
சிகிச்சையின் போது அலட்சியம் காரணமாக நோயாளி இறந்து விட்டார் என்ற குற்றச்சாட்டில் டாக்டரை கைது செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிஜிபி., சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிகிச்சையின் போது நோயாளி மரணம் அடைந்து விட்டார். இதற்கு டாக்டரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவே காரணம். டாக்டரை இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையங்களில் புகார் அளிப்பர். அப்போது, காவல் நிலைய பொறுப்பில் இருக்கும் அதிகாரி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அத்தகைய சூழ்நிலையில், விசாரணை அதிகாரி வழக்குப்பதிவு செய்யும் முன், முழுமையான விசாரணை நடத்தி, வாய்மொழி மற்றும் ஆவண ஆதாரங்களை திரட்ட வேண்டும்
மூத்த அரசு டாக்டரிடம் குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர்களிடம் வல்லுனர் கருத்தை பெற வேண்டும்
குற்றச் செயல் உறுதி செய்யப்பட்டால் மேல் நடவடிக்கைக்கு முன் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சட்ட ஆலோசனை பெற வேண்டும்
சிகிச்சையின் போது அலட்சியமாக நடந்து கொண்டதாக டாக்டர் மீது குற்றம் சாட்டப்பட்டால் மற்ற வழக்குகளைப் போல கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை
வழக்குப் பதிவு செய்வதற்கு முன் வழக்கில் தொடர்புடைய அனைத்து சாட்சிகளையும் சம்பந்தப்பட்ட கமிஷனர்கள் மாவட்ட எஸ்.பி.,க்கள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்
வழக்கின் விவரங்கள், ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் குற்றம் நடைபெற்ற சூழ்நிலை ஆகியவை தொடர்பான விரைவு அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் டிஜிபி.,க்கு அனுப்ப வேண்டும் – என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அண்மைக் காலமாக மருத்துவமனை குறித்த செய்திகள், குறிப்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சூழலில் திடீர் நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ள சூழலில் திடீரென வெளியிடப்பட்ட டிஜிபி.,யின் செய்திக் குறிப்பினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், சமூகத்தளங்களில் விவாதப் பொருளும் ஆகியுள்ளது.