ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்தார்.
புராண – இதிகாச காலத்தில் பிரம்மனே திருமலைக்கு வந்து மலையப்பசாமிக்கு பிரம்மோற்சவ விழாவைக் கொண்டாடியதாக ஐதிகம். இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுவதை முன்னிட்டு பூலோக வைகுண்டமாக மாறியுள்ளது. மின்விளக்கு, மலர் அலங்காரத்தில் கோவில் ஜொலிக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா கடந்த 7ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. தினசரியும் மலையப்ப சாமி ஒவ்வொரு வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
பிரமோற்சவத்தை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, திருமலை முழுவதும் கூட்டம் நிரம்பி வழியும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி ஏகாந்தமாக வாகன சேவை நடைபெறுகிறது.
முதல்நாள் இரவு பெரிய சேஷ வாகனத்திலும் இரண்டாம் நாள் காலையில் சின்ன சேஷ வாகனத்திலும் எழுந்தருளினார். அன்னவாகனம், சிம்ம வாகனம், முத்துப்பந்தல் வாகனம், கல்ப விருட்ச வாகனம், சர்வபூபால வாகன சேவையிலும் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
பிரமோற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். அப்போது ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் நாச்சியார் சூடி கொடுத்த கிளியுடன் கூடிய மாலை அணிந்து அருள்பாலித்தார்.
மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை ரசித்தபடி கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்.
நேற்று இரவு பெரிய திருவடி எனப்படும் கருடவாகன சேவை நடைபெற்றது. ஏழுமலையானின் வாகனமான கருடன் மீது அமர்ந்து அவர் காட்சி தரும் விதமாக, கோயிலின் உள்ளேயே மலையப்பசுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
மூலவருக்கு ஆண்டு முழுவதும் அலங்கரிக்கப்படும் லட்சுமி ஆரம் கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது. மேலும் தங்க, வைரம், பச்சை மரகதகற்கள் பதிக்கப்பட்ட சிறப்பு ஆபரணங்களால் மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் அர்ச்சகர்கள் மரியாதை செய்தனர். ஆந்திர அரசு சார்பில் மூலவரான ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் அளிக்கப்பட்டது.
பேடி ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு வந்து சமர்ப்பித்தார். பின்னர் கருட சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து, ரங்கநாதர் மண்டபத்தில் 2022ம் ஆண்டுக்கான தேவஸ்தான டைரி, காலண்டரை வெளியிட்டார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
ஆறாம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி சிறிய திருவடி எனப்படும் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார். வரும் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவை, கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் ஏகாந்தமாக நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ நாட்களில் தினமும் 3 முதல் 3.5 லட்சம் லட்டு பிரசாதங்கள் நிலுவையில் இருக்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
முன்னதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மருத்துவமனை வளாகத்தில் தேவஸ்தானம் சார்பில் ரூ.25 கோடியில் கட்டப்பட்ட குழந்தைகளுக்கான இருதய மருத்துவமனையை திறந்து வைத்தார்.
அங்கிருந்து அலிபிரிக்கு சென்றார். அங்கு அலிபிரியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் செல்லும் நடைபாதை ரூ.25 கோடியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நன்கொடை மூலம் புனரமைக்கப்பட்டது. அதனை பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரியில் திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும், தமிழகம், புதுச்சேரி தேவஸ்தான கோயில்களின் ஆலோசனை குழு தலைவருமான ஏ.ஜெ.சேகர் நன்கொடை மூலம் ரூ.15 கோடியில் கட்டப்பட்ட பசு பிரதட்சண மையத்தை (கோ மந்திரம்) திறந்து வைத்தார்.
இதில் அமைக்கப்பட்டுள்ள 7 பசு பிரதட்சண சாலை, பசுகோயில், பசு துலாபாரம் அமைக்கப்பட்டுள்ளதை முதல்வர் ஜெகன்மோகன் திறந்து வைத்தார்.