
குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார் நடிகர் விஜய். இதை அடுத்து, அவர் அரசியலுக்கு தயாராகிவிட்டார் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆசையை வெளியிட்டு வருகின்றனர்.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி – முரசொலி செல்வம் தம்பதியின் பேத்தியும் எழிலரசி – ஜோதிமணி ஆகியோரின் மகளுமான ஓவியாவுக்கும் தொழிலதிபர் ஜெயபிரகாஷ் – பவானி தம்பதி மகன் அக்கினீஸ்வரனுக்கும் நேற்று மாலை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும், நெருக்கமான விஐபி.,க்கள் மிகச் சிலரே அழைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய், மணமக்களை வாழ்த்தி உள்ளார். அப்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் விஜய்யும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தனர். உடன் துரை முருகனும் இருந்தார்.
இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்தப் படத்தை பகிர்வதுடன், விஜய் அரசியலுக்கு வர தயாராகி விட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆயினும், உதயநிதி எனும் அடுத்த தலைமுறை தலைவரை திமுக., தயாராக்கி வைத்திருப்பதால், ஸ்டாலினுடனான விஜய் சந்திப்பு அவருக்கு பாதகமானதுதான் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.



