
கொல்லப் பார்க்கிறார்களா கோவில் யானையை…? அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் தெய்வானை என்ற கோவில் யானை, பாகனைத் தாக்கியதில் அந்தப் பாகன் உயிரிழந்தான். அதனால், அந்த யானைக்கு மனநலம் சரியில்லை என்று முதுமலைக் காட்டுக்கு அனுப்ப அறநிலையத் துறையும் அந்த யானைக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர் ஜான் பாட்சாவும் முடிவு செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இவர்களின் இந்தச் செயலை சதிச் செயல் என்று குற்றம் சாட்டுகின்றனர் பக்தர்கள். சும்மா இருக்கும் யானை பாகனை ஏன் கொல்லப் போகிறது என்று கேள்வி எழுப்பும் பக்தர்கள், யானையைக் கட்டிப் போட்டிருக்கும் இடத்தில் இருக்கும் சிசிடிவியை ஏன் இயங்க விடாமல் அணைத்து வைத்திருக்கிறார்கள்? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
யானையால் உயிரிழந்து போன யானைப் பாகன் காளிதாசுடன் சேர்து, யானை தெய்வானையைப் பராமரித்து வந்த பாகன் பரணி, திருச்செந்தூரிலிருந்து ஏன் மதுரைக்கு மாற்றப் பட்டார் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
திருச்செந்தூர் கோவில் யானை எப்படி இறந்து போனது என்று பகீர் கேள்வியை எழுப்பி, பாகன்களுக்கும் யானைக்கும் இடையேயான ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
யானையைப் பராமரிக்கும் பாகன்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை தான் சம்பளம் தர வேண்டும். ஆனால், இங்கே இதுவரை யானைப் பாகன்களுக்கு ஹெச்ஆர்என்சி பணம் கொடுத்ததில்லை. மாறாக, கருணையின் அடிப்படையில், யானைப் பாகன்களுக்கு சம்பளம் கொடுத்து வந்தவர் ராஜா பட்டர். .. கோவில் ஸ்தானீகர் என்று உண்மையைப் போட்டு உடைக்கிறார்கள்.
ஏன் இப்படி நடந்தது?
யானையை நன்கொடையாகக் கொடுப்பவர்கள், அதைப் பராமரிக்க ரூ.15 லட்சமும், யானைப் பாகனுக்கு சம்பளம் கொடுக்க சில லட்சம் டெப்பாஸிட் ஆகவும் இந்து சமய அறநிலையத் துறைக்கு வழங்குவார்கள். யானை நன்கொடை கொடுப்பவர்களிடம் லஞ்சமாகக் கணிசமான தொகையை கறப்பவர்களும் உண்டு.
இவ்வளவு பணத்தையும் வாங்கிக் கொண்டு, பாகன்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை. கோவில் பட்டர்கள் கொடுக்கும் பணத்தைக் கடந்து, கோவில் யானையைப் பிச்சை எடுக்க வைத்து அதை வருமானமாக்கிக் கொள்வதுடன் நிறுத்தாமல், சில பாகன்கள்,யானையின் நகம் மற்றும் முடிகளைத் திருட்டுத்தனமாகப் பிடுங்கி அதை விற்பதும் சிற்சில இடங்களில் நடக்கிறடு என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இவ்வாறு நகம் / முடிகளைக் கொடூரமாகப் பிடுங்கும் போது வலி தாங்காமல் யானைகள் காலால் உதைத்தும் தூக்கியும் எதிர்ப்பைக் காட்டுமாம். இங்கே யானைப்பாகன் காளிதாசும் இவ்வாறு குடித்துவிட்டு தேவயானையைத் துன்புறுத்தியபோது தான் யானை வலி பொறுக்க முடியாமல் இவ்வாறு கால்களை உதறியிருக்கும் என்றும், அதனால்தான் காளிதாசும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். காரணம், இதுவரையிலும் தெய்வானை யானை பக்தர்கள் எவரிடமும் முரட்டுத்தனமாகவோ, கட்டுப்பாட்டை மீறியோ நடந்து கொண்டதில்லை என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.
