
உத்தரப்பிரேதசத்தில் குரங்கு ஒன்று மரத்தில் அமர்ந்து கொண்டு கட்டுக்கட்டாக பணத்தை அள்ளி வீசிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
குரங்குகளின் சேட்டைகள் எல்லையில்லாதவை. நமது வீடுகளில் குட்டி செல்லங்கள் பண்ணும் சேட்டைகளை பொறுக்காதவர்கள் குரங்கு சேட்டை பண்ணாதே என்று கடிந்து கொள்வது உண்டு. காரணம் குரங்குகளின் சேட்டை அப்படி. ஒருவர் பண்ணுவதை அப்படியே திருப்பி பண்ணி காட்டுவதில் குரங்குக்கு ஈடு இணை ஏதும் இல்லை என்று சொல்லலாம்.
அப்படிப்பட்ட குரங்கு ஒன்று செய்த காரியம் தான் இப்போது உத்தரப்பிரதேசம் முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள ராம்பூர் மாவட்டம் ஷாகாபாத் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் சர்மா.
வழக்கறிஞரான இவர் முத்திரை தாள் வாங்க தமது பையில் 2 லட்சம் ரூபாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. எங்கிருந்தோ வந்த குரங்கு ஒன்று அவர் வைத்திருந்த பையை எடுத்து கொண்டு மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டது.

என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த வினோத்குமாருக்கு அடுத்த அதிர்ச்சி. பையை ஏதோ தமது சொந்த பை போல நினைத்த குரங்கு உள்ளே இருந்த பணத்தை எடுத்து அதை பிரித்து மரத்தில் இருந்து தாவி குதித்தபடியே விசிறியடித்து சேட்டை பண்ணியது.
வினோத்குமார் நிலைமை கண்டு அங்கு கூடியிருந்தவர்கள் குரங்கு வீசிய பணத்தை இஷ்டம் போல கலெக்ட் பண்ண ஆரம்பித்துவிட்டனர். பணத்தை எடுத்த சில பேர் தான் வினோத்குமாருக்கு தந்தனர். அவருக்கு வெறும் 95 ஆயிரத்தை தான் கொடுத்தனர். மற்றது அனைத்தும் ஸ்வாகாவாகி விட்டது.
இத்தனை சேட்டைகளுக்கும், குழப்பங்களுக்கும் இடையே வழக்கம் போல தமது செல்போனில் படம்பிடித்தது தான் வேடிக்கை. பின்னர் அந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டது.