
மதுரை – தூத்துக்குடி அகல ரயில் பாதை பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் வருடத்தின் இறுதி நாளான நேற்று, அனைத்து தொழிலாளர்களையும் கொண்டு அகல ரயில் பாதை முடிக்கக்கூடிய பணியை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டது. இதனால் வட மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய அனைத்து ரயில்களும் சுமார் 3 மணி நேரம் கால தாமதமாக திண்டுக்கல் முதல் மதுரை வரையிலான இடைப்பட்ட ரயில் நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், பயணிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப் பட்டது. ரயில்வே துறை முன் அறிவிப்பு செய்யாததால் பயணிகள் பலர் சோழவந்தான் ரயில் நிலையத்தில் இறங்கி கோவில்பட்டி திருநெல்வேலி தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு பஸ்களில் செல்ல கூட்டமாக வந்து அவதிப் பட்டனர்.
இதில் கைக் குழந்தைகள் பெண்கள் உட்பட பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். குடிக்க தண்ணீர் இல்லாத பெரியவர்கள் மாத்திரை எடுக்கக் கூடியவர்கள் சரியான நேரத்தில் உணவு உண்ணாததால் உடல் உபாதைகள் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த வள்ளிநாயகம் என்பவர் தெரிவித்த போது, நாங்கள் நேற்று இரவு சென்னையில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்தவர்கள். திண்டுக்கல் வாடிப்பட்டி சோழவந்தான் ஆகிய இடங்களில் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளது. சென்னை தூத்துக்குடி முத்து எக்ஸ்பிரஸ் சென்னை செங்கோட்டை எக்ஸ்பிரஸ், சென்னை கொல்லம் எக்ஸ்பிரஸ் உள்பட சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த ரயில்கள் அனைத்துமே சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் கால தாமதமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகளுக்கு எந்தவித வசதியும் செய்து தரப்படாமல் மிகவும் அவதிப்பட்டனர் .
எங்களுக்கு எந்த வித முன் அறிவிப்பும் செய்யவில்லை நாங்கள் ரயில் நிற்கக் கூடிய இடங்களில் குழந்தைகளுக்கு தண்ணீருக்கு அலைந்தோம். ரயில் நிலையங்களில் குடிக்க தண்ணீர் வசதி இல்லை ஏதோ சோழவந்தானில் குடிக்க தண்ணீரும் குடிப்பதற்கும் அருந்துவதற்கு சில இடங்களில் வைத்திருந்தனர்
இருந்தாலும் நாங்கள் 9 மணிக்கு நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வேண்டும் தூத்துக்குடியில்! தற்போது இங்கேயே பத்து மணி ஆகிவிட்டது. நாங்கள் தனியாக வேன் பிடித்து பொருட் செலவு செய்தும் கால விரயம் ஆனதால், குறித்த நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் மன வருத்தத்தில் உள்ளோம் என்று தெரிவித்தார்.