எனவே, தவறு செய்த யானைப்பாகன் குறித்து விசாரித்து அறிய வழியின்றி, சிசிடிவி கேமராக்கள் அணைக்கப் பட்டும், சேதப் படுத்தப் பட்டும் இருக்கும் நிலையில், தவறு எங்கே என்று கண்டறிய வழியில்லாமல், யானையைக் கொண்டு போய் காட்டில் விடுவேன் என்று சொல்வது மிகவும் தவறு என்றும் கூறுகின்றனர் கோயிலில் உள்ளவர்கள்.
இத்தனை நாட்கள் கோவிலின் கட்டுப்பாட்டிலும், சங்கிலியால் கட்டப்பட்டும் வாழ்ந்து பழகிய யானையை திடீரென்று காட்டில் கொண்டு போய் விட்டால், அது ஓநாய்களாலும், கழுதைப் புலிகளாலும் தாக்கப்பட்டு கொடூரமாக இறந்து போக நேரிடும். மனிதர்கள் செய்யும் அயோக்கியத் தனத்திற்கு அப்பாவி கோவில் யானையைப் பலி கொடுக்க வேண்டுமா? திருச்செந்தூர் யானை உயிர் போனதற்கும் அந்த யானைப் பாகன் பரணியின் கொடுமைகள் தான் காரணமாக இருக்கும் என்பதால், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் யானை இறந்து இத்தனை நாட்களாகியும் ஏன் இன்னும் புதிய யானை வழங்கப் படவில்லை?
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பார்வதி என்ற ஒரு யானை மட்டுமே இருக்கிறது. இரண்டு யானைகள் இருக்க வேண்டும் ஆனால், கடந்த இருபது வருடங்களுக்கு மேல் இன்னொரு யானை கோவிலுக்கு வழங்கப் படவே இல்லை.

இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியத்தைத் தான் இவை காட்டுகின்றன. இவர்களின் நாத்திக, கிறிப்டோ கிறிஸ்துவ அதிகாரக் கொள்கைகளுக்காக, இந்து சமய ஆலய பழக்கங்களும் ஆகம நடைமுறைகளும் மீறப் படுகின்றன.
மிகப் பெரும் கோயில்களில், கோ பூஜை, கஜ பூஜை செய்வது எல்லாம் ஆகம நடைமுறைகள். ஆனால் அந்த நடைமுறைகளை நாசமாக்கி, இந்து தர்மத்தையே நசுக்கச் செய்யும் செயலில் ஆழமாக ஈடுபட்டிருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை என்று குற்றம் சாட்டுகிறார்கள் ஆலய பக்தர்கள். உண்மையில் தமிழக அரசு முறையான விசாரணை நடத்தி கண்காணித்தால் மட்டுமே கோயில் யானைகள் காப்பாற்றப்பட்டு, அதன் மூலம் கோயில் ஆகம நடைமுறைகளும் காப்பாற்றப் படும் என்று பொரிந்து தள்ளுகிறார்கள் ஆலய பக்தர்கள்.
ஆயினும் இது குறித்து கோயில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, அறநிலையத்துறையில் இருந்து தான் பாகனுக்கு சம்பளம் தரப்படுகிறது என்றும், இப்போது கூட பாகனுக்கு இன்ஸூரன்ஸ் க்ளெய்ம் செய்து அவர்களது குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், யானையை உபயதாரர்களிடம் இருந்து பெற்றுக் கொடுத்த வகையில், கோயில் ஸ்தானீகர் உதவியதால், தமக்குத் தெரிந்த வகையில் பாகனுக்கு வேண்டிய உதவிகள் செய்திருக்கலாம் என்றும், கோயிலில் நான்கு ஸ்தானீகர்கள் இருக்கின்றனர், இவர் இரண்டாம் நிலை ஸ்தானீகர்தான் என்றும் கூறுகின்றனர்.
இதனிடையே, கோயில் ஸ்தானீகர் ராஜா பட்டரிடம், பணம் கறப்பதற்காக பாஜக., மண்டல் தலைவர் வேல்முருகன் என்பவர் பேரம் பேசியதாகவும், அவர் மறுத்துவிடவே, அவரை மிரட்டும் வகையில் யானையை அவருடன் தொடர்பு படுத்தி போஸ்டர் அடித்து ஒட்டியதாகவும் சமூகத் தளங்களில் வைரலானது. கோயில் விவகாரத்தில் அறநெறி மீறி செயல்படுவதால் அவரை திராவிட பாஜக., என்றும் கூறி, கிண்டல் செய்து வருகின்றனர் சிலர்.