
யுடியூப் சேனலுக்காக பேய் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டும் செயலில் ஈடுபட்டதாக ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் ’கூக்ளி பீடியா’ (Kooky Pedia) என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். எதையாவது புதுமையாக செய்து அதிக பார்வை யாளர்களை ஈர்க்க முடிவு செய்தனர்.
அப்போது ஆஸ்திரேலியாவில் பேய் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டும் யூடியூப் காட்சி பிரபலமாக இருந்தது தெரிய வந்தது. அதற்கு அதிகமான பாலோயர்கள் இருந்ததும் தெரிந்ததால், அதைப் பின்பற்ற முடிவு செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு, பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே ஷெரீப் நகர் பகுதியில் நள்ளிரவில் களத்தில் இறங்கினர்.
அதன்படி வெள்ளை உடை அணிந்து, அதில் ரத்தக்கறை போல வடிவமைத்து, ஒருவர் சுற்றினார். அந்த வழியாக வந்த பொதுமக்கள் முன்பு திடீரென்று தோன்றி பயமுறுத்தினர்.
இதனால் அவர்கள் பீதியில் ஓடினர். ஒருவரை பேய் வேடமிட்டிருந்தவர் உருட்டுக் கட்டையால் துரத்தினார். அதை மறைவாக நின்று மற்றவர்கள், வீடியோ எடுத்தனர்.
பீதி அடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களில் சிலர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்தபோது, பேய் வேடமிட்டிருந்தவர் அவர்களையும் விரட்டினார்.
ஆனால், போலீசார் அதற்கெல்லாம் பயப்படவில்லை. பேய் வேடமிட்டிருந்தவரை மடக்கிப் பிடித்தனர். அப்போது மறைவாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து, யூடியூப்புக்காக இப்படி செய்கிறோம் என்றனர்.
அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களின் பெயர், ஜான் மல்லிக்(20), நவீத்(20), சஜில் முகமது(21), ஷாகிப்(20), சையத் நபீல்(20), யூசுப் அகமது(20), முகமது ஆயுப்(20) என்பதும் இவர்கள் 7 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.
முன் அனுமதியின்றி இந்தச் செயலில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



