spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?வைரலாகும் அரசுப்பள்ளி ஆசிரியரின் ஆதங்க கடிதம்!

வைரலாகும் அரசுப்பள்ளி ஆசிரியரின் ஆதங்க கடிதம்!

- Advertisement -

கொரோனாவின் தாக்கம் மெல்ல, மெல்லக் குறைந்து நாடு இயல்பு நிலைக்குத் திரும்பிவரும் நிலையில், தற்போது ஒமைக்ரான் வந்து மக்களின் மனநிம்மதியைக் குறைத்துள்ளது.

அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், மீண்டும் லாக்டவுன் வருமா, அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்படுமா என்பது குறித்தெல்லாம் மக்கள் விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

‘அப்படி மீண்டும் லாக்டவுன் வந்து பள்ளி, கல்லூரிகளுக்கு முழு விடுமுறை அளிக்கப்பட்டால், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத்தை 33 சதவீதமாக குறைக்கவேண்டும்.

இதை 50 சதவீதம் என வைத்து, 17 மாதங்களாக வழங்கிய சம்பளத்தை மாதம் 17 சதவீதம் எனப் பிடித்தம் செய்வது அவசியம். மக்களின் வரிப்பணத்தை எடுத்துக் கண்டமேனிக்கு வேலை செய்யாதோருக்கு அளிப்பதும் மனித உரிமை மீறலே’ என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் யோசனைகளை முன்வைக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் ஆசிரியர்கள் வேதனை அடைந்திருக்கும் நிலையில், மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஒருவர், ‘எடுப்பார் கைப்பிள்ளையா ஆசிரியர்கள்?’ என்ற தலைப்பில் ஆசிரியர்களின் ஆழ்மன சங்கடங்களை, தொகுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அது ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களாலும் பகிரப்பட்டு வருகிறது.
ஆசிரியரின் மிகநீளமான அந்தப் பதிவிலிருந்து சுருக்கப்பட்ட வடிவம் இது.

எடுப்பார் கைப்பிள்ளையா ஆசிரியர்கள்?

ஆசிரியர்களை மதிக்காத, சொல்பேச்சு கேட்காத, வீம்புக்கு வம்பிழுக்கும் பல மாணவர்கள் பல பள்ளிகளிலும் படிக்கிறார்கள். எந்த வயலிலும் களைகளை ஊக்கப்படுத்தி, உரமிட்டு விளைச்சல் கொடுக்கும்படி எதிர்பார்ப்பதில்லை. களையெடுத்தால்தான் மற்ற பயிர்கள் செழிக்கும்.

‘இவ்வாறு கருத்திட வெட்கமில்லையா’ என வெகுண்டெழவும், ‘இது உங்கள் பலகீனம்’ என்று வெசனப்படவும், ‘இது உங்களின் இயலாமை’ என்று ஏளனம் செய்யவும், ‘இத்தகையோரை சீர்படுத்துவதே உங்கள் கடமை’ என அறிவு பகரவும் நீங்கள் தலைப்படலாம். உண்மைதான். இதைப் பதிவிட வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்; எங்கள் இயலாமையை எண்ணி நாணுகிறேன்.

எதிர்காலச் சமுதாயத்தைக் கட்டமைப்பவர்கள் என்று நீங்களே கூறும் ஆசிரியர்களுக்கு எத்தகைய அதிகாரத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள்? பரட்டைத் தலையுடன் வருபவனை முடிவெட்டச் சொல்லவோ, ஜட்டிதெரிய பேன்ட் போட்டால் ஏற்றிப் போடச்சொல்லவோ, கஞ்சா, பாக்கு வைத்திருந்தால் பறிமுதல் செய்யவோ அதிகாரமில்லை.

செல்போன் இருந்தால் எடுக்க முடிந்தால் எடுத்துப் பெற்றோரிடம் கொடுக்க வேண்டும். ஆபாசப் பேச்சுகளை அடக்கிப்போடவோ, தப்பை உணரவைக்கவோ அதிகாரமில்லை. எத்தனை வழக்குகள் பதிவாகியிருந்தாலும் ஒரு மாணவனுடைய மாற்றுச்சான்றிதழில் ‘திருப்தியில்லை’ எனவோ ‘திருப்தி’ என்றாவது எழுதவோ அதிகாரம் அளித்திருக்கிறீர்களா?

கவர்மென்ட் ஸ்கூல்னா, புக்கு,நோட்டு சொமக்கணும், பென்சில், க்ரேயான், புத்தகப் பை, செருப்பு, அப்புறம் பஸ்பாஸ் வேற வாங்கணும். எல்லாருக்கும் இஎம்ஐஎஸ் என்ட்ரி போடணும், பேங்க் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணணும், ஆதார், ஜாதின்னு எல்லா சான்றிதழ்களும் நீதான் எடுத்துக்கொடுக்கணும்.

