பணம் இல்லாத நிலையில் வீட்டை எதற்காக பூட்டினீர்கள் என துணை ஆட்சியர் வீட்டிற்கு திருட வந்து ஏமாந்து போன திருடன் கடிதம் எழுதிய சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் தேவாஸ் மாவட்டத்தின் காடேகான் நகரில் துணை ஆட்சியர் திரிலோச்சன் கவுருக்கு சொந்தமான வீடு உள்ளது. கடந்த இரு வாரங்களாக வெளியூர் சென்றிருந்த அவர் கடந்த சனிக்கிழமை அங்கு சென்றார்.
அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் கலைந்து கிடப்பதைக் கண்டார். உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் வந்து சம்பவம் நடந்த இடத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அதை படித்து பார்த்த போலீஸாருக்கு ஆச்சரியமும் சிரிப்பும் வந்தது. அந்த கடிதத்தில் திருடன் துணை ஆட்சியர், அதாவது வீட்டின் உரிமையாளருக்கு ஒரு குறிப்பு எழுதியிருந்தார். அதாவது பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதுக்கு கலெக்டரே? என எழுதப்பட்டிருந்தது.
இந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. திருடச் சென்ற வீட்டில் எதுவும் சிக்காததால் மன உளைச்சலுக்குள்ளானதால் இது போல் கடிதம் எழுதிவிட்டு சென்றது அப்பகுதி மக்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் அந்த திருடன் துணை ஆட்சியரின் நோட் பேட், பேனாவை கொண்டே எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.
செப்டம்பர் 20ஆம் தேதி ஊருக்குச் சென்றுவிட்டு அக்டோபர் 9ஆம் தேதி வீடு திரும்பும் போது தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ 30 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் காணாமல் போனதாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
போலீஸார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார். இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் அந்த மாநிலத்தின் உயர் காவல் துறை அதிகாரிகள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இத்தனை காவல் துறை அதிகாரிகள் வசிக்கும் பகுதியில் தைரியமாக வந்து கொள்ளையடித்ததோடு கடிதம் எழுதி வைத்த சம்பவம் குறித்து மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது