
மதுரையில் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஊள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கின்றன. இந்த முறை கொரோனா கால நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடக்கின்றன. இதில் அலங்காநல்லூர் போட்டியைக் காண ராகுல் வருகிறார் என்று தகவல் பரவியது.
அன்று ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடை செய்துவிட்டு, இன்று ஜல்லிக்கட்டு காண மதுரைக்கு வருவதா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஜல்லிக்கட்டை மத்தியில் திமுக., கூட்டணியில் இருந்தும், காங்கிரஸ் தலைமையிலான அரசு தடை செய்த பின்னர், இதற்கென எதிர்ப்பு கிளப்பப் பட்டு, ஓர் போராட்டமாக நடைபெற்றது. ஆனால் அப்போது மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்திருந்தது. தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது, மத்திய அரசின் உதவியுடன் ஜல்லிக்கட்டுக்கான தடை சட்ட ரீதியாக நீங்கியது.
இதை அடுத்து, ஜல்லிக்கட்டு நாயகன் என்று ஓபிஎஸ் இளைஞர்கள் மத்தியில் புகழ்பெற்றார். ஆனால், அன்று தடை செய்துவிட்டு, இன்று ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்வையிட்டு ஆதரவாளர்கள் போல் தங்களைக் காட்டிக் கொள்ள வருகிறார் ராகுல் காந்தி என்று அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதை அடுத்து டிவிட்டர் பதிவுகளில் #Goback_Rahul என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத பட்டியலில் சேர்த்து ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக அமைந்த காங்கிரஸ் கட்சியின் ராகுல், ஜல்லிக்கட்டுக்கு செல்வதற்கு தகுதி இல்லை. அவனியாபுரத்திற்கு செல்லும் போது #Goback_Rahul ட்ரெண்ட் ஆகும் என்கிறார் பாஜக.,வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி!

தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டை தடை செய்த காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியே, திரும்பி செல்லுங்கள்… என்று இப்போதே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஜல்லிக்கட்டு குறித்த தகவல்களும் சமூகத் தளங்களில் பரவலாக விவாதிக்கப் பட்டு வருகிறது.
அப்போதைய தனி நீதிபதியான ஆர்.பானுமதி ஜல்லிக்கட்டு,ரேக்ளா ரேஸ்,எருது ஓட்டம் மற்றும் பிராணிகளை வதைப்படுத்தும் அனைத்து பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கும் தடை விதித்து 29.3.2006-ல் ஒரு உத்தரவை கொடுத்தார்.பின் ஒரு மேல்முறையீட்டில் இந்த தீர்ப்புக்கு ஒரு இடைக்கால தடை வந்து ஜல்லிக்கட்டு நடந்தது..
அதன் பிறகு 9.3.2007 ல் ஜல்லிக்கட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டு தடை என்ற பானுமதியின் தீர்ப்பே ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது நீதிமன்றத்தால். இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எடுத்துக் கொண்டு பிராணிகள் நலவாரியம் உச்சநீதிமன்ற அமர்வுக்கு சென்றது. அங்கே ஜல்லிக்கட்டு தடை ரத்து என்ற தீர்ப்புக்கு இடைக்காலத்தடை வாங்கினார்கள்.

