தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த புலவனூரில் ஏற்பட்டுள்ள ஒரு பிரச்னை, இப்போது இந்தப் பகுதியில் மீண்டும் ஒரு பதற்றமான சூழலைத் தோற்றுவித்துள்ளது.
ஜூலை 28 புதன்கிழமை இரவு சமூகத் தளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில், மத ரீதியாக பாகுபாடு பார்த்து பொய்ப் புகாரில் இந்துக்களை கைது செய்துள்ள காவல் துறையைக் கண்டிக்கிறோம் என்று கோஷம் எழுப்பி காவல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் பட்டுள்ளது தெரிந்தது.
அந்த வீடியோவுடன் மேலும் ஒரு வீடியோ வைரலானது. அதில், ஒரு வீட்டின் முன் கட்டியிருக்கும் இந்து முன்னணி கொடியை கழற்றுமாறு காவல் ஆய்வாளர் கூறுவதும், தொடர்ந்து அங்கிருக்கும் முதிய பெண்மணியை வழக்கு போட்டுவிடுவேன் என்று மிரட்டுவதும் என காட்சிகள் இருந்தன. கூடவே, ‘இந்து முன்னணி கொடியை அகற்றக் கூறி இந்து முன்னணி பொறுப்பாளரை மிரட்டியும், வயதான மூதாட்டி மீது FIR போடுவேன் என மிரட்டும் தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ரெகுராஜன்’ என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
இது குறித்து தென்காசி மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர் நம்மிடம் கூறிய போது…
இந்தப் பிரச்னை 6 மாதங்களுக்கு முன் ஓர் ஆக்கிரமிப்பு தொடர்பாக எழுந்தது… என்று குறிப்பிடும் அவர்கள், இது முழுக்க முழுக்க காவல்துறையினரின் பாரபட்சமான போக்கினால் ஏற்பட்ட விவகாரம் என்கின்றனர்.
ஒரு கிறிஸ்துவ சர்ச் செய்துள்ல அதிகார துஷ்பிரயோகத்தை வெளிக் கொண்டுவர… இவ்வளவு தூரம் நாமும் போராட வேண்டியிருக்கிறது. புகார்களுக்கு உடனே நடவடிக்கை எடுத்திருந்தால், இந்தப் பிரச்னை இவ்வளவுக்கு வளர்ந்திருக்காது. இப்போது, கடையம் காவல் துறையின் பாரபட்சமான செயலால் மத மோதல்கள் தலைகாட்டுகின்றன. இன்னும் என்னென்ன அமைதியின்மை ஏற்படப் போகிறதோ என்று தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினர்.
அந்தப் பகுதியில் பல வருடங்களுக்கு முன்பே இருந்த படி, ஆட்டோ டிரைவர் செல்லத்துரை தனது வீட்டை காம்பவுண்ட் சுவருடன் கட்டியுள்ளார். பின்னாளில், அருகில் கிறிஸ்துவ சர்ச் ஒன்று அந்தப் பகுதியில் முன்புற வாசல் வைத்து பெரிதாக கட்டப்பட்டது. அதன் மெயின் கேட் இருக்கும் பகுதிக்கு இடப்புறம் செல்லத்துரையின் வீட்டு காம்பவுண்ட் சுவர் இருந்துள்ளது.
முதலில் சர்வே எடுத்துச் சென்றபோது, இந்த இடம் செல்லத்துரையின் இடம்தான் என்று அதிகாரிகள் தெரிவித்ததால், அதை அடுத்து அவர் ஹாலோபிளாக் வைத்து சுற்றுச் சுவர் கட்டி மேலே ஆஸ்பெட்டாஸ் கூரையும் போட்டுள்ளார். அதே நேரம், சர்ச் நிர்வாகத்தினர் சர்ச் வாசலில் கேட்-க்கு அருகே இடதுபுறம் மேலும் ஒரு கேட் அமைத்து, வழியை விரிவாக்கியுள்ளனர். மேலும், அந்த கேட் திறந்தால், செல்லத்துரை வீட்டு காம்ப்வுண்ட் சுவர் தடுக்கிறது என்றும், அது ஆக்கிரமிப்பு இடம் என்றும் கூறி, அதை அகற்றுமாறு கூறினர்.
