விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவராக தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் வை. இராஜ குமார் என்பவர், 2011 -ஆம் ஆண்டு பயிற்சி முடித்து, காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்துள்ளார். நேர்மையாக இருந்ததால் பல்வேறு நெருக்கடிகளுக்கும் தொடர்ச்சியான பணியிட மாற்றங்களுக்கும் உள்ளானதாகக் கூறும் அவர், இதுவரை 8 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாராம்.
அண்மையில் சென்னை ஆயுதப்படையிலிருந்து தூத்துக்குடி தருவைகுளம் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார் இராஜகுமார். சென்னை ஆயுதப்படையில் பணியாற்றியது தொடர்பாக ஆவணங்களை ஏன் சமர்பிக்கவில்லை என்று மாவட்ட எஸ்.பி, அவருக்கு மெமோ கொடுத்துள்ளார். ஜனவரி மாத சம்பளம் வழங்கப்படாததால், விரக்தியடைந்த வை.ராஜகுமார், 15 நாள் விடுப்பில் சென்றுள்ளார். மேலும், அமைச்சரகப் பணியாளர்கள் அலட்சியத்துக்கு தன்னை அதிகாரிகள் தண்டிப்பதாக வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது மனைவியின் மருத்துவச் செலவு, வங்கிக் கடன் ஆகியவற்றை செலுத்த முடியாமல் சிரமப்படுவதாகவும், தன் விவகாரத்தில் உயர் அதிகாரி தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காணவில்லை என்றால், தாம் கூலி வேலைக்குப் போகவும் முடிவு செய்துள்ளதாகவும் நண்பர்களிடம் கூறியுள்ளார்!
தன் மனக்குமுறல்களை ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்…
தலையிலும் முகத்திலும் இருக்கும் முடியை கூட நம் இஷ்டப்படி வைத்து கொள்ளமுடியாத பணி,
சொந்த பந்தங்களின் வீட்டு நல்லது கெட்டதில் கலந்து கொள்ள இயலாத பணி,
பண்டிகைகளையோ நம் குடும்ப விழாக்களையோ நமது மனைவி மக்களோடு அனுபவிக்க முடியாத பணி,
காலவரையற்ற பணி,
வாராந்திர ஓய்வில்லா பணி,
அரசு விடுமுறைகள் எதையும் அனுபவிக்க முடியாத பணி,
இம்மாதம் யாருக்கும் விடுப்பு வழங்கக்கூடாது என உயர் அதிகாரிகளால் மாதம் தோறும் அறிக்கை அனுப்பபடும் ஒரே பணி,
அனுமதிக்கப்பட்ட 12 நாள் விடுமுறையைகூட நம் தேவைக்கு அனுபவிக்க முடியாத பணி,
அமைச்சு பணியாளர்களின் வேலையையும் நம்மீது சுமத்தி நாம் செய்ய தவறினாலோ மறுத்தாலோ நமக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணைகளை வழங்கும் பணி,
மொத்தத்தில் இவற்றையெல்லாம் வெளியே சொல்லகூட முடியாத படி கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒரே பணி,
இதுபோன்ற மன அழுத்தத்தின் காரணமாக செய்யும் தவறுகளினால் மக்கள் மத்தியில் மதிப்பை இழந்து வெறுப்பை சம்பாதிக்கும் பணி,
இவற்றையெல்லாம் கேட்பதற்கு சங்கங்கள் அமைப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்ட ஒரே பணி ,
நாடு சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டுகள் ஆகியும் சுதந்திரம் கிடைக்காத ஒரே பணி-
சீருடை பணியாளர் எனும் காவல் பணி.
இத்தனைக்கும் முன்வைக்கும் ஒரே சொல் “கட்டுப்பாடான துறை”
ஏன் உயர் அதிகாரிகளுக்கு அந்த கட்டுப்பாடு பொருந்தாதா?
இப்படிக்கு:
விரும்பி பணியில் சேர்ந்து, வெறுத்து வெளியேற விரும்பும் கடைநிலை அடிமை ஊழியன்…
இதுவரை ஆதரவு வழங்கிய அதிகாரிகளுக்கு நன்றி.
அதிகாரம் செலுத்த நினைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள் …