
இந்தியாவில் குறைந்த தூரத்தில் இயக்கப்படவுள்ள முதல் ஏசி பயணிகள் ரயில் தற்போது மும்பையில் உள்ள குர்லா கார் ஷெட்டிற்கு வந்துள்ளது.
12 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் விரைவில்,தானே முதல் துறைமுகம் வரையில் பன்வால், வஷி வழியாக இயக்கப்படவுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு மத்திய ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த ரயில் ஜனவரி இரண்டாவது வாரத்தில் இருந்து இயக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.
சாதாரணமாக பயணிகள் ரயிலில் 9 பெட்டிகள் இருக்கும். இந்த ரயிலில் 12 பெட்டிகள் வரை இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
அனைத்துப் பெட்டிகளும் முற்றிலுமாக குளிரூட்டப்பட்டவை.
மேலும் கூட்டம் அதிகமாக உள்ள சமயங்களில் பெட்டியினுள் காற்று சீராக இருப்பதற்காக ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு ஏர் சஸ்பென்சன்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயிலில் மக்கள் வண்டி ஒட்டுநரிடம் பேசுவதற்கும், ஓட்டுநர் பயணிகளிடம் பேசுவதற்கும் இண்டர்காம் மற்றும் ரயில் ரேடியோ வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பெட்டி எண், முதியவர் பெண்கள் இருக்கைக் குறியீடுகள் அனைத்துமே எல்இடியில் பொறிக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்துப் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
அவசரக் காலத்தில் ரயிலை நிறுத்துவதற்காக மற்ற ரயில்களைப் போன்றே இதிலும் செயின் கொடுக்கப்பட்டுள்ளது.
இதைப் பயணிகள் இழுத்து ரயிலை நிறுத்தும் போது, பெட்டியின் ஓரங்களில் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.
அவை செயல்படத்தொடங்கும். இதை வைத்து நிலையத்தில் உதவிக்கு வருபவர்கள் எளிதாக பெட்டியை அடையாளம் காணலாம்.
அதேபோல் அவசர காலத்தில் உதவிக்காக ஒவ்வொரு பெட்டியிலும் வைக்கப்பட்டிருக்கும் இன்டர்காம் மூலம் ஓட்டுநரைத் தொடர்பு கொள்ளலாம்.
அதோடு ரயில் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்தாலோ, கதவுகள் தன்னிச்சையாக திறக்கவில்லை என்றாலோ, கதவுகளை நாமாக திறப்பதற்கான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.



