
நாகை மாவட்டம்,கீழ்வேளூர் வட்டம், தேவூர் அருள்மிகு தேவபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் பூமியில் புதையுண்டிருந்த சுவாமி, அம்பாள் சிலைகள் மற்றும் பூஜைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
தேவூரில் உள்ள அருள்மிகு தேன்மொழியாள் உடனுறை தேவபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கோட்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.

தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரையில் உள்ள 85-ஆவது தலமாகப் போற்றப்படுகிறது. இத்தல இறைவன் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிக்கிறார்.
இக்கோயில் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பணியாள்கள் கோயில் வளாகத்தில் குழி எடுத்தபோது, சுவாமி சிலைகள் மற்றும் பூஜைப்பொருள்கள் பூமியில் புதையுண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கீழ்வேளூர் வட்டாட்சியர் எஸ்.மாரிமுத்து முன்னிலையில் பூமியில் புதையுண்டிருந்த 8 சுவாமி சிலைகளும், 12 பூஜைப்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மற்றும் பூஜைப் பொருள்கள் அனைத்தும்
ஐம்பொன்னால் செய்யப்பட்டவையாக இருக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

13 அம்பாள் சிலைகளும், திருவாச்சியுடன் அமைந்துள்ள பிரதோஷ நாயனார் சிலை ஒன்றும் சங்கு, சூலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பூஜைப் பொருட்களும் கிடைக்கப்பெற்றன.

இதனையடுத்து ஜேசிபி இயந்திரம் கொண்டு மேலும் தோண்டப்பட்டது. இதனால் இன்னும் பல சிலைகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கோயில் வளாகத்தில் தொடர்ந்து ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.