தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
கார்த்திகை மாதம் மிகவும் பவித்திரமான மாதம். எந்த மாதமாக இருந்தாலும் அந்த மாதத்தின் சாராம்சம் அந்த மாதத்தின் பௌர்ணமியில் அடங்கியிருக்கும். அதனால் பௌர்ணமி திதிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது.
கார்த்திகை பௌர்ணமி அனைத்து மாதங்களிலும் சிறப்பான ஆன்மீக சாதனைகளுக்கு ஏற்புடைய நாள். அந்தர்முக சாதனைகள், தியானம், அர்ச்சனை, ஜபம் அனைத்திற்கும் பௌர்ணமி மிக உகந்தது.
கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் கடைப்பிடிப்பது மிக உயர்வானது. அப்படி மாதம் முழுவதும் விரதம் இருக்க இயலாதவர்கள் குறைந்தது 5 நாட்களாவது விரதம் இருக்க வேண்டும்.
கார்த்திகை மாதம் சுக்ல ஏகாதசி முதல் பௌர்ணமி வரை நியமத்தைக் கடைபிடித்து விரதம் இருக்கவேண்டும். ஏகாதசி உபவாசம் இருந்து துவாதசி பாரணை செய்து, திரயோதசி, சதுர்த்தசி திதிகளில் கடவுளுக்கு அர்ச்சனை, வழிபாடு செய்து பௌர்ணமியன்று பிரத்யேகமாக உபவாச நியமங்களோடு அவரவர் உடல்நிலையை கவனத்தில் கொண்டு உபவாசமோ ஏகபக்தமோ ஆகார நியமத்தோடு ஜபம், தியானம், வழிபாடுகள் செய்ய வேண்டும்.
பூர்ணிமா விரதத்தை ஆண்களும் பெண்களும் அவரவர் வம்ச விருத்திக்காக பிரத்தியேகமாக கடைபிடிப்பது வழக்கமாக உள்ளது.
கார்த்திகை பௌர்ணமி தியானத்திற்கு முக்கியமான திதி. கார்த்திகை மாதமும் பௌர்ணமி திதியும் சிவன், விஷ்ணு, சக்தி மூன்று கடவுளருக்கும் முக்கியமானது. அதனால் சரத் பூர்ணிமாவான இன்று அம்பிகையை வழிபடுவது சிறந்தது.
ஐப்பசி, கார்த்திகை இரு மாதங்களும் அம்பிகையின் வழிபாட்டிற்கு சிறப்பானது. ‘சாம்பவி சாரதாராத்யா…’ என்று போற்றி வழிபடுகிறோம். சரத் ருதுவில் வழிபடப்படுபவள் என்று கூறும்போது ஐப்பசி, கார்த்திகை இரு மாதங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
இன்று பகலில் உபவாசமிருந்து இரவில் கண்விழித்து நிருத்தியம், கீதம், வாத்யங்களால் கீர்த்தனை செய்து நாராயணனை சேவிக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. இவ்வாறு செய்வதால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கிறது.
இன்று அருணோதயத்தில் சிவனை வழிபட்டு ப்ராத: காலத்தில் சிறப்பாக வழிபடுவோருக்கு பல ஆண்டுகள் சிவ பூஜை செய்த பலன் கிடைக்கும். இது கார்த்திகை பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய சிவ வழிபாடு. ஏனென்றால் கிருத்திகை நட்சத்திரம் அக்னி நட்சத்திரம். இது யக்ஞ அக்னியோடு தொடர்புடையது. சாக்ஷாத் ருத்ரனே யக்ஞ அக்னி.
கார்த்திகை மாதம் சிவனுக்கு ப்ரீதியாக இருப்பதற்கு காரணம், யக்ஞ அக்னியாக, யக்ஞ பலனை அளிப்பவராக பரமேஸ்வரன் விளங்கும் தெய்வீக நட்சத்திரம் கிருத்திகா நட்சத்திரம். பரமசிவனே ஒரு மகா அக்னி லிங்கமாக உதித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
சிவனின் சொரூபமே அக்னி. அக்னி என்றால் படைப்பு அனைத்திற்கும் முதலில் தோன்றிய தேஜஸ் என்று பொருள். இது பஞ்சபூதங்களில் இருக்கும் அக்னி மட்டுமே அல்ல. பஞ்சபூதத்தில் உள்ள அக்னியில் சிருஷ்டிக்கு முதலில் தோன்றிய பரஞ்சோதியை சிந்தனை செய்து வழிபடுகிறோம். தீபத்தை ஏற்றி அதில் பரஞ்சோதியை வழிபடுகிறோம்.
