
மதுரை : கொரோனா சிறப்பு வார்டில் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக அகற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெறும் இடத்திலேயே இறந்தவர்களின் உடலையும் வைத்திருப்பதால் சிகிச்சை பெறும் நோயாளி ஒருவர் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அவரை சமாதானப் படுத்திய மருத்துவ துறை அதிகாரிகள் கொரோனா வார்டில், வைக்கப்பட்டிருந்த பிணத்தை வெளியே கொண்டு சென்றனர்.
அதே போல், மதுரையில் கொரோனோ தொற்றின் வீரியம், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள வார்டிலும், சிகிச்சை அளிப்பவர்களும் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இறந்தவர்களின் உடல்களை உடனடியாக அகற்றாமலும், இறந்தவர்கள் இருந்த படுக்கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துவதில்லை என்றும் புகார்கள் கூறப் படுகின்றன. மேலும் கொரோனா வார்டில் உள்ள கழிப்பறைகளை உடனுக்குடன் சுத்தப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதனிடையே, மதுரை மாவட்டத்தில் மிதமான பாதிப்பு உள்ளவர்களே அதிகம் என்று, களப்பணி அலுவலர் பி. சந்திரமோகன் தகவல் வெளியிட்டார்.

மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் மிதமான நிலையில் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் என மதுரை மாவட்ட களப்பணி அலுவலரும், அரசு செயலருமான பி. சந்திரமோகன் தெரிவித்தார். அவர் கொரோனா சிகிச்சை மையங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் கூறியபோது…. மதுரை மாவட்டத்தில் உள்ள 21 கல்வி நிறுவனங்களில் மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க 2, 500 படுக்கைகள் தயார்படுத்தப்படவுள்ளன.
முதற்கட்டமாக, மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் 500 படுக்கைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேவைக்கேற்ப, தமிழக முதல்வரின் ஆலோசனையின் பேரில் தாற்காலிக முகாம்கள் அதிகப்படுத்தப்படும்.
மதுரை மாவட்டத்தில் ஆஸ்தன்பட்டி, மதுரை அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பிரிவு செயல்படுகிறது என்றார். இந்த ஆய்வில், மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய், மாவட்ட வருவாய் அலுவலர்கள் செல்வராஜ், கண்ணன், மேலூர் ஆர்டிஒ கண்ணகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை



