
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவக்க, தமிழக அரசு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்’ என அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வலியுறுத்தி உள்ளார்
தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு அவர் விடுத்து உள்ள வேண்டுகோள் அறிக்கை: நாடு முழுதும் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில், 638 நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், உறைவிட பள்ளிகளாக செயல்படுகின்றன.
இந்த பள்ளிகளில் 75 சதவீதம், ஊரக பகுதி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஐ.ஐ.டி., சேர்க்கைக்கான ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெறுவோரில் 20 சதவீதம் பேர், நவோதயா பள்ளி மாணவர்கள்.
அதேபோல, ‘நீட்’ தேர்வில் 80 சதவீதம், நவோதயா பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். இந்த அளவுக்கு சிறப்பாக செயல்படும் நவோதயா பள்ளிகளை, தமிழகத்தில் திறக்க அனுமதி வழங்காமல், தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சிகள் தடுத்து வருகின்றன.

கடந்த 2017ல் கன்னியாகுமரியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொது நல வழக்கு தொடர்ந்தது. அதில், அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு நவோதயா பள்ளி திறக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதைய, அ.தி.மு.க., அரசு இந்த பணியை துவங்கவில்லை.
நவோதயா பள்ளி விதிகளின்படி, அந்த பள்ளிகள் அமைந்துள்ள மாநில மொழிகளே, முதல் மற்றும் பயிற்று மொழியாக கடைப்பிடிக்கப்படும்.
இதை பார்க்கும் போது, தமிழக மொழி கொள்கைக்கு மாற்றம் இல்லாமல், நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் செயல்பட முடியும். எனவே, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பும் தமிழக அரசு, நவோதயா பள்ளிகளை திறக்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசியல் கட்சிகள் அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.