காவிரி விவகாரமும் திமுக.,வின் காங்கிரஸ் கரமும் விக்ரம் வேதாள் கதை போல் நீண்டு கொண்டே செல்லக் கூடியது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் தொடர்ந்து செல்ல, விக்ரமாதித்யன் தோளில் மறுபடியும் வந்து தொங்கிக் கொண்ட வேதாளம் கேட்டது … “விக்ரமா..! பாண்டே- ஸ்டாலின் பேட்டியைப் பார்த்தாயா?
விக்ரமாதித்யன் சொன்னான்.. “ஆமாம் பார்த்தேன்”
“காவேரி விவகாரத்தில் மத்திய பாஜக., அரசு, தமிழக அதிமுக அரசு, கர்னாடக காங்கிரஸ் அரசு – மூவரில் யார் அதிகமாக தவறிழைத்ததாக நினைக்கிறீர்கள்..?” என்று பாண்டே கேள்வி கேட்டபோது, ஸ்டாலின் என்ன சொன்னார் என்பதை நினைவில் வைத்திருக்கிறாயா?” கேட்டது வேதாளம்.
“ஆமாம். ‘மத்திய பிஜேபி அரசும், தமிழக அதிமுக அரசும்தான் தவறிழைத்தவர்கள்..!’ என்று ஸ்டாலின் சொன்னார்.” என்றான் விக்ரமாதித்யன்.
மறுபடியும் அழுத்தமாய் கேட்டது வேதாளம்… ”அப்போது பாண்டே, ‘கர்னாடக காங்கிரஸ் அரசு ஒரு தவறு கூட செய்யவில்லை என்று சொல்கிறீர்களா..?’ என்று கேட்க அதற்கு ஸ்டாலின், ‘ஆமாம்.. காங்கிரஸ் அரசு எந்த தவறும் செய்யவில்லை..!’ என்றாரே நினைவிருக்கிறதா?” என்று கேட்டது வேதாளம்.
அதற்கு விக்ரமாதித்யன் ஆமாம் என்பது போல் தலையாட்டினான். உடனே வேதாளம், ”விக்ரமா..! காவேரி ட்ரிப்யூனல் என்ற ஒன்று ஓரளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருந்தது. அது சொன்ன நீர்ப்பங்கீட்டை நிறைவேற்ற மாட்டோம் என்று காங்கிரஸ் அரசு சொன்னதால்தான் தமிழக அரசு, உச்ச நீதிமன்றம் வரை போய், இடைக்கால நீர்ப்பங்கீட்டு தீர்ப்பை வாங்கியது..!
“ஆனால், அதையும் மதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் அரசு மறுத்து, மிக மோசமான வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, பெங்களுர்வாழ் தமிழர்கள் சிலரை கொலையும் செய்து, அவர்தம் சொத்துகளை சூறையாடியதை வேடிக்கை பார்த்தது..! இப்போது காவேரி மேலாண்மை தேவையில்லை என்று ஆர்ப்பாட்டங்கள் செய்தும் கொண்டிருக்கிறது..! காவேரி மேலாண்மை அமைத்தாலும் அதை நிச்சயமாய் நிறைவேற்ற மாட்டோம் என்றும் சொல்கிறது..!
”இவ்வளவு அராஜகமும், அநியாயமும் செய்கின்ற கர்னாடக காங்கிரஸ் அரசின் மேல் ஒரு தவறு கூட இல்லை என்று இப்படி ஸ்டாலின் பேச என்ன காரணம்..? காங்கிரஸ் கட்சி ஏதோ ஒரு விஷயத்தில், திமுகவின் கையை பின்னால் முறுக்குகிறதா? அல்லது, காங்கிரஸ் மேல் தவறு உண்டு என்று சொல்லி, அதோடு சேர்ந்து கொண்டு இங்கே ஆர்ப்பாட்டம் செய்தால் மக்கள் வழித்துக் கொண்டு சிரிப்பார்களே என்பதாலா..? இதற்கு சரியான பதிலைச் சொல் விக்ரமா..! பதில் தெரிந்தும் சொல்லாமல் விட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்” என்று வழக்கம் போல் பயமுறுத்தியது வேதாளம்.
யோசித்துக் கொண்டே விக்ரமாதித்யன் பதில் சொன்னான்…. “இது இரண்டும் இல்லை..! அங்கே வட்டாள் நாகராஜ், சன் நெட்வொர்க் சொத்துகளை நாசம் செய்வோம் என்று பயமுறுத்தியதால், அரண்டு போனது திமுக..! அந்த சொத்துகளுக்கு அங்கே இருக்கும் காங்கிரஸ் கவர்மெண்ட்தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதால்தான், இப்படி காங்கிரஸ் மேல் ஒரு தவறும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார் ஸ்டாலின்..! திமுகவிற்கு குடும்பமும், சொத்துகளும்தான் இரு கண்கள்..! திமுக.,காரர்கள், தலைமை எது சொன்னாலும் கேள்வி கேட்காத மடையர்கள் என்பதும் ஒரு காரணம்..!” என்று தன் மனத்தில் பட்டதை மிகவும் தைரியமாகச் சொன்னான்.
அவனது பதிலால் மௌனம் கலைந்த வேதாளம், “இதுவே உண்மையான பதில்..! நீ சரியாகச் சொல்லிவிட்டாய்” என்று கூறி விட்டு மீண்டும் மரத்தின் மீது பறந்து போய்த் தொங்கியது.