
அதிகப்படியான வெயில் கால்களில் படுவதால், கால்கள் வறண்டு விடுகிறது. மேலும் கால்களில் உள்ள எண்ணெய் பசையையும் வெயில் உறிஞ்சிவிடுவதோடு, கால்களும் மென்மையை இழந்துவிடும்.
மேலும் சிலர் பாதங்களைச் சுத்தமாக வைத்து கொள்வதில்லை. இதனால் பாத வெடிப்புகள் வரும். அதைப் போக்க உதவும் சில எளிய வழிகள் என்ன என்று பார்ப்போம்.
எலுமிச்சை பழத் தோல்
எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தைச் சுத்தமாக்கும். மேலும் கிருமிகளையும் ஒழிக்கும்.
கடுகு எண்ணெய்
தினமும் இரவு தூங்கும் போது, கடுகு எண்ணெயை பாத வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் பாத வெடிப்பு பிரச்சனை சரியாகும்.
தேன் மற்றும் சுண்ணாம்பு
தேன் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்றாக குழைத்து கொள்ளவும். பின்பு இந்த கலவையை இரவு தூங்கும் போது கால்களில் போட்டு வந்தால் பாத வெடிப்புகள் மறைந்து விடும்.
சொரசொரப்பான கற்கள்
தினமும் குளிக்கும் போது சொரசொரப்பான கற்களில் உங்கள் கால்களை தேய்த்தாலும் பாதத்தில் உள்ள வெடிப்புகள் மறைந்து விடும்.
தேங்காய் எண்ணெய்
தினமும் இரவு தூங்கும் போது கால்களில் தேங்காய் எண்ணெயை தடவி வந்தாலே கால்களில் உள்ள வெடிப்புகள் சரியாகும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கைகாய வைத்து தூளாக்கிப் பின் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும் வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதம் மிளிரும்.
வேப்பிலை மற்றும் மஞ்சள்
சிறிதளவு வேப்பிலை, சிறிதளவு மருதாணி மற்றும் சிறிதளவு பச்சை மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து பாத வெடிப்பு உள்ள இடத்தில் போட்டு வர பாத வெடிப்புகள் சரியாகும்.
வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து நீரில் கழுவ குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.
பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவலாம். இதை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், பித்த வெடிப்புகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்
இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு அந்த நீரில் கால்களை சில நிமிடங்களுக்கு வைத்திருந்து கால்கள் சுத்தமான பின் எடுத்து துடைக்க வேண்டும். இதேபோல் சுடுநீரில் ஷாம்பு கலந்தும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் பாதங்கள் மற்றும் விரலிடுக்கில் உள்ள அழுக்குகள் வெளியேறும். இதனால் பாதங்கள் மென்மையாகும்.
மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை படிக்கல்லால் (Pumice stone) பாதங்களின் ஓரம் மற்றும் அடிப்பகுதியில் தேய்த்து மசாஜ் செய்வதால், ரத்த ஓட்டம் சீராவதோடு வெடிப்புகளும் நீங்கும். மசாஜ் செய்த பின்பு வெதுவெதுப்பான நீரில் பாதங்களை கழுவிக் கொள்ள வேண்டும்.
வாசலின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை தூங்குவதற்கு முன்பாக பாதங்களில் தடவி வந்தால் பித்த வெடிப்பு பிரச்னையிலிருந்து விடுபடலாம். தினமும் பாதங்களில் மாய்ச்சரைசிங் க்ரீம்களை தடவிக் கொள்ளும்போது சருமத்தின் ஈரப்பதம் காக்கப்படுவதால் வெடிப்புகள் உண்டாகாது.
மாய்ச்சரைசர்கள் பயன்படுத்தும்போது சருமம் சற்று ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். குளித்த உடன் ஈரப்பதம் இருக்கும் போதே மாய்ச்சரைசரை தடவ வேண்டும். அப்போது தான் இது தோலின் அடி ஆழம் வரை சென்று நல்ல பலனைக் கொடுக்கும்.
ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் அல்லது வைட்டமின் இ ஆயிலும் பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் தடவி வரலாம் அல்லது இவற்றை மாற்றி மாற்றி ஒரு நாள் க்ரீம், ஒரு நாள் ஆயில் என்றும் தடவி வரலாம்.தினசரி உபயோகத்திற்கு காலணிகள் வாங்கும்போது அதி உயரமான காலணிகள் ஹீல்ஸ் வைத்த காலணிகள் வாங்கக்கூடாது. மென்மையான காலணிகளையே அணிய வேண்டும். வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் கண்ட மருந்துகளை எல்லாம் தடவுவது சரியான தீர்வு அல்ல.
பாதங்களின் ஈரப்பதத்தை பாதுகாக்க வாசலைன், ஃபுட் கிரீம், மாய்ச்சரைசர்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதை விடவும் வீட்டில் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெய்களில் எதாவது ஒன்றை ஒரு கிண்ணத்தில் சிறிதளவு ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்தில் அது கெட்டியாக மாறி விடும். அதனை க்ரீம் போல தினமும் இரவில் படுக்க போகும் முன் பாதங்களில் தடவிக்கொள்ளலாம். கிளிஞ்சல் மெழுகு என்றொரு மருந்து நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.
அதனை விளக்கெண்ணெயுடன் கலந்து தடவலாம். நம் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு நாம் அனைவரும் வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுப்பது உடல் சூட்டினை குறைக்கும்.