சட்ட விதிகளின்படி, காஸ் சிலிண்டரை எடை பார்த்து வினியோகிக்க வேண்டும் என, நுகர்வோர் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் தலைமை வகித்தார். பல்வேறு நுகர்வோர் நல அமைப்புகள் பங்கேற்று, பொதுமக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசினர்.
நல்லுார் நுகர்வோர் நலமன்ற தலைவர் சண்முகசுந்தரம் பேசுகையில்,’ நுகர்வோருக்கு வழங்கும் முன், சிலிண்டரை எடைபார்த்து வழங்க வேண்டும். எடை குறைவான சிலிண்டரை எடுத்து வந்து, மக்களை ஏமாற்றி, குறைவான விலைக்கு விற்பது அதிகரித்துள்ளது,” என்றார்.
சிலர், சிலிண்டர் வினியோகத்தின் போது, 50 ரூபாய் அதிகம் வசூலிக்கப் படுவதாகவும், வாகனத்தில் இருந்து சிலிண்டர் துாக்கி வீசப்படுவதாகவும் புகார் அளித்தனர்.
நகரப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில், இலவச ‘ஏர்’ பிடிக்கும் சேவை கிடைப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினர்.