இதனிடையே, சர்ச் சுற்றுச் சுவரும் சர்ச் கட்டடத்தின் பின்புறமும் அரசு நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறது என்றும் அது ஓர் ஓடையினை வழிமறித்து முறைகேடாக கட்டப்பட்டிருக்கிறது என்றும் கூறி, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று காவல் துறையில் புகாராகக் கொடுத்துள்ளார் செல்லத்துரை. ஆனால் அந்தப் புகார்களுக்கு காவல் துறையில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லையாம். காவல்துறையினர் மெத்தனப் போக்குடனும் சர்ச் நிர்வாகத்துக்கு ஆதரவாகவும் இருந்தனர் என்கிறார் செல்லத்துரை.
இதே நேரம், இந்தப் பிரச்னையை முன்வைத்து, கடந்த மாதம் ஓர் இரவில், செல்லத்துரை வீட்டின் முன் உள்ள சுற்றுச்சுவரை இடித்து, அங்கே நிறுத்தப் பட்டிருந்த அவரின் ஆட்டோவை சேதப் படுத்தி, வீட்டின் கண்ணாடி ஜன்னல் உள்ளிட்டவற்றை உடைத்து சேதப் படுத்தி, செல்லத்துரை மற்றும் வீட்டில் உள்ளவர்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளது ஒரு கும்பல்.
இதை அடுத்து, ஆட்டோ டிரைவர் செல்லத்துரை, தனது வீட்டு காம்பவுண்ட் சுவரை இடித்து, ஆட்டோவை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக தனது வீட்டின் அருகில் உள்ள, பிரச்னைக்குரிய கிறிஸ்தவ சர்ச்சின் பாதிரியார் மீதும், அவரின் தூண்டுதலின் பேரில் 15 பேர் கொண்ட கும்பல் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கடையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதில், தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டு, போலீஸார் உடனடியாக சொந்த ஜாமீனில் அவர்களை வெளியில் விட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் செல்லத்துரையைச் சந்தித்து ஆறுதல் கூறி, ரூ.10 ஆயிரம் அவருக்கு நிதியுதவி அளித்துள்ளனர்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் மீதமுள்ள காம்பவுண்ட் சுவரை அகற்றுவதற்கும், சர்ச் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கும் ஜேசிபி இயந்திரத்துடன் வந்த போலீஸார், செல்லத்துரையிடம், அவர் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரில் இருந்த ஹிந்து முன்னணி கொடியைக் கழற்றுமாறு கூறியுள்ளனர். தொடர்ந்து ஜேசிபி இயந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்றத் தயாரான போது, கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வெளியே வந்த செல்லத்துரையைப் பிடித்துக் கொண்டு, காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சர்ச் தரப்பில், சுமார் 6 அடி அகலம், 70 அடி நீளத்துக்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் இடத்தை இடித்து அகற்ற போலீஸார் முயன்றுள்ளனர். ஆயினும் ஒரு பகுதி தான் இடித்து அகற்றப் பட்டிருக்கிறது என்றும், முழுமையாக இன்னும் சர்ச் நிர்வாகம் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு அகற்றப் படவில்லை என்றும் கூறுகின்றனர்.
