஒவ்வொன்றிலும் உன் கண்களே தெரிகிறதே! ஓ.. நான்… உன் கண்களின் வழியே காதலில் விழுந்தவன்!
ஆன புருவம்… அழகான வில்லென்று..!
வில்லினையொத்த புருவம்! உவமைக்கென அகப்பட்ட உயிர்ப் பொருள்! என் கவிதை வானின் கருப் பொருள்! ஓர் நாள்… காட்டைத் திருத்தி கழனி செய்து விளைத்த பயிர்போலே… புருவம் திருத்தி வந்தாய்! மென்னகை பூத்த முகத்தில் மெல்லிய புருவம்! அழகாய்த்தான் இருந்தது…! உவகையின் பொருட்டு உவமையின் பொருட்டு… உரிமையில் வினவினேன்… முறுவல் செய்தாய்… ‘இதெல்லாம் கூடவா கேட்பீங்க…?” ரசிக்கும் முன்னர் … முறைக்கவும் செய்தாய்! வில்லுக்கு விஜயனாம்! சொல்லுக்கு ராமனாம்! புராணம் பேசும்! வில்லெடுத்துச் செய்த செயலெலாம் கொலைத் தொழில்! ஒற்றை வில்லில் ஓராயிரம் கணைகள்.. மடிந்தனவும் ஆயிரமாயிரமாய்! ஆனால் பெண்ணே… பார்வைக்கு நீயே! என் கதை பேசும்! உன்னில் இரட்டை வில்… தாக்கிய இலக்கு ஒன்றே ஒன்று! ஆம் பெண்ணே… உன் புருவ வில்லில் இருந்து புறப்பட்ட பார்வைக் கணைகள்…. என் நெஞ்சைப் பதம் பார்த்து நிலத்தில் வீழ்த்தின! என்னடா மடிந்தாளா..? கேட்டவர்க்கெலாம் என் பதில்… மடிந்தவன் நானே! மரித்தவனும் நானே!
தகுதி காண் மதிப்பு என்?
விடியாத இரவுகள் விளங்காத தரவுகள் விலகாத துயரங்கள் விரும்பாத விசாரணைகள்! எனக்கு மட்டும் நிழல் கிரகங்களாய் நீண்டுகொண்டே உள்ளன… கண்ணிமைக்கும் பொழுதில்… இருள் சூழ விருப்பமில்லை! உன் முகத்தை எண்ணியே இமைப்பதை மறந்தேன்! உனைக் காணும் முன் என் உள்ளத்தில் வெற்றிடம்! உள்ளே புகுந்து கொண்டாய்… வெற்றிடம் விலகியது! நீயோ என்னில் அடைபடத் தயாரில்லை! எனக்கோ உன்னை வெளியேற்றத் தெரியவில்லை! தளும்பி நிற்கும் நீராய் உன் நினைவலைகள்…! வேதனையில் வெம்பிக் கசியுது கண்ணில் திரளும் நீரலைகள்! ஒருவழிப் பாதையில் இருவரின் பாதங்களும் ஒன்றாய் நடைபோடத்தான் ஓராயிரம் பிரார்த்தனைகள்! ஆனால் இன்னும்… ஒற்றையடிப் பாதையில்தான் எனது பயணம்! நாமிருவர் நடைபோட நாமின்னும் பாதை அமைக்கவில்லை! மங்கை உனைக் கண்ட நொடி மாலைசூடும் வேளை வந்ததென மயங்கித் தொலைத்தேன் நான்! இன்னும் மயக்கம் தெளியவில்லை! அன்றே… தயங்கித் தொலைத்தாய் நீ! இன்னும் தயக்கம் விலகவில்லை! ஒரு நாள்… ’இனியவளே’ என உனை ஸ்வீட்டி என்றழைத்தேன்! நீயோ இனி எவள்? என்றாகும்படி ஒப்பந்த ட்ரீட்டியை முறித்துப் போட்டாய்! உன்னை இனியவளாய் எண்ணியதென் நெஞ்சம்! அதற்குத் தகுதியானவளாய்… உன்னை நீ எண்ணவில்லையோ?
இதயத்தின் ஒளியாய் நீ!