வருசத்துக்குப் பத்து தடவ ஆதார் நம்பரக் குடு, அக்கவுன்ட் நம்பரக் குடுன்னு ஆபீசுல இருந்து மெயில் வரும். கண்டிப்பா ஒரு ஹார்ட் காப்பி கொடுத்திருங்கன்னு வெறப்பா மெயில தட்டி விட்டுருவாங்க. மெயில பிரின்ட் போடுறதுக்கே ஒரு நூறு பண்டல் பேப்பர் வேணும்.

சத்துணவு பணியாளர் வரலன்னா, சாப்பாடு செய்யற வேலையும் பார்க்கணும், ஆபீசருங்க வாராங்களா டாய்லெட்ட சுத்தப்படுத்தவும் வேணும். எல்லாத்துக்கும் பேர் எழுதி என்ட்ரி போட்டு கையெழுத்து வாங்குங்க.

மூணு டேர்ம் புக், நோட், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள், எல்லாருக்கும் ஸ்காலர்ஷிப் வாங்கிக் குடுத்தீங்களா? அதிகாரிங்ககிட்ட வந்து கம்ப்ளெய்ன்ட் பண்ணப் போறாங்க.

எல்லா டெஸ்டுலயும் நம்ம பசங்க ஏன் இன்னும் தேறமாட்டேங்குறாங்க. இன்னும் ஹார்ட் ஒர்க் பண்ணுங்க, அட்வைஸ் வரும். அப்பப்போ மெடிக்கல் கேம்ப் வருவாங்க. வாட்ஸ் அப் வதந்திகளைத் தாண்டி எல்லா புள்ளைங்களயும் தடுப்பூசி போட வைக்கணும்.

அப்புறம் ஆர்.ஏ, எஸ்.ஏ, எஸ்.எஸ்.ஏன்னு புதுப்புதுத் திட்டங்கள். மக்கள் தொகை கணக்கெடுக்கணும். அஞ்சு வருசத்துல மூணு எலெக்சன் நடத்தணும்.

பணியிலிருக்கும்போது கத்திக்குத்துப்பட்டு உயிரிழந்த காவலருக்கு கோடிகளில் நிவாரணமளித்த அரசு, சாகவேண்டிய அவசியமே இல்லாத பணியிலிருக்கும் ஆசிரியை கத்திக் குத்துப்பட்டு உயிரிழந்தபோது எத்தகைய நிவாரணம் அளித்தது என்பது நாமறிந்ததே.

அட போங்கப்பா, எல்லாம் நம்ம புள்ளைங்கதானேன்னு எல்லாத்தையும் பொறுத்து, சிலபஸ்படி பாடம் முடிச்சி, தனியார் பள்ளிகள்ல ரெண்டுவருசமா செய்யிறத ஆறு மாசத்துல நடத்திக்காட்டினாலும், 100 சதவீத தேர்ச்சி, எத்தன சென்டம்னு அதிகாரிகளின் இலக்குகள்.

ஒளிவுமறைவின்றி ஒருஉண்மையைக் கூறுகிறேன். 20-க்கு மேல் மதிப்பெண் பெற்றாலே அதை 35 ஆக்குங்கள் என்று இந்த அதிகாரிகள் வற்புறுத்தவில்லையா?

மதிப்பெண்களை இனாமாகவும் கூடுதலாகவும் போடச்செய்து எங்கள் மாண்பையே இழக்கச்செய்து விட்டீர்கள். தற்போது விளிம்புநிலையில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் ஏளனப்பேச்சு இதுதான், எந்தக் கேணப்பய கையில என்பேப்பர் போச்சோ தெரியல, 25 மார்க்குக்கு கூட நான் எழுதல, எனக்கு 35 மார்க் போட்டிருக்கான்.

எங்கள் கைகளில் பிரம்பைக் கொடுங்கள் என்று கேட்கவில்லை; ஆனால் எங்கள் கைகளிலிருந்து பிரம்பைப் பிடுங்காதீர்கள். எங்கள் கைகளிலிருந்து பிரம்பைப் பிடுங்கப்பிடுங்க, போலீசின் கைகளில் லத்தியும், துப்பாக்கியும் வலுத்துக் கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.

இன்றைக்கும்கூட கல்வித்தரம், 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வு, நீட்டுக்கு என்ன செய்ய என்று ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், இஸ்ரோ என்று தானே ஆலோசனை கேட்கிறீர்கள்; அடிப்படையான ஆசிரியர்களை யாராவது நினைத்துப் பார்த்தீர்களா?

