
சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு இன்று வழங்கப் படுவதாக இருந்த டாக்டர் பட்டம் திடீரென்று தட்டிப் போயுள்ளது. இன்று குறித்த நேரத்தில் வேறு நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் பட்டத்தை வழங்குவதற்கு வருவதாகச் சொல்லியிருந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வராமல் போனார். இந்நிலையில், இதற்குக் காரணம் யார் என்று ஒரு சர்ச்சையை சமூகத் தளங்களில் பலரும் பதிவு செய்து வருகிறார்கள்.
வைரமுத்து தன்னை மட்டுமல்லாமல் மேலும் 8 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாடகி சின்மயி டுவிட்டரில் கருத்து பதிவிட்டதும், தொடர்ந்து எழுந்த பிரச்னைகளும்தான் வைரமுத்துவுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வழங்கவிருந்த டாக்டர் பட்டம் ரத்து செய்யப்படக் காரணம் என்று ஒரு தகவலை பரவ விட்டிருக்கிறார்கள்.
பாடகி சின்மயி ஏற்கெனவே மீ டூ இயக்கத்தின் போது வைரமுத்து மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் மீண்டும் சூடு பிடித்தன. அதற்குக் காரணம், சனிக்கிழமை இன்று எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் வைரமுத்துவுக்கு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கையால் டாக்டர் பட்டம் வழங்க இருப்பது தான் என்று கூறப் பட்டது. அதற்கு ஏற்ப சின்மயி, மீ டூ இயக்கத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஒரு அமைப்பையும் அதன் தலைவரையும் மத்திய அரசு அறிவித்தது. அந்தத்தலைவர் தான் ராஜ்நாத் சிங்.

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை தவிடுபொடியாக்க, வைரமுத்து செய்த சூழ்ச்சிதான், ராஜ்நாத் சிங்கை தேர்ந்தெடுத்து தனக்கு டாக்டர் பட்டம் வழங்க வகை செய்து கொண்டது என்று கூறப் பட்டது. இதனை அடுத்து, சின்மயி அடுத்தடுத்து ட்விட்டரில் வைரமுத்துவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து அதனை ராஜ்நாத்சிங்கின் டிவிட்டர் கணக்கிற்கு பகிர்ந்தார்.
இந்நிலையில், வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதை ராஜ்நாத் சிங் தவிர்த்துவிட்டார். இதனால் ஏற்பட்ட குழப்பத்தால், இந்த நிகழ்ச்சி ரத்தானதாகக் கூறப் பட்டது.
வைரமுத்துவுக்கு கிடைக்கவிருந்த டாக்டர் பட்டத்தை ட்விட்டர் பதிவு மூலம் சின்மயி காலி செய்து விட்டதாக திரைஉலகில் தகவல் பரவிய நிலையில், இதற்குக் காரணம் சின்மயி என்பதை விட, ஹிந்து உணர்வுள்ள பாஜக., தொண்டர்கள்தான் என்று கூறுகின்றனர் சமூகத் தளங்களில்!

ஆண்டாள் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்க, மத்திய அமைச்சர் வருவது, தங்களது எண்ணங்களைப் புண்படுத்தும் என்று பாஜக., தமிழக மூத்த தலைவரும் தேசிய செயலருமான ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் ராஜ்நாத் சிங்குக்கு தெரிவிக்க, அதனாலேயே ராஜ்நாத் சிங் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டார் என்று கூறுகின்றனர் பாஜக.,வினர்.