ஆகவே 2008 ல் ஜல்லிகட்டு நடத்தவேண்டி ஜனவரியில் உச்சநீதிமன்றத்தை அணுகியபோது ஜல்லிகட்டு,ரேக்களா ரேஸ் நடத்த அனுமதி மறுப்பில் உறுதியாக இருந்தது நீதிமன்றம். உடனே தமிழக அரசால் பதியப்பட்ட சீராய்வு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு நிபந்தனைகளுடன் தற்கால அனுமதி கொடுத்தார்கள். பின்னால் தமிழக அரசு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் போட்டு 2009,2010 நெருக்கடிக்குள் நடத்திவிட்டார்கள்..
2011 ல் பீட்டா மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறது. அந்த வருடமும் கடுமையான நிபந்தனைகளுடன் ஜல்லிகட்டு நடக்கிறது. இதற்கு பிறகுதான் 11.07.2011 ஆம் தேதியன்று மத்திய அமைச்சகமான சுற்றுச்சூழல் துறை ஒரு நோட்டிபிகேசனை வெளியிடுகிறது.
அதாவது காட்சிப்படுத்தப்படக்கூடாத விலங்குகள் பட்டியலில் காடுகளில் வசிக்கும் சிங்கம்,புலி,கரடி, கருஞ்சிறுத்தை,குரங்குகள் பட்டியலோடு காளைகளையும் சேர்க்கிறார் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். இது அன்றே காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் NSV சித்தனால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. எதிர்ப்புகளையும் மீறி அது நிறைவேறுகிறது..
காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு காளையை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்த்த பிறகு அதை அடிப்படையாக ஒட்டி நடந்த வழக்குகளை வைத்து 7.5.2014-ல் அதற்கு உச்ச நீதிமன்றம் நிரந்தர தடை விதித்தது. இதன் பிறகு 2015 ல் ஜல்லிகட்டை நடத்த முடியவில்லை,பின்பு பாஜக அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அப்போது 2016 ல் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளையை சேர்த்த ஜெய்ராம் ரமேஷ் ஆணையை நீக்கி அறிவிக்கிறார் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர்.

இதையும் எதிர்த்து விலங்குகள் நலவாரியம்,இன்னும் பீட்டா உட்பட 12 அமைப்புகள் உச்சநீதின்றத்தை நாடி பாஜக அரசின் ஆணைக்கு தடை வாங்குகின்றன. தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிரந்தர தடையை மறு சீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு 2016 நவம்பரில் தள்ளுபடியா கிவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் ஜல்லிக்கட்டு தடை தீர்ப்பு அப்படியே தொடருகிறது 2017 லும் ஜல்லிகட்டு நடைபெறாத போது போராட்டம் வெடிக்கிறது.தமிழக அரசு அவசரச்சட்டம் போடுகிறது,2016 ல் பாஜக அரசு காளையை பட்டியலில் இருந்து நீக்கியது செல்லுபடியாகிறது.தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் உடனே கிடைக்கிறது..
மேற்கண்ட ஜல்லிக்கட்டு தடை வரலாற்றில் மிகப்பெரிய துரோகத்தை செய்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு. உச்சநீதிமன்றத்தில் நிரந்தர தடை வாங்க வசதியாக இருந்த வினையூக்கி எதுவென்றால் 2011 ல் காளையை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்த்ததுதான். அதை கடைசிவரைக்கும் தன் சாதனையாகவும்,பாஜக அரசு அதை அரசியலுக்காக நீக்குவதாகவும் ஜெய்ராம்ரமேஷ் வெளிப்படையாக பேட்டி கொடுத்தார். ஜல்லிக்கட்டு ஒரு காட்டுமிராண்டி நிகழ்வு என்றும் பேசினார்.
அதுமட்டுமல்ல2015 ஜனவரியில் ‘humane society international’ என்ற அமைப்பின் தலைவருக்கு ஜல்லிகட்டு தடை வாங்கியதற்கு வாழ்த்து தெரிவித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருக்கிறார் அதுவும் வெளியாகியுள்ளது. இந்த அளவிற்கு மொத்த காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசும் தமிழ் ஹிந்துக்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை அழிக்கப் பார்த்தார்கள். ரேக்களா,கம்பாலா என இந்தியா முழுக்க நடக்கும் எல்லாம் பாரம்பரிய விளையாட்டையும் முடக்கப் பார்த்தார்கள்.
இப்போது ராகுல்காந்தி ஜல்லிக்கட்டை பார்வையிட வருகிறார் என்று கூசாமல் சொல்கிறது காங்கிரஸ். தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க நினைத்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு. அதை காத்தது பாஜக(மோடி) – அதிமுக(ஓபிஎஸ்) அரசு என்பதை யாராலும் மறுக்கவோ,மறக்கவோ முடியாது. மக்களின் எழுச்சியை அவர்களது கலாச்சார பெருமையை உள்வாங்கிக் கொண்டது ஹிந்துத்துவ அரசுதான். எனவே,இப்போது நாம் சொல்ல வேண்டும் #GoBackRahul என்று கோரிக்கைகளை முழக்கி வருகின்றனர் தமிழர்கள்.