மதுரை செல்லூர் பகுதியில் செல்லாத 5 பைசாவுக்கு பிரியாணி வாங்க மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் தெற்குவாசல் சுகன்யா பிரியாணி என்று புதிதாக பிரியாணி கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. முன்னதாக பிரியாணி கடை சார்பாக, செல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடை திறப்பு விழா குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
அந்த போஸ்டரில், பழைய செல்லாத 5 பைசா நாணயத்தை கொண்டு வருபவர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று திறப்பு விழா என்பதால், வீட்டிலிருந்த செல்லாத ஐந்து பைசா நாணயங்களை சேகரித்து மக்கள் செல்லூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.
மதிய வேளையில் 500-க்கும் மேற்பட்ட நபர்கள் 5 பைசா நாணயத்தை கையில் வைத்துக்கொண்டு பிரியாணி வாங்குவதற்கு கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக சமூக இடைவெளி இன்றி முகக்கவசம் இல்லாமல் 5paisa நாணயத்தை கொண்டுவந்து பிரியாணி வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடை உரிமையாளர்கள் ஒரு கட்டத்தில் அலைமோதிய மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல், பிரியாணி கடையின் ஷட்டரை இழுத்து மூடினார்கள்
.அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த பகுதிக்கு வந்து கூட்ட நெரிசலை போக்குவதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டமாக குவிந்து இருந்த மக்களை அப்பகுதியில் இருந்த அப்புறப்படுத்தினர்.
ஐந்து பைசா பழைய செல்லாத நாணயத்தை கொடுத்தால், பிரியாணி என்றவுடன் கூட்டம் கூட்டமாகக் கொரோனா நோய் தொற்றை மறந்து, பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி, குவிந்ததால், அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.