இன்னும் கூட மெடிக்கல், இன்சினியரிங், ஐஏஎஸ், ஐபிஎஸ் என்று கல்விக்கென்று ஒருபட்சமான இலக்கைத்தானே நீங்கள் முன்வைக்கிறீர்கள். மனப்பான்மை சார்ந்த இலக்குகளை என்றைக்கு முன்வைக்கப் போகிறீர்கள்? சமூக மாண்புகளை என்றைக்கு நாம் இலக்காக்குவது? இயற்கையை நேசிக்கவும் ரசிக்கவும் தனியே டியூசன் வைக்க வேண்டுமா?

இதையெல்லாம் தாண்டியும் உங்களில் சில கேள்விகள் எழலாம், “இத்தகைய சவால்களையெல்லாம் தாண்டியும் எத்தனையோ ஆசிரியர்கள் சாதிக்கவில்லையா? தம் சொந்தப் பணத்தில் பள்ளிக்கு வளர்ச்சிப்பணிகள் ஆற்றவில்லையா? வீதி, வீதியாக, ஊர் ஊராகச் சென்று மாணவர்களைத் தேடவில்லையா?” என லாவகமாக வீசலாம். உண்மைதான்.

உள்ளன்போடு உழைக்கும் மகாத்மாக்கள் அவர்கள். மகாத்மா ஒருவர்தான்; அதுபோல்தான் இவர்களும் ஒன்றிரண்டு சதவீதம்.

மீண்டும் சொல்கிறேன், உங்கள் கொள்கைகள் பெரும்பான்மையோரைக் குறித்து இருக்கட்டும். எங்களுக்கும் குடும்பங்கள் உண்டு, குழந்தைகள் உண்டு, குறைகளும் உண்டு.

இன்னும் கடைசியாய் ஒரு கேள்வி உங்களிடம் மிச்சமிருக்கும் , “உங்கள் பிள்ளைகளை மட்டும் ஏன் தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறீர்கள்?” இதற்கு பதில்தேட விரும்பினால் – மீண்டும் முதலிலிருந்தே தொடங்குங்கள்.

தனியாரிடமிருந்து மது விற்பனையை அரசு தனதாக்கிக் கொண்ட போதும், கல்வி மற்றும் சுகாதாரத்தைத் தன்னிடமிருந்து தனியாருக்குத் தாரைவார்த்த போதும் வாயைப் பொத்திக் கொண்ட நீங்கள், இன்று ‘நீட்’டும் ‘கேட்’டும் கொண்டு வந்து உங்களை நீங்களே தரப்படுத்திக் கொள்வதாக சாதிக்கப் பார்க்கிறீர்கள்.

இன்ஸ்டன்ட் உலகில் கல்வியின் பலனும் இன்ஸ்டன்ட்டாக எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் கண்மூடித்தனமான ஒரு பதிலை எதிர்பார்ப்பீர்களானால் இதோ..

எல்லா அரசு ஊழியரையும், எம்.பி, எம்எல்ஏக்களின் வீட்டுப் பிள்ளைகளையும் அரசுப் பள்ளிக்கு அனுப்ப சட்டமியற்றுங்கள். எல்லாப் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளாக்குங்கள். அரசுப் பள்ளியினருக்கே அரசுக் கல்லூரிகளும் எனச் சட்டமியற்றுங்கள்.

கற்பித்தல் ஒன்றே ஆசிரியர் பணி என்றாக்குங்கள். அனைத்துப் பள்ளிகளையும் முதலில் தாய்மொழி வழிப்படுத்துங்கள். இதையெல்லாம் உங்களால் செய்ய முடியாது.

‘ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு’ எனத் தனித்துப் பிரித்து பத்திரிகைகளில் செய்தி வெளியாகின்றதே. ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் இல்லையா? அரசு ஊழியர்கள் என அழைக்கப்படத் தகுதியற்றவர்களா? லாபக் கணக்கு பார்க்கும் உங்கள் மூளைகளைக் கொஞ்சம் சலவை செய்யுங்கள்.

கல்வி – வாழ்க்கைக்காக, சம்பாதிக்க அல்ல. நாங்கள் வாழக் கற்றுக்கொடுக்கிறோம், சம்பாதிக்க அல்ல. வாருங்கள், வேண்டுமானால் உங்களுக்கும் வாழக் கற்றுத் தருகிறோம்.

இப்படிக்கு அப்பாவி அரசுப் பள்ளி ஆசிரியர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe