
தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நடிகை நயன்தாரா கூறியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்துவருவது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான். இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்பதுதான் தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.

இந்நிலையில், தனது கையில் அணிந்திருக்கும் மோதிரம் குறித்து பேசியுள்ள நயன்தாரா, இது தனது நிச்சயதார்த்த மோதிரம் என கூறியுள்ளார்.
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படம் வரும் 13-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியாக ‘லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா’ என்ற நிகழ்ச்சி விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்குகிறார். மேலும் நயன்தாராவின் ரசிகைகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர் .

இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, நயன்தாரா கையில் அணிந்திருக்கும் மோதிரம் குறித்து கேட்க, ‘இது தனது என்கேஜ்மெண்ட் ரிங்’ என்கிறார் நயன்தாரா.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவர்க்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.