
தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை அனுமதிக்க அமைச்சர், 2 டிஜிபிக்கு லஞ்சம்:
ரூ.40 கோடி வாங்கியவர்கள் பட்டியல் வருமான வரி சோதனையில் அம்பலம்
சென்னை:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ‘குட்கா’ போதைப்பொருளை விற்பனைக்கு
அனுமதிக்க சுகாதாரத்துறை அமைச்சர், 2 டிஜிபிக்கள் மற்றும் போலீஸ் உயர்
அதிகாரிகள், மாநகராட்சி, உணவுத்துறை, மத்திய கலால் துறையில் உள்ள உயர்
அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுத்த ஆதாரங்கள் வருமான வரித்துறையிடம்
சிக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில்
போதைப் பொருளான குட்கா விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. குட்கா விற்பனைக்கு
அமைச்சர் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக வருமான வரித்துறையினர்
கைப்பற்றிய ஆவணங்களை ஆங்கில தொலைக்காட்சி நேற்று வெளியிட்டது. இது தமிழக
அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தி விவரம் வருமாறு:
சென்னை மாதவரத்தில் கடந்த 2011 முதல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா
என்ற போதைப் பொருள் விற்பனை செய்யும் நிறுவனம் இயங்கி வந்தது. தமிழகத்தில்
உயர் பதவியில் இருந்தவரின் மருமகன் மற்றும் அவரது நண்பர்கள் இந்த நிறுவனத்தை
நடத்தி வந்தனர். இதனால் அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிடவில்லை. அதிகாரிகள்
துணையுடன் இந்த நிறுவனம் மாநிலத்தின் பெரும் பகுதிக்கு குட்காவை விற்பனை
செய்து வந்தது. இந்த நிறுவனத்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு
ஏற்படுவதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன.இதனால், மாதவரத்தில் உள்ள
குட்கா நிறுவன குடோனில் கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி வருமான வரித்துறையினர்
அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நிறுவனத்தில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை.
அலுவலகத்தில் யோகேஸ்வரி என்ற கணக்காளருக்குத்தான் அனைத்து விவரங்களும்
தெரியும் என்று கூறப்பட்டது. இதனால் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர்
சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதிகாரிகளுக்கு
லஞ்சம் கொடுத்த தகவல், தேதி வாரியாக கொடுத்த பணம், வாங்கிக் கொண்டு வந்து
கொடுத்த ஊழியர் பற்றிய ஆதாரங்கள் அதில் தெளிவாக இருந்தன. ஆனால் ஒவ்வொரு
ஆதாரமும் ரகசிய குறியீடுகள் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும் அதிகாரிகளுக்கு கொடுத்த லஞ்சத்தை பொது செலவீனம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
குறிப்பாக 2014ம் ஆண்டு நவம்பர் முதல் 2016ம் ஆண்டு ஜூலை வரை லஞ்சம் கொடுக்கப்பட்ட கணக்குகள் சிக்கின. இந்த ஆவணங்களின் அடிப்படையில் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான ஏ.வி.மாதவராவ் என்பவரிடம் மறுநாள் வருமான வரித்துறை உதவி இயக்குநர் கண்ணன் நாராயணன் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் உள்ள ரகசிய குறியீடுகள் குறித்தும், குறியீடுகளில் உள்ள அதிகாரிகள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் மாதவராவ் குறிப்பிடும்போது, தமிழக அரசு குட்கா விற்பனைக்கு தடை
செய்ததால், அந்த தொழிலை நாங்கள் நடத்த கவுன்சிலர்கள் முதல் அமைச்சர் வரையும்,
உதவி கமிஷனர் முதல் டிஜிபி வரையும் லஞ்சம் கொடுத்தோம். ஆவணத்தில் எச்.எம்
என்று குறிப்பிடப்பட்டது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குறிக்கும்.
அவருக்கு மாதம் ரூ.14 லட்சத்தை, எங்கள் நிறுவன ஊழியர் ராஜேந்திரன் மூலம்
கொடுத்து வந்தோம். மத்திய கலால் துறை அதிகாரிகளுக்கு எங்கள் ஊழியர்
நந்தகுமாரும், நானும் நேரடியாக சென்று மாதம் ரூ.2 லட்சம் வீதம் லஞ்சம்
கொடுத்தோம். செங்குன்றம் உதவி கமிஷனருக்கு மாதம் ரூ.10 லட்சம் கொடுத்தோம்.
குடோன் இருந்த பகுதியில் உள்ள கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ.14 லட்சம், உணவு
பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு மாதம் ரூ.7 லட்சம் கொடுத்தோம், சென்னையில்
போலீஸ் கமிஷனராக இருந்தவருக்கு மாதம் ரூ.20 லட்சம் கொடுத்து வந்தோம். அதில்
ஒரு கமிஷனர் மொத்தம் ரூ.1.4 கோடி வாங்கியுள்ளார்.
மற்றொரு கமிஷனர் ரூ.75 லட்சம் வரை வாங்கியுள்ளார். இந்தப் பணத்தை எங்கள்
ஊழியர் ராஜேந்திரன்தான் கொடுத்து வந்தார் என்று தனது வாக்குமூலத்தில் மாதவராவ்
குறிப்பிட்டார்.
வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களில் குறிப்பிட்ட
காலகட்டத்தில் சென்னை நகர போலீஸ் கமிஷனராக டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர்
இருந்தனர். அவர்கள் பெயரை ஆவணத்தில் குறிப்பிடாமல், சி.பி.(சென்னை போலீஸ்
கமிஷனர்) என்று குறிப்பிட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணத்தின்படி
டி.கே.ராஜேந்திரன் ரூ.1.4 கோடியும், ஜார்ஜ் ரூ.75 லட்சமும் வாங்கியதாக
ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க சென்ற ஊழியர்,
நிறுவனத்தில் அதற்கான வவுச்சரும் போட்டுள்ளார். இந்த வவுச்சர்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து மாதவராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,
மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளுக்கு மாதம் ரூ.3.5 லட்சம், வடசென்னை
இணை கமிஷனராக இருந்த அதிகாரிக்கு மாதம் ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுத்தோம் என்று
கூறியுள்ளார்.
இந்த குட்கா நிறுவனத்தில் லஞ்சம் வாங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் 2
டிஜிபி மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வருமான வரித்துறை
அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் கடந்த 6
மாதமாக தமிழக அரசு அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்
வருமான வரித்துறையே குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு
சம்மன் அனுப்பி விசாரிப்பதா அல்லது இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்
கோருவதா என்று அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளிக்கு சிறப்பு போனஸாக லஞ்சம்: அமைச்சர் முதல் 2 டிஜிபிக்கள், இணை
கமிஷனர், மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை,
மத்திய கலால்துறை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் லஞ்சம்
கொடுக்கப்பட்டு வந்தது. தீபாவளி நேரத்தில் அந்த மாத லஞ்சம் தவிர, ஒரு மாத
லஞ்சத்தை போனஸாக கொடுத்து அசத்தியுள்ளனர். அதில் முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு கிறிஸ்துமஸ் செலவுக்காக ரூ.15 லட்சம் லஞ்சமாக கொடுத்து அதிர்ச்சி அளித்துள்ள ஆவணங்களும் வருமான வரித்துறையில் சிக்கியுள்ளன.