ஏற்றும் வரை அது ஒளி. ஏற்றி வழிபடும் போது அது பரஞ்ஜோதி ஆகிறது. அந்த தீப ஒளியில் பரமேஸ்வரனை தரிசனம் செய்கிறோம். பரமேஸ்வரனை ஜோதி வடிவில் வழிபடுகிறோம். இந்த வழிபாடும் தியானமும் சிறிது சிறிதாக அந்தர்முக பாவனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
ஒரு அகல் விளக்கை வைத்து எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றுகிறோம். நம் இதயத்தை அகல் விளக்காக்க வேண்டும். வைராக்கியம் என்ற தைலம் ஊற்றி பக்தி என்ற திரி இட்டு பிரபோதம் என்ற அகலில் ஞான தீபத்தை ஏற்ற வேண்டும். எத்தனை அழகாகக் கூறியுள்ளார்கள் பாருங்கள்! “வைராக்கிய தைல பூர்ணேது…” என்று.
குருநாதர் செய்த உபதேசம் என்ற ஜ்வாலையை அதில் சேர்க்க வேண்டும். அப்போது அது ஞானதீபம் ஆகிறது. தீபத்தை ஏற்றுவதற்கு ஒரு அக்னி தேவையல்லவா? குரு உபதேசம் என்னும் ஞானம் ஏற்றும் அக்னியாக உதவுகிறது. ஏற்றப்பட்ட ஞான தீபத்தை சிவ சொரூபமாக தரிசிக்க வேண்டும். இது தத்துவார்த்தமாக தரிசிக்க வேண்டிய தீப தரிசனம்.
பௌதிக தீபாராதனை கார்த்திகை மாதம் முழுவதும் செய்ய வேண்டும். கார்த்திகை பௌர்ணமியன்று தேவதைகளின் திருப்திக்காக விசேஷமாக தீபங்கள் ஏற்றவேண்டும். தீபங்களைப் பார்த்து தேவதைகள் மகிழ்ச்சி அடைவர். ஏனென்றால் தேவதைகள் ஜோதி ஸ்வரூபங்கள். தேவதைகள் திருப்தி அடைந்து தீபமேற்றியவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், சம்பத்து அனைத்தையும் அருளுவர்.
தீபத்தால் நினைத்த காரியத்தை சாதிக்க முடியும் என்று சாத்திரம் உரைக்கிறது. ஒரு கோரிக்கையை மனதில் நினைத்து அது நிறைவேறுவதற்கு ஒரு தீபத்தை ஏற்றி இறைவனுக்கு நிவேதனம் செய்யும் போது கட்டாயம் அபீஷ்ட சித்தியைப் பெற முடியும். ஏனென்றால் தீபத்தை ஆதாரமாகக் கொண்டே தேவதைகள் விளங்குவர்.
தீபத்தை ஏற்றிய உடனே தொல்லை கொடுக்கும் துஷ்ட சக்திகள் விலகி விடும் என்பது சாத்திரங்கள் தெரிவிக்கும் உயர்ந்த செய்தி. அதனால்தான் கார்த்திகை பௌர்ணமிக்கு பிரதானமாக ‘தீப பௌர்ணமி’ என்ற பெயர் உள்ளது. இதுவும் மற்றுமொரு தீபாவளியே! ஐப்பசியில் கொண்டாடும் அமாவாசை தீபாவளி ‘பித்ரு தீபாவளி’. இது ‘தேவ தீபாவளி’. தேவதைகள் மகிழும் பண்டிகை தீப கார்த்திகை.
காசி மகா க்ஷேத்திரத்தில் இந்த கார்த்திகை பௌர்ணமியன்று படித்துறைகள் அனைத்திலும் தீபமேற்றி தேவதைகளின் கடவுளான பரமேஸ்வரனை வழிபடுகிறார்கள். இன்றைய தினம் தேவதைகள் கூட தீபங்களால் சிவனை வழிபடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நாளின் மற்றுமொரு சிறப்பான அம்சம் குமார தரிசனம். இது ‘குமார பூர்ணிமா’ என்று கூட அழைக்கப்படுகிறது. ஏனென்றால் சுப்பிரமணியன் சிவகுமாரன். அதாவது சிவனின் தேஜஸே சுப்பிரமணியன். இவர் சம்பூர்ணமான யக்ஞ அக்னி வடிவானவர். அதனால்தான் அக்னி நட்சத்திரமான கிருத்திகையன்று அவர் அவதரித்தார்.