தமிழகத்திலிருந்து நடைபயணமாக திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேற்று வருகை புரிந்தார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழகம் – புதுச்சேரிக்கான உள்ளூர் ஆலோசனைக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.ஜெ.சேகர் ரெட்டியிடம், புதிய பொறுப்புகளின் பணி ஆணையை வழங்கியுள்ளார். ஏ.ஜெ.சேகர் ரெட்டி 2வது முறையாக நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை தியாகராயநகரில் பத்மாவதி தாயார் கோவில் கட்டுமான பணி வேகமாக நடந்து வருவதாகவும் இந்த பணிகள் ஓராண்டில் நிறைவடைந்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் நடைபயணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ஒவ்வொரு 20 – 30 கிலோ மீட்டரில் பல்வேறு வசதிகளுடன் கூடிய நிரந்தர தங்கும் விடுதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
திருமலை – திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் ஸ்ரீவாரி கோவில் கட்டுவதற்கு பழைய மகாபலிபுரம் சாலை அல்லது கிழக்கு கடற்கரை சாலையில் இடங்களை ஒதுக்கித் தர தமிழக அரசு சம்மதித்துள்ளதாக செய்தியாளர்களிடம் சுப்பா ரெட்டி கூறியுள்ளார்.
ஸ்ரீவாரி கோயிலுக்கு பொருத்தமான நிலப்பரப்பை முடிவு செய்து பூமி பூஜை நடத்தப்பட்டு கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.