இதனிடையே, செல்லத்துரை மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, அவர் கைது செய்யப் பட்டார் என்றும், செல்லத்துரையின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் வெகு இயல்பாக என்ன விஷயம் என்று போலீஸாரிடம் கேட்க வந்தார், அவரையும் கைது செய்திருக்கிறார்கள் என்றும் கூறும் இந்து முன்னணி வழக்கறிஞர்கள், அவர் வெளிநாட்டில் இருந்து அண்மையில் தான் வந்திருந்தார், மீண்டும் அவர் வேலைக்காக அங்கே திரும்ப வேண்டும், அவருடைய தந்தை இறந்துவிட்ட நிலையில், குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகள் அவரைச் சார்ந்தே உள்ள நிலையில், வெறுமனே வந்து விசாரித்த ஓர் இளைஞரையும் கூடவே மிரட்டி கைது செய்து இழுத்துச் சென்று போலிஸார் அவரது குடும்பத்தின் வாழ்க்கையையே நாசப் படுத்தியிருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
மேலும், சுற்றுச் சுவர் இடிக்கும் போது, அந்தப் பகுதி விஏஓ., அங்கே வரவே இல்லை. அந்த நேரம், செல்லத்துரை மண்ணெண்ணெய் கேனை தூக்கியதால், அவரை அங்கிருந்து போலீஸார் அழைத்துச் சென்றுவிட்டனர். அதன் பிறகுதான் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டது. அதன் பிறகு மெதுவாகத்தான் விஏஓ அங்கே வந்தார். ஆனால், போலீஸார் பதிவுசெய்துள்ள வழக்கில், விஏஓ.,வை பணி செய்யவிடாமல் தடுத்தார் என்று பொய்யாக ஜோடித்துள்ளனர் என்கின்றனர்.
செல்லத்துரை மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காவல் துறை தரப்பில் இருந்து என்ன காரணம் கூறுகிறார்கள் என்றால், நமது பொறுப்பாளர் கிராம நிர்வாக அலுவலரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தார் (IPC Sec 353), ஆபாசமாக பேசினார் (IPC Sec 294(b), மிரட்டல் விடுத்தார் (IPC Sec 506(i) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு உடனே சிறையில் அடைக்கப்பட்டார் என்று கூறுகிறார்கள். இந்த சம்பவம் சிசிடிவி கேமிராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த இடத்திற்கு விஏஓ வரவே இல்லை. சம்பவ இடத்திலேயே இல்லாத ஒருவரிடம் புகார் பெற்று நமது பொறுப்பாளர் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது… என்கின்றனர் இந்து முன்னணியினர்.
மேலும், கிறிஸ்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உடனே தங்கள் பிணையில் வெளியில் விட்ட காவல்துறையினர், செல்லத்துரை மீது பொய்யாக ஜோடித்து கைது செய்துள்ளனர். இதனால் தான் பாரபட்சமாக செயல்படும் காவல் துறையை கண்டித்து, நேற்று இரவு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது… என்றனர் இந்து முன்னணியினர்.
காவல்துறை அதிகாரிகள் இது குறித்துக் குறிப்பிட்ட போது, இது கொரோனா காலம் என்பதால், சொந்த பிணையில் விட்டுவிடுவோம், அதே நேரம் அரசுத் துறை அதிகாரிகள் தரப்பில் அளிக்கப் பட்ட புகாராக இருந்தால் மட்டுமே ரிமாண்ட் செய்ய வாய்மொழி உத்தரவு என்றனர்.
இதனால் தான் விஏஓ., புகார் அளித்ததாக வழக்கு பதிவு செய்யப் பட்டு செல்லத்துரை ரிமாண்ட் செய்யப் பட்டுள்ளார் என்று குறிப்பிடும் இந்து முன்னணி வழக்கறிஞர்கள், அவரையும் அவருடைய அடுத்த வீட்டு இளைஞரையும் பிணையில் எடுக்கும் முயற்சிகளில் இருக்கிறோம் என்று குறிப்பிட்டனர்.
இருப்பினும், இந்தப் பிரச்னைகள் எல்லாம் இருந்த நிலையில், செல்லத்துரை அண்மையில் தான் இந்து முன்னணி அமைப்பில் இணைந்துள்ளார். ஒருவரது சொந்தப் பிரச்னை, கூடவே அடுத்து ஒரு சர்ச் என்பதால் ஏற்பட்ட பொது பாதிப்பு, ஆக்கிரமிப்பு, தொந்தரவு இவற்றால் காவல் துறை வரை சென்று, காவல் துறையினரின் மெத்தன நடவடிக்கைகளால் இப்போது மத மோதல் அபாயத்தில் கடையம் பகுதி தள்ளப் பட்டிருக்கிறது.