திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் வடக்கு கோபுரத்தை கட்டிய அம்மணி அம்மாளின் மடத்தை இடித்த அறநிலைத்துறையை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்று அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்…
உலகம் போற்றும் திருவண்ணாமலை அண்ணாமலையாரின் கோவிலின் வடக்கு கோபுரத்தை கட்டியவர் தெய்வத்திரு அம்மணி அம்மாள் அவர்கள். இவர் அண்ணாமலையாரின் பூரண அருள் பெற்றவர். இவர் தன் அருட் சக்தியால் பொதுமக்களிடம் நன்கொடைகள் வசூலித்து கோவிலில் வடக்கு கோபுரத்தை கட்டியவர் ஆவார். இவரது ஜீவசமாதியும், மடமும் சிறிய கோவிலைப் போல் வடக்கு கோபுரத்திற்கு அருகில் உள்ளது. இந்த மடம் இவரது குடும்பத்தாரை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது.
குடும்பத்தினர் ஒரு டிரஸ்டை வைத்து நிர்வாகம் செய்து வருகின்றனர். இவர்கள் பெங்களூரில் இருக்கின்றனர். இந்த மடம் அறநிலைத்துறைக்கு சொந்தமானது அல்ல. இந்த மடத்தை பார்த்து பராமரித்து வந்த வாட்ச்மேன் ஆக இருந்தவர் மடத்தை கைப்பற்றி ஆண்டு அனுபவித்து வந்தார். மடம் தனக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடினார்.
இந்து முன்னணி கௌரவ தலைவராக இருந்த இராதாகிருஷ்ணன் என்பவர் மடத்து டிரஸ்டுக்காக 30 ஆண்டுகள் போராடி உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மடத்தை மீட்டெடுத்தார். அவர் தற்போது உயிருடன் இல்லை அவரது மகன் தான் இருக்கிறார். இந்த மடத்தை நிர்வகிப்பதற்காக ஸ்டேட் இந்து முன்னணி டிரஸ்டையும் ஒரு நிர்வாகியாக ஒரிஜினல் மடத்தின் டிரஸ்டின் சரத்துப்படி சேர்த்து நிர்வாகம் நடந்தது. திருவண்ணாமலை நகர் மன்ற தலைவராக இருந்த ஸ்ரீதர் என்பவர் மடத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்தார்.
இந்து முன்னணி அதை முறியடித்தது. மேலும் அமைச்சர் ஏ. வ வேலுவின் ஆட்கள் ஒரு முறை மடத்தில் ஆக்கிரமிக்க பார்த்த போது கோபால் ஜி பேசியதால் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரையின்படி ஏ.வ வேலு மடத்தை கையகப்படுத்துவதை கைவிட்டார்.
இந்த மடத்தை இந்து முன்னணி மாவட்ட தலைவராக இருந்த சங்கர் பார்த்து வந்தார். அவரும் சுயநலவாதியாக மாறி மடத்து நிர்வாகிகளை ஏமாற்றி தனக்காக வீடு கட்டிக் கொண்டார். இந்து முன்னணி தவறை சுட்டிக்காட்டிய போது தவறை திருத்திக் கொள்ளாத காரணத்தின்ல் சங்கரை இந்து முன்னணி மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கியது.
அம்மணி அம்மனின் தியாகம் அளவிட முடியாதது இந்த மடமும் 500 ஆண்டுகளுக்கு மேல் தொன்மையானது.
மடத்தை அபகரிக்க சில முக்கிய அரசியல்வாதிகள் நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றனர். இவர்கள் எல்லோருமே தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் என்பதை திருவண்ணாமலை மக்கள் அறிவார்கள்.
சங்கரின் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்றியதை இந்து முன்னணி மனப்பூர்வமாக பாராட்டுகிறது. ஆனால் இந்த மடத்தின் தொன்மையை காப்பாற்ற வேண்டும். நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் அமர்வின் தீர்ப்பின்படி அம்மணி அம்மன் பழமையான கோவிலை பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்த மடத்தின் வரலாறு தெரியாமலும் அம்மணி அம்மாள் பெருமை தெரியாமலும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அறிக்கை விடுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.
அம்மணி அம்மன் மடத்தை காக்க வேண்டியது அண்ணாமலை பக்தர்களின் கடமையாகும் அண்ணாமலையார் கோவிலின் பக்தையாக இருக்கும் துர்கா ஸ்டாலின் அம்மாவும் வடக்கு கோபுரத்தை கட்டிய அம்மணி அம்மாள் மடத்தை காக்க முன்வர வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.