
திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் தேரோட்டம்.தங்கத்தேரில் சுவாமி எழுந்தருளி, கோவில் வளாகத்தில் தேரோட்டம் நடைபெற்றது…..
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் தேரோட்டம் இன்று காலை கோவில் வளாகத்திற்குள் நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, மிகப்பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஆண்டு தோறும், ஆடிப்பூரம் தேரோட்டம் விழா சிறப்பாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, ஆடிப்பூரம் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
ஆனாலும் ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளை தங்கத் தேரில் எழுந்தருளச் செய்து, கோவில் வளாகத்திற்குள் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டும் கொரோனா 2ம் அலை காரணமாக, கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் வழக்கமான திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
கடந்த 3ம் தேதி ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் தேரோட்ட விழாவிற்காக கொடியேற்றப்பட்டது. ஒரு வாரமாக பக்தர்கள் இல்லாமல், கோவில் நிர்வாகிகள், கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டு, கோவில் வளாகத்திற்குள் ஆடிப்பூரம் திருவிழா நடைபெற்று வந்தது. நேற்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

மேலும் மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்தும் ஸ்ரீஆண்டாளுக்கு அணிவிக்க பட்டு சேலை, மங்கலப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை தங்கத்தேரில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளுக்கு பட்டு வஸ்த்திரங்கள் அணிவிக்கப்பட்டு, கோவில் வளாகத்திற்குள் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கரதம் இழுத்து தேரோட்டம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். தேரோட்டம் நிகழ்ச்சியை காண பக்தர்கள், பொதுமக்களுக்கு அனுமதி வழங்காததால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இன்று காலை நடைபெற்ற ஆடிப்பூரம் தேரோட்டம் நிகழ்ச்சியை காணொலி காட்சி வழியாக நேரடி ஔிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே தேரோட்டம் நிகழ்ச்சியை கண்டு, ஸ்ரீஆண்டாளை மனதார வணங்கினர்.