தங்க மகன் நீரஜ் சோப்ரா தனது சின்னஞ்சிறிய கனவை நிறைவேற்றியிருக்கிறார். ஆம் முதன்முறையாக அவரது பெற்றோரை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார்.
அவரது பெற்றோர் விமானம் என்ற ஒன்றை நேரில் பார்ப்பதும், அதன் அருகில் சென்றதும், அதில் ஏறி அமர்ந்ததும், அதில் பயணித்ததும் இதுவே முதல்முறை. கிட்டத்தட்ட இதுவும் வாழ்நாள் கனவு. கனவை நீரஜ் பலிக்க வைத்திருக்கிறார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நீரஜ் சோப்ரா, “என்னுடைய மிகச்சிறிய கனவு இன்று நிஜமாகியுள்ளது. என்னுடைய பெற்றோரை முதன்முறையாக விமானத்தில் அழைத்துச் செல்வதை என்னால் நிகழ்த்தி காட்டியிருக்க முடிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதனுடன் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுக்கொடுத்தார் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா.
தடகளத்தில் இந்தியா பெறும் முதல் தங்க பதக்கம் இதுவாகும். அதேபோல 121 வருடங்களுக்குப் பிறகு தடகளத்தில் ஒரு பதக்கத்தை இந்தியா பெற்றது. இவ்வாறு பல்வேறு வரலாற்று சாதனைகளைப் புரிந்தார் நீரஜ் சோப்ரா.
அவரின் சாதனைகளைப் போற்றும் வகையில் இன்டிகோ நிறுவனம், நீரஜ் சோப்ரா 1 வருடத்திற்கு இன்டிகோ நிறுவன விமானங்களில் எவ்விதக் கட்டணமும் இன்றி பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது கவனித்தக்கது.