சாலைகளோடு ஹேமமாலினி கன்னங்களை ஒப்பிட்ட அமைச்சர்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
Gulabrov 1 - 2026

ஜல்கோனிலிருக்கும் தனது தொகுதியின் சாலைகள் அனைத்தும் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான ஹேமமாலினியின் கன்னங்களைப் போல இருக்கும் என்று மகாராஷ்டிர அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையாகியுள்ளது.

மகாராஷ்டிர அமைச்சரும் சிவசேனா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாப்ராவ் பாட்டீல் தான் அந்தச் சர்ச்சை நாயகன். மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

அதற்காக பாட்டீல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், தன்னுடைய தொகுதியில் போடப்பட்ட சாலைகள் குறித்து பேசினார்.

எதிர்க்கட்சியினரும் மக்களும் தனது தொகுதியில் உள்ள சாலைகளை நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றார். அதோடு விட்டுவிடாமல் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட அவர், நடிகை ஹேமமாலினியின் கன்னம் போல் சும்மா தகதகனு ரோட் எல்லாம் மின்னும் என்றும் கூறினார்.

hema malini - 2026

அப்படி இல்லை என அவர்கள் கருதும் பட்சத்தில் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விடுவதாகவும் ஏடாகூடமாகப் பேசினார்.

அவர் இப்படி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவ நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். சாலையின் தரத்தை வர்ணிக்க ஒரு பெண்ணை தான் ஒப்பிடுவீர்களா என பெண்ணுரிமை பேசுபவர்கள் கேள்வியெழுப்பினர்.

மேலும் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்காவிட்டால், குலாப் ராவ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகவும் மகாராஷ்டிர பெண்கள் நல ஆணையத்தின் தலைவர் ருபாலி சகான்கர் எச்சரித்தார்.

மகாராஷ்டிர அமைச்சரின் இந்தப் பேச்சு குறித்து கருத்துக் கூறிய பாஜக எம்.பி.யும், நடிகையுமான ஹேம மாலினி, மிகவும் அருவருக்கத்தக்க பேச்சு என்று கூறியுள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, லாலு பிரசாத் யாதவ் இதுபோன்றதொரு கருத்தைக் கூறியிருந்தார். இதனைப் பலரும் தொடர்கிறார்கள். யாராக இருந்தாலும், எந்தப் பெண்ணையும் இவ்வாறு சொல்லக் கூடாது என்றார் ஹேம மாலினி.

இதன் எதிரொலியாக தற்போது அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல் மன்னிப்பு கோரியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.