
சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைக் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதியில் தொடங்க இருப்பதாக தெரிகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை வரும் நவம்பர் மாதமே தொடங்கவுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
அதிமுக அமைச்சர்களை தொடர்ந்து விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன், அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். அதன்படி 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி மதுரையில் நடந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். முதலில் அதிமுகவை விமர்சித்து வந்த கமல்ஹாசன், அதன்பின்னர் திமுகவையும் விமர்சித்து தூள்கிளப்பினார்.

முதல்முறையாக மக்களவைத் தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யம், பெரும்பாலான இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. பல இடங்களில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. எதிர்பார்த்ததை விட அதிக ஆதரவு கிடைத்திருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி மக்கள் நீதி மய்யத்தில் கட்டமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் புதிய கட்டமைப்புகள் குறித்து விளக்கக் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 30) பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் நடைபெற்றது. இதில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் கலந்துகொண்டு பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகேந்திரன், “அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான பலம் மக்கள் நீதி மய்யத்திற்கு உள்ளது என்பதை மக்களவைத் தேர்தலில் நிரூபித்துள்ளோம்.

அடுத்த இலக்கு 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றுவதுதான். சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்டப் பிரச்சாரத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் நவம்பர் 7ஆம் தேதி தொடங்கவுள்ளார். தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்திற்காக பெரிய அளவிலான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.
மேலும், “மக்கள் நீதி மய்யம் கட்சிக்கென புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்குவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறோம். நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு தற்போது எடுக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு அதில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றும் மகேந்திரன் குறிப்பிட்டார்.

நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றே தனது முதற்கட்ட பிரச்சாரத்தை துவங்கவும் தீர்மானித்துள்ளார் கமல்ஹாசன்.