கதிரவனின் வெளிச்சக் கீற்று கண்களில் விழுந்து காலையில் எனை எழுப்பும்! கவனத்தில் நீ எழுந்து காதலில் எனை எழுப்புவாய்! முதல் காதலாய் என்னில் முகிழ்த்தவள் நீ! உன்னைப் பற்றி அறிந்திராத நாட்கள் அவை..! உன் முகம் நோக்கும் முன்னே… பளீரென்று வெளிக் கிளம்பும் பற்பசை விளம்பரப் புன்னகை உனது! செயற்கைக்கோள் தொலைக்காட்சி வரவால் செயற்கையாய் மாறிப்போன கிராமங்களில் அற்றை நாள் நான் கண்ட அழகு உனது! கிராமங்களும் தொலைத்துவிட்ட அபூர்வமான அதிசயம் நீ! ரம்யா… அழகின் பெயராய்ச் சூட்டி அழகு பார்த்தேன் நான்! படிந்து நடப்பாயோ தெரியாது… ஆனால், படிய வாரிப் பின்னலிட்டு இடுப்பு வரை நீளும் கூந்தல்… பணிந்து நடப்பாயோ தெரியாது… ஆனால், நிலம் நோக்கி நடந்து செல்லும் அமைதியான அழகுப் பார்வை… பொக்கை வாய்ச் சிரிப்பில் குழந்தைக்கும் கிழவிக்கும் கவர்ச்சி கூடும்! ஆனால், குமரி நீயோ… கன்னக் குழிச் சிரிப்பில் கவனத்தைக் கட்டிவிட்டாய்! கன்னங்கள் இரண்டிலும் பாலைவன மணல்மேடாய்க் குவியும் சதை! உப்பிய கன்னத்தில் மேட்டைக் கரைத்து காற்று வரைந்த வரிகள் போலே குழியும் கதை! கன்னக் குழிகளுக்குப் போட்டியாய் கண்களும் களத்தில் இறங்கும் – இமைகளின் ஓரத்தில் இரண்டொரு கீற்றாய் வெளிப்பட்டு! உன் கன்னக் குழி கண்ட நொடி என் நெஞ்சத்தில் குழி விழுந்து நேரலையாய் அசைபோடும்! கண்கள் கொண்ட காட்சியால் கருத்தும் ஈர்க்கப் பட்டிருந்தது! ஆனால்… மனம் உன்னிடம் முட்டிமோதியதில் மயக்கம் எல்லாம் மடிந்து போனது! உண்மைதான்…. உன்னைப் பற்றி அறிந்திராத நாட்கள் அவை! உன் செயல்… காதலில் விழுந்தவள் என்பதை உணர்த்தியிருந்தது! காதற் போர்வையில் காயப் படுதலையே கண்டவன் நான்! என் மொழி உனக்குக் கசப்பாய்த்தான் இருந்தது! நானும் அறிந்திருந்தேன்..! ஆனாலும்… மருத்துவர் புகட்டும் மருந்தைப் போல்… இலக்கியக் காதல்களை எடுத்து இயம்பினேன்! ஒரு நாள்… “காதல் என்றால் உங்களுக்கு ஏன் இந்த வெறுப்பு?” நன்றாய்த்தான் கேட்டாய்..! காதல் என்றால் இதுவென அறியாது காலம் கடத்தி வந்தவன் நான்! சித்தாந்தங்களில் சிக்கித் தவித்தவன்… சிக்கல் என்றே சிக்கித் தவிர்த்தவன்! காதல் என்றால் வாழ்க்கைச் சிக்கல்; பெண் என்றால் மனத்தில் சங்கடம் பெண்ணிடம் மனத்தை செலுத்தாதே… எல்லாம்… அறிவுரைகள்! அறிவுரைகள்! ஆனால் பெண்ணே… உன்னைக் கண்ட பின்னர் தான் காதலின் சுவை அறிந்தேன் நான்! நீ… பெண்மையின் அண்மையை எனக்குக் காட்டி உனக்குள் என்னைக் கரைத்தவள்! உன்னையே நினைக்க வைத்து என்னை நானே மறக்க வைத்தவள்! காதலுக்கு எதிரியாய் இருந்த என்னை நண்பனாய் மாற்றி உன்னையே காதலிக்க வைத்தவள்! விழிகளில் ஏற்றி வைத்த விளக்கெனவே என் காதல்..! அடிக்கும் ஊடல் காற்றால் அவ்வப்போது அசைகிறது தீபம்! உயிர்க் காற்று சிதறடித்தாலும் என்னில் அது அணையாது! ஆனால் பெண்ணே… உன் வாழ்க்கைப் பாதையின் நோக்கத்தில் சில.. இப்போதுதான் புரிபடுகிறது! போகட்டும்…! நம் காதலும் நட்பும்… புன்னகையில் போட்டு வைத்த எழிற் கோலம்! மவுனப் போர்களாய் மழை மேகம் பொழிந்தாலும் அழியாத கோலம்! ஒரு ஜென்மம் போகட்டும்… மறு ஜென்மம் ஆகட்டும்… தொடரும் பந்தம்! துவங்கும் சொந்தம்! ஆம் பெண்ணே … ஆம்! நான்… காதலனாய்த் தோற்றுவிட்டேன்! காதலில்தான் வென்றுவிட்டேன்!
