உண்மைகளின் உண்மை
~ ஆர். நடராஜன் ~
புள்ளி விவரங்கள் முழுப் பைகள் அல்லது அரைப்பைகள் என்பதுதான் உண்மை. அப்படியிருக்க எதற்காக எப்படி எடுக்கப்பட்ட புள்ளி விவரம் என்பதை புரிந்துகொள்ளாதவர்கள் அதைப் பெரிதுபடுத்தி மக்களிடம் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். பொய் என்று தெரிந்தும் அதை அரசியலுக்காக பயன்படுத்தும் நபர்களும் உண்டு.
அப்படித்தான் இப்போது ஒரு பிரச்சாரம் நடந்துவருகிறது. அதான் தொழிலதிபர் அதானி தினமும் 1000 கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார்… அவரது சொத்து மதிப்பு 5லட்சம் கோடிக்கும் மேல். முகேஷ் அம்பானியின் சொத்தும் லட்சக்கணக்கான கோடிகளில்.
பங்கு சந்தை பற்றி விவரம் தெரியாத பாமர மக்கள் அய்யய்யோ இவர்களிடம் இவ்வளவு பணம் இருக்கிறதா என்று அதிர்ந்து போவார்கள்.
அப்படி அதிர்ந்து போகச் செய்யத்தான் புள்ளிவிவரங்கள் தவறான முறையில் எடுத்துக் காட்டப் படுகின்றன. தனி மனிதர் பெயரில் அவரது சொந்தக் கணக்கில் இருக்கும் பணத்தை வைத்தே ஒருவரை பணக்காரர் என்பதை சொல்லமுடியும்.
அவர் நடத்தும் நிறுவனத்தின் சொத்து மதிப்பு, பங்குதாரர்களின் முதலீடு அது அவருக்கு முழுவதும் பாத்தியப்பட்ட சொத்து அல்ல. பங்குகளின் மதிப்பு கூடும்; குறையும், ஒரேயடியாக சரியும். இது தெரிந்தும் மக்களை குழப்புவதற்கென்றே சில விவாதங்கள் நடைபெறுகின்றன.
அந்தக் காலத்தில் டாட்டா, பிர்லா என்றார்கள். இந்தக் காலத்தில் அம்பானி, அதானி என்கிறார்கள். இந்த தொழிலதிபர்களின் தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதற்கு விலை கொடுக்கிறார்கள்.
அந்த வருமானத்தில் நடைபெறும் நிறுவனங்களில் பங்குகளை பங்கு முதலீட்டார்கள் வாங்குகிறார்கள் லாபத்தில் பங்கு பெறுவதற்காக! இந்தப் பொருளாதாரச் சுழல், சூழல் புரியாத பாமர ஜனங்களை அரசியல்வாதிகளும், அரசியல் சார்ந்த ஊடகங்களும் மிக நன்றாக பயன்படுத்திக்கொள்கின்றன.
இது மிகவும் பாடுபட்டு சம்பாதித்த செல்வந்தர்கள் மீதும் ஒரு வெறுப்பு உணர்வு தோன்ற காரணமாகும். இந்த நிலை தொடர்வது நாட்டின் தொழில் வர்த்தகத் துறைக்கும், வியாபார நுகர்வுக்கும், சமூக நலனுக்கும் உகந்தது அல்ல.
மக்களுக்கு பொருளாதாரம் புரியவில்லை என்பதற்காக நம் நாட்டில் அரசியல் நடத்தப்படுகிறது என்பதுதான் உண்மைகளில் பெரிய உண்மை.
‘கும்பி எரியுது குடல் கருகுது உங்களுக்கு ஊட்டி குளுகுளு வாசம் ஒரு கேடா’ என்று கேட்டவர்கள் இன்று குளுகுளு வாசத்தில் தான் இருக்கிறார்கள்… குடிசையில் இல்லை. அவர்களால் ஆளப்படுபவர்களால் தான் கும்பி எரியுது குடல் கருகுது.