பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா (வயது 29) சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தார் சித்ரா. கடந்த ஆகஸ்ட் மாதம்தான் அவருக்கு தொழில் அதிபர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் திருமணத்துக்கான தேதியை முடிவு செய்யவிருந்தார்.
இந்நிலையில், சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
இவர் டிச.9 இன்று அதிகாலை 2.30க்கு, ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படப்பிடிப்பை முடித்துவிட்டு விடுதி அறைக்கு வந்துள்ளார். தனக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ள ஹேம்நாத் ரவி என்பவருடன் சித்ரா ஒன்றாகவே தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் சித்ரா ஹேமநாத்திடம் தான் குளிக்கச் செல்வதாகக் கூறி அறைக்கு வெளியே செல்லச் சொன்னதாகவும், வெகுநேரம் ஆகியும் அறையின் கதவைத் திறக்காததால், அறைக் கதவைத் தட்டியதாகவும் ஹேம்நாத் கூறியுள்ளார்.
இதன் பின்னர், விடுதி ஊழியர்களிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்தது.
இது குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது இந்த விபரீத முடிவு சின்னத்திரை நடிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.