
பூச்சிக் கொல்லி மருந்தின் அளவு அதிகரித்திருந்ததால், கேரளத்தில் ஆச்சி மசாலாவின் மிளகாய்ப் பொடிக்கு தடை விதிக்கப் பட்டதாக நேற்று செய்தி வெளியானது. இதை அடுத்து, சமூக வலைத்தளங்களில், இது குறித்து கிண்டலும் கேலியும் மீம்ஸ்களாக தூள் பறக்கிறது.
மேலும், மசாலா பொருள்கள் குறித்த விழிப்பு உணர்வு தகவல்களும் பலர் பதிவு செய்து வருகின்றனர். மிளகாய்த் தூள், மசா பொருள்களில் வண்டுகள் சேராமலும், கெட்டுப் போகாமலும் இருப்பதற்காக, பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிக அளவில் சேர்த்து அவற்றை விற்பனைக்கு விடுகின்றனர். பொதுவாக, பொட்டலமாக பிளாஸ்டிக் பாக்கெட்களில் விற்பனைக்கு வரும் சமையல் உணவுப் பொருள்கள் கெட்டுப் போகாமல் இருக்கவும், நீண்ட நாட்கள் அப்படியே இருக்கவும் இது போன்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் சேர்க்கப் படுவதாகக் கூறப் படுகிறது.
இது குறித்த மேலும் சில சமூக வலைத்தளக் கருத்துகள்…
பூச்சி மருந்து என்பது மெல்லக்கொல்லும் விஷம் மட்டுமே! அது உடனடியான இறப்பை ஏற்படுத்தாது. புற்றுநோய் கல்லீரல் பாதிப்பு, இரைப்பை வலி என்று வேறு மாதிரியான தீங்கை மெதுவாக ஏற்படுத்தும்.
நான் அததான சாப்பிடுறேன்; இப்போ நல்லாதான இருக்கேன் என்பது வீண் வாதம். அரசு நிர்ணயித்த அளவீட்டை தாண்டி மருந்து தெளிப்பது என்றுமே ஆபத்து தான். நீண்டநாள் கெடாமல் இருக்க இதுபோன்ற சில்லரை வேலைகளை பலரும் செய்வது தற்போது பெருகிவிட்டது. முடிந்தவரை இதுபோன்ற நிறுவன பாக்கெட் மசாலாக்களை தவிர்க்க பழகுங்கள்..
தெரியாமல் உண்டு இறப்பது வேறு; தெரிந்த பின்பும் இதை உண்பது மடத்தனம்… – என்று எச்சரிக்கின்றனர்.

எங்கள் வீட்டில் எந்த ஒரு பொடியும் வாங்குவதில்லை எப்பாவது உபயோகிக்கும் மசாலா பொடி தவிர… இனிமேல் இதுவும் நிறுத்தப்படும்… எல்லாமே வீட்டிலே தயாரித்து கொள்ளுவோம் … மிளகாய் தூள் … காய்ந்த மிளகாய் வாங்கி … மேலும் காயவைத்து மில்லில் அரைத்து கொள்ளுவோம்… எந்த ஒரு ஊறுகாயும் நாங்கள் வாங்க மாட்டோம்..!
சீரகத்தை மெல்லிய சூட்டில் வறுத்து அதை பொடியாக்கி வைத்து அவ்வபபோது மோரில் கலந்து குடிப்போம். சுக்கு கூட …சுக்கு வாங்கி அதை மேலும் காயவைத்து பொடியாக்கி வைத்து கொண்டு சுக்கு கஷாயம் வாரம் ஒருமுறை குடிப்போம்!
ஓமம்.. இதையும் மெல்லிய சூட்டில் வறுத்து … பொடியாக்கி வைத்து கொள்ளுவோம்… தேவைப்படும்போது தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்போம்… மோர் குடிக்கும்போதும் அதில் கலந்து குடிப்போம்… நல்ல சுவையாக இருக்கும்.
கடையில் விற்கும் சீயக்காய் (அவனுக விளம்பரத்தில் சீகைக்காய் என்றுதான் சொல்லறானுக ) முற்றிலும் கலப்படம்..20-25 வருடம் முண்டு கடையில் புலிமார்க் சீயக்காய் தூள் கிடைக்கும்… எண்ணெய் தேய்த்து குளிக்கபோது இதைத்தான் பயன்படுத்துவோம்.
ஆனால் தற்போது விற்கப்படும் சீயக்காய் அனைத்தும் கலப்படம்… ஷாம்பு போல அதிக நுரை வருகிறது… அதனால் சீயக்காய் வாங்கி நன்கு காய வைத்து அதனுடன் பாசி பயறு கலந்து மில்லில் அரைத்து வைத்து உள்ளோம்… எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது நாங்கள் வீட்டில் தயாரித்த இந்த சீயக்காய் தூள்தான் பயன்படுத்துகிறோம்!
- நெல்லை சுரேஷ்