பின்னலில் என்னையும் பின்னிவிட்டாயோ?
அழகாய்ப் பூத்துச் சிரிக்கும் ரோஜா! தோட்டத்தில் கண்டு ரசித்தேன் ஜோரா! ஆனால் நீயோ… வீதிக்கு வந்து விற்பனைக்கு விரித்திருக்கும் பூக்களை விலைகொடுத்து வாங்கி விரல் நுனியில் வைத்திருப்பாய்… தோட்டத்தில் ஆயிரம் பூத்திருந்தாலும் தோற்றத்தால் உன்னையே பாத்திருந்தேன்! தோன்றத்தான் ஆசையில் பா திறந்தேன்! எத்தனை எத்தனை ரோஜாக்கள்! எல்லாம் அழகாய்த்தான் சிரித்தன… ஆனாலும் தலைகனத்தால் மேல் நோக்கி இல்லாமல் தலைசாய்ந்து எனைப் பார்ப்பாய்… உன் அழகுப் பார்வையால்… உன்னையே நாடியதென் மனம்! உன்னைப் போன்ற பெண் என் பார்வையில் இதுவரை பட்டதில்லை! உன்னைத் தவிர எவரும் பெண்ணாய் என்னில் படவில்லை ! முதுகுத்தண்டு நிமிர்ந்திருக்கும் தலை மட்டும் சாய்ந்திருக்கும்! நிலம் நோக்கி உன் முகம் நீளும்! எனை நோக்கி உன் மனம் தாவும்! உன் விழி திரை சுருக்கி ஓரத்தில் விரிந்து எனை நோக்கும்! எல்லாம் அழகான காட்சிகள்..! இடுப்புக்கும் கீழே அசைந்தாடும் பின்னல்! சரிசமமாய்க் கத்திரித்து செதுக்கப்பட்ட புல்வெளியாய் பின்னல் நுனி! ஒருபிடி முன்னே கொத்தாய் கட்டிவிடப்பட்ட ரப்பர் பேண்ட் முடிச்சு! இரு தோள் வரை நீளும் மல்லிகைப் பந்தல்! எல்லாம் ரசனையின் உச்சம்! ஆனால் என் கன்னிப் பூவே… மூன்றாய்ப் பிரித்து ஒன்றாய்க் கட்டிய உன் கூந்தலின் பின்னலில்… முக்காலமும் உன்னையே ஓர்மையில் நினைத்திருக்கும் என்னையும் சேர்த்துக் கட்டிவிட்டாயே!
கண்ணெரிச்சல் போன பின்னே..!
கணினித் திரையைக் கண்கொட்டாமல் பார்த்து… ஆண்டு பலவாச்சு; அதனாலே போச்சு~ கண்ணின் ஒளி! கண்ணெரிச்சல் காணா கணினித் திரையும் உண்டோ? காரணம் அறிந்த பின்னே கண்ணைக் காக்க கடும் முயற்சி! சிவிசி என… கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோமாம்! மருத்துவத்தின் புதிய சொல்லாட்சி! மருந்துகளின் வீரிய தன்னாட்சி! கணினித் திரைக்கு ஒரு திரை; கண் ஆடியில் ஒரு திரை! கணினித் திரை ஒளிவீச்சை திருப்பியனுப்பும் ஏற்பாடாம்! எல்லாம் இருந்தும் என்னே?! கண்ணெரிச்சல் காணா கணினித் திரைப் பணியும் உண்டோ? எத்தனை எத்தனை ஏற்பாடுகள்.. எத்தனை எத்தனை மருந்துகள்! எத்தனை எத்தனை செலவுகள்! வழி தெரியாது திண்டாடினேன்! கன்னி உந்தன் களங்கமிலா முகம் கண்டேன்! கணினித் திரையில் காட்சிப் படுத்தி விட்டேன். கண்ணுக்குக் குளிர்ச்சி… கருத்துக்கு நிறைவு! உன் மலர்ந்த முகம் என் மகிழ்ச்சி தினம்! இப்போதெல்லாம் கண்ணெரிச்சல் வருவதில்லை! ஆனால் பெண்ணே… நெஞ்செரிச்சல் வந்து நிலைகுலைய வைக்குதடி!
