
எளியவர்களும் பிரியாணி சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தில் ரூ.20க்கு பிரியாணி விற்பனை வருகின்றார்கள் சதீஷ் -ஷப்ரீனா தம்பதியினர்.
அந்த 20 ரூபாயும் கொடுத்து சாப்பிட முடியாதவர்களுக்காக, ‘பசிக்கின்றதா எடுத்துக்கோங்க.. அன்புடன் ஷப்ரீனா’என்று விளம்பரம் வைத்து இலவசமாக பிரியாணி பொட்டலம் வழங்கி வருகின்றனர் ஆச்சரியத்தம்பதியினர்.

சொந்தமாக தொழில் தொடங்க லட்சக்கணக்கில் எல்லாம் தேவையில்லை. 7 ஆயிரம் அல்லது10 ஆயிரம் இருந்தாலே போதும் என்று நம்பிக்கையை தருகிறார்கள் சதீஷ் – ஷப்ரீனா தம்பதியினர். சென்னையை சேர்ந்த இத்தம்பதியினர் கோவை புளியகுளம் ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருகிறார்கள்.
வீட்டின் முன்பாகவே சாலையோர பிரியாணி கடை போட்டிருக்கிறார்கள்.
இங்கே பிரியாணி வெறும் 20 ரூபாய்தான். வியாபாரம் பெருகி நல்ல லாபம் வரும் நிலையில் 20 ரூபாய் என்பதையும் குறைத்து 15 ரூபாய்க்கு பிரியாணி வழங்க முடிவு செய்திருக்கிறோம் என்கிறார்கள்.

திருப்பூரில் முட்டை கடை நடத்தி வந்த சதீஷிடம் பிஎஸ்சி சைக்காலஜி படித்துள்ள ஷப்ரீனா, வீட்டிலேயே சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்கலாம் என்று சொல்லியிருக்கிறார். என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்தபோது, நாலு பேருக்கு பிரயோசனம் இருக்கும்படியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து, பிரியாணி கடை நடத்தலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள். சாலையோர பிரியாணி கடைகளில் எல்லாம் குறைந்த விலையே 50 ரூபாய்தான். ஆனால், அதை வாங்கி சாப்பிட வழி இல்லாதவர்களுக்கும் வசதியாக 20 ரூபாயில் கொடுப்பது என்று முடிவெடுத்து அதன்படியே செய்து வருகிறார்கள்.
அந்த 20 ரூபாய் கொடுத்தும் சாப்பிட வழி இல்லாதவர்களுக்காக, ‘பசிக்கின்றதா எடுத்துக்கோங்க.. அன்புடன் ஷப்ரீனா”என்று சிலேட்டில் எழுதிவைத்து, ஒரு அட்டைப்பெட்டியில் பிரியாணி பொட்டலங்களை வைத்து விடுகிறார்கள்.

அந்த பொட்டலங்கள் ஒவ்வொன்றாக குறையும் போதும் சந்தோசம் நிறைகிறது என்று நெகிழ்கிறார்கள். பிரியாணி பொட்டலங்களை எடுத்துச்செல்வோர் சாப்பிட்டுவிட்டு சொல்லும் வாழ்த்து போதும் என்று நிம்மதி கொள்கிறார்கள் இந்த மனிதாபிமான தம்பதிகள்.
குறைந்தவிலையிலும், இலவசமாகவும் கொடுப்பதால் எப்படி சமாளிக்க முடிகிறது என்கிற கேள்வி எழும். குறைந்த விலை, இலவசம் என்பதற்காக தரத்தில் ஒருபோதும் குறை வைப்பதில்லை. பாஸ்மதி அரிசியில்தான் பிரியாணி தயார் செய்கிறார்கள். இதில் நஷ்டம் ஏற்பட்டாலும் சிக்கன் மற்றும் பீப் சுக்கா விற்பனையில் அதை சரிக்கட்டி விடலாம்.
உழைப்புக்கு ஏற்ற வருமானம் வந்தால் போதும். பெரிதாக ஒன்றும் தேவையில்லை. பசியால் வாடுவோருக்கு தினமும் 100 பேருக்காவது சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பதுதான் இத்தம்பதிகளின் ஆசையாக இருக்கிறது.
இப்படிப்படிப்பட்ட மனிதாபிமானம் கொண்ட தம்பதியை கோவை மட்டுமல்லாது இவர்களின் சேவையை தெரிந்தவர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, தனது டுவிட்டர் பக்கத்தில், சதீஷ் – ஷப்ரீனா தம்பதியின் இந்த அன்னதான சேவையை, ”கோயம்புத்தூரில் உள்ள புலியகுளத்தில் உள்ள இந்த சிறிய சாலையோர பிரியாணி கடையால் எவ்வளவு பெரிய நன்மை! அவர்களிம் மனிதநேயம் அதன் சிறந்தது”என்று சொல்லி நெகிழ்கிறார்.
What a great gesture by this small roadside biryani shop in Puliakulam, Coimbatore.! Humanity at its best !!! ❤️ pic.twitter.com/VZYWgRzwaN
— RJ Balaji (@RJ_Balaji) April 15, 2021