
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆர்கிட் மலர்கள் பூக்க தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பல்வேறு வகையான ‘ஆர்கிட்’ மலர்கள் பூத்து காணப்படுகிறது.
ஆர்கிடேசி’ என்ற தாவர குடும்பத்தை சேர்ந்த பூக்கும் தாவரங்களான இவை, தாவர குடும்பங்களிலேயே இரண்டாவது மிகப்பெரிய பூக்கும் தாவர குடும்பமாக உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், வடகிழக்கு இந்திய பகுதிகளிலும் இயற்கையாக காணப்படுகிறது. அதில், 763 பேரினங்களும், 28 ஆயிரம் சிற்றினங்களும் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இம்மலர்கள் பூத்த பின்னர் பல நாட்கள் வாடாமல் இருக்கும். நீலகிரி மாவட்டத்தில் ஆர்க்கிட் வனப்பகுதிகளில் காணப்படுவது மட்டுமின்றி, நாடுகாணி ஜீன்பூல் தாவரவியல் மையம், ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதி, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ஆர்க்கிட் தாவர வளர்ப்பகத்தில் பெலானோப்சிஸ், டென்ட்ரோபியம், சிம்பிடியம், கேட்லியா உள்ளிட்ட 4 ரகங்களில் ஏராளமான ஆர்க்கிட் நாற்றுகள் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் ‘டென்ட்ரோபியம்’ மற்றும் ‘கேட்லியா’ ஆர்கிட் மலர்கள் பூக்க துவங்கியுள்ளன. இதுதவிர சிம்பிடியம் வகையில் வேறு ரகங்கள் சிக்கிம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு திசு வளர்ப்பு கூடத்தில் நாற்றுகள் உருவாக்கப்பட்டு தொட்டிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.