கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்திய அரசு நாடு முழுதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மக்களை வீடுகளுக்குள் தனிமைப் படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது! தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. இதனால் நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசுமேற்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அரசின் சிக்கன நடவடிக்கைக்கு உதவியாக, தனது யோசனைகளைக் கூறியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி. அதில், அரசு விளம்பரங்களை நிறுத்துமாறு அவர் கூறியுள்ள யோசனைக்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. குறிப்பாக, தனியார் வானொலி நிறுவனங்கள் தங்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.
அடுத்த 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு விளம்பரங்கள் தருவதை நிறுத்த வேண்டும் என சோனியா காந்தி அளித்துள்ள யோசனைக்கு அகில இந்திய தனியார் ரேடியோ நிறுவனங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, நாடு சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்ள தனது யோசனைகளை தெரிவித்து சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் 5 அம்சங்களைக் குறிப்பிட்டு அரசு சிக்கனமாக செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், ‘‘அடுத்த 2 ஆண்டுகளுக்கு அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களின் விளம்பரங்களை தொலைக் காட்சி, பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களுக்கு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும். மக்களின் பொது சுகாதாரம் தொடர்பான கோவிட் 19 குறித்த விளம்பரங்களுக்கு அதில் விலக்கு அளிக்கலாம்.
இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1250 கோடி ரூபாய் மிச்சமாகும். இந்தத் தொகை கோவிட் 19 பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளை சரி செய்ய பயன்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அகில இந்திய தனியார் ரேடியோ நிறுவனங்களின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவை பொறுத்த மட்டில், வானொலிகள் அந்தந்தப் பகுதி மக்களுக்கு அவர்கள் மொழியில், அவர்கள் எண்ணத்துடன் தகவல்களையும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒலிபரப்பி வருகிறது.
மேலும், அரசின் திட்டங்கள், நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் மற்றும் உள்ளூர் தகவல்களையும் வழங்கி வருகின்றன. அண்மைக்காலமாக, வானொலி நிறுவனங்கள் பெரும் இக்கட்டில் தவித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே அவை பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் 20 சதவீதத்திற்கும் மேலாக விளம்பர வருமானம் குறைந்துவிட்டது.
இந்த நிலையில் அரசு விளம்பரத்தையும் நிறுத்தும் சோனியாவின் யோச்னையைக் கேட்டால் ரேடியோ நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.