
தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் காவல்துறையினருக்கு உதவுவதற்காக 1993ஆம் ஆண்டு காவல் துறை அதிகாரியால் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற போலீஸ் நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட இந்த அமைப்பு கடந்த மாதம் சாத்தான்குளம் சம்பவத்தால் பெரிதும் சிக்கலுக்கு உள்ளானது.
சாத்தான்குளம் வர்த்தகர்களான தந்தை, மகன் கொலை வழக்கில், போலீஸாருடன் இணைந்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த சிலரும் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழகம் முழுவதும் அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.
இந்தக் கோரிக்கைகளை ஏற்று, பல்வேறு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தடை விதித்தனர். எனினும், இந்தத் தடைகளின் தொடர்ச்சியாக, காவல் நிலையங்கள் மற்றும் ரோந்து பணிகளில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரை ஈடுபடுத்தக்கூடாது என்று காவல் உயரதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு குறித்து டிஜிபி ஓர் அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 1993ம் வருட அரசாணை ரத்து செய்யப் படுவதாகவும், டிஜிபி.,யின் அறிக்கையை ஏற்று இந்த அமைப்பு தடை செய்யப் படுவதாகவும் அதில் கூறப் பட்டுள்ளது.




