நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்ட ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களுக்கு இழப்பீடு கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேலவாசல் பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில் ஐந்தாவது பிளாக்கில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் 5 மர்ம நபர்கள் அங்கே இருக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கினர் மேலும் ,அதை தடுக்க முயன்ற பொதுமக்களையும் பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்க முயன்றனர்.
இதனைத் தொடர்ந்து ,அப்பகுதி மக்கள் திடீர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இது தொடர்பாக இரண்டு நபர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .
இந்த நிலையில் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், ஐந்து நபர்கள் முகமூடி அணிந்து அங்கு உள்ள வாகனங்களை அடித்து நொறுக்குவது தெரிந்தது. இந்தக் காட்சிகள் வெளியாகி இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் உடைந்த வாகனங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர் .
இந்த நேரத்தில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். திடீர்நகர் உதவி காவல்துறை ஆணையாளர் மற்றும் திடீர் நகர் காவல் ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
நள்ளிரவில் பயங்கர ஆயுதங்கள் கொண்டு வாகனங்களை தாக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதேபோல், மதுரை மாநகரில் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு போன்ற நிகழ்வு எல்லிஸ் நகர் எஸ் எஸ் காலனி பகுதிகளில் நடந்தது குறிப்பிடத்தக்கது .
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை