ஏற்கெனவே வெடி விவகாரத்தில் ரொம்பவே நொந்து போயிருக்கும் இளைஞர்களும் சிறுவர்களும் இப்போது, சமூக வலைத்தளங்களில் பரப்பப் படும் பஞ்சாங்கத் தகவலைக் கண்டு ரொம்பவே நொந்து போயிருக்கிறார்கள்.
பத்தாம் பசலி என்று என்று பஞ்சாங்கப் பேரெடுத்தால் சொல்வதும், பழையன குறித்து எப்போதும் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பழம் பஞ்சாங்கம் என்றும் பெயரிட்டு மகிழ்வது இளைஞர்களின் இயல்பு. இந்த நிலையில், பழம்பஞ்சாங்கத்தில் நடக்கப்போகும் புதிய செய்தியைச் சொல்லியிருந்தால், அதுவும் தங்களை பாதிக்கப் போகும் ஒரு செய்தியைச் சொல்லியிருந்தால்… ஆத்திரம் வராதா என்ன?
மழை பிய்த்துக் கொண்டு கொட்டும்,வெயில் காய்ந்து தள்ளும், புயல் அடிகும், வெள்ளம் வரும் என்றெல்லாம் இயற்கைச் சீற்றங்களைக் கணித்து பஞ்சாங்கத் தகவல்களில் போடுவார்கள். இந்தக் கணிப்புகளுக்கு பின்னணியில் இருப்பவை, அந்த அந்த வருடத்தின், ராஜா கிரகம், சேனாதிபதி கிரகம் உள்ளிட்டவற்றை வைத்துக் கூறப்படுவது…
இயற்கைச் சீற்றம் அல்லாமல், செயற்கை மாற்றத்தையும் ஏமாற்றத்தையும் பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே எழுதி வைத்தால், சந்தேகம் வலுக்காதா!? அப்படித்தான் வலுத்திருக்கிறது பலருக்கு!
இந்த வருடம் வெடியில்லா தீபாவளியாக நாடு முழுக்க இருக்கும், தமிழகத்திலும் இது படிப்படியாக அமலாகும் என்று பஞ்சாங்கத்தில் ஒரு தகவலை ஒரு வருடத்துக்கு முன்பே எழுதி வைத்திருப்பது இப்போது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
வெடி இல்லாத தீபாவளியாக இருக்கும் என்று திருக்கணித பஞ்சாங்கததில் கணிக்கப் பட்டுள்ளதற்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறார்கள் வலைத்தள வாசிகள்! வழக்கு போட்டவங்கள பத்தி தெரிஞ்சிருக்கும், நீதிபதி இப்படித்தான் தீர்ப்பு கொடுப்பார் என ஒரு வருடம் முன்பே எதிர்பார்த்திருப்பார்கள், நீதிபதியின் நாடி பிடித்துப் பார்த்திருப்பார்கள் என்றெல்லாம் கூறி இந்தப் பக்கத்தையும் வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள் பலர்.