சமாதி நிலை: உனதும் எனதும்!
பெண்ணுக்குப் பேச்சே பிரதானம்! உலகம் சொல்லி வைக்கும் உண்மை நிலை! உன்னிலும் நான் கண்டேன் அந்த நிலை! செல்லும் செவியுமாய் ஒட்டிப் பிறந்த கர்ணிகள் போலே! உன்னிலும் நான் கண்டேன் அந்த நிலை! ‘செல்’லுக்கு ‘பில்’ கட்டுவது யாரோ? அதிசயித்துப் பேசும் உலகம்! உலகத்தோடு ஒட்ட ஒழுகும் ஒருத்தி நீ! வாய்ப் பேச்சை வரமாய் வாங்கி வந்த நீ என் முகம் கண்டால் மட்டும் இறுக மூடிக் கொண்டாய்! அதரத்தின் திறப்பைக் காட்டின் உதிரம் உறைந்து போகுமோ? தெள்ளத் தெளிவாய் நீ இருந்தாலும் தெள்ளத் தெளிவாய்ப் பிறக்காத சொற்கள் உன்னிடம்! உன் மழலை மொழிகேட்க என் மனசோ ஏங்கித் தவிக்கும்! ஒரு தினுசாய் ஒதுங்கிப் போவாய்… புறக்கணித்து என்னைக் கொல்வாய்! பேச வேண்டிய நேரத்தில் மௌனமாய் நோகடிப்பாய்! மௌனமாக வேண்டிய நேரத்தில் காயப்பேச்சால் சாகடிப்பாய்! உன் உதட்டு அசைவுக்காய்க் காத்திருந்து உயிர் உருகிக் கிடக்கையிலே… உன் சமாதி நிலை மௌனத்தால் ஒவ்வொரு முறையும் நான் சமாதிக்குள் முடங்கிப் போனேன்! மழைக்காலத்தில் துளிர்க்கும் புல்பூண்டாய் எனக்குள் நானே மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறேன்!
உன் தனிமையை ஏன் அளித்தாய் விநாயகா?
நிலவின் இருள் கவியும் நாலாம் நாளின் நாயகனே! விநாயகனே! ஆற்றோர அரச மரம்… அதில் ஓர் அலங்கார மேடை! ஆனை முகனாய் நீ அமர்ந்தாய்… ஆளரவம் அற்ற தனிமையிலே! பார்வதித் தாய் தன் மகவாய் பாருக்களித்தாளாம்..! தன் மனையைப் பாதுகாத்திட்டாளாம்! பாரதமே பேசுகிறது! உன்னைச் சுற்றிய எனக்கும் உன் தன்மையை, உன் தனிமையை… ஏன் அளித்தாய் நாயகனே? விநாயகனே! பார்வதி தாய் போலே பாரியாள் வேண்டும்..! அன்னையின் அரவணைப்பைப் போல் அகிலத்தில் ஏதும் கிட்டாது! உன் கதை உண்மை பல புகலும்… பிரம்மச்சரியத்தின் புகழுக்கு! ஆனால்… விநாயகா! அகிலத்தில் நாங்களெல்லாம் அரை நொடி வாழ்ந்துவிட்டு காலத்தின் பிடியில் கரைந்து போகக் கூடியவர்கள்! கல்லாய்ச் சமைந்து காலம் வென்று காத்திருப்பின் தன்மையைக் காட்டுபவர்கள் அல்லர்! அதனால்தானோ… உன்னை நினைத்து உயிர் கலக்கும் வேளையிலே… பெண்ணை நினைந்து உள்ளம் புழுங்க வைத்தாய்! காத்திருப்பின் கோலத்தில் கல்லும் கரைந்து போகும்… ஆனால் கல்லினும் வலிய அவள் நெஞ்சம் கரைந்து போகாது… என்னைக் கரைந்து போகச் செய்கிறதே!

