
ஒரு முறை பயன்படுத்தப்படும் ‘பிளாஸ்டிக்’ பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு ஜூலை 1 இன்று முதல் அமலுக்கு வந்தது.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை 2022-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதைத் தொடா்ந்து, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு உள்ளிட்ட அனைத்திற்கும் ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்தது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு, பூமிக்கு இந்தியா அளிக்கும் பரிசு என்று குறிப்பிட்டுள்ளது நார்வே டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
இதனிடையே, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் படும் என தில்லி அரசு தெரிவித்துள்ளது. தில்லியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடையை மீறி பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஜூலை 10ஆம் தேதி வரை கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் அதனை மீறி பயன்படுத்தினால் 5 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அமைச்சர் கோபால் ராய் எச்சரித்துள்ளார்.