
பகவத் கீதை குறித்து, தான் பேசியதாக பரப்பப்படும் வதந்தி குறித்து, நடிகர் விஜய் சேதுபதி பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் ஒரு செய்தி நிறுவனத்தின் உண்மை செய்தியையும், பொய்யாக பரப்பப்பட்டு வரும் செய்தியையும் ஒன்றாக சேர்த்து பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகத் திகழும் விஜய் சேதுபதி, புனித நூலான பகவத் கீதையைக் கொச்சைப்படுத்தி பேசியதாகக் கூறி, ஒரு டிஜிட்டல் படம் ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதியின் இந்தக் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்து கருத்து தெரிவித்த விஜய் சேதுபதிக்கு கேரளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் அதிர்ந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில், பகவத் கீதை குறித்தும் அவர் அவதூறாகச் சொல்லியிருந்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப் பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இதனையறிந்த விஜய் சேதுபதி தனது பேஸ்புக், டுவிட்டர் பக்கம் மூலம் விளக்கம் அளித்திருக்கிறார். அதில் ஒரு செய்தி நிறுவனத்தின் உண்மை செய்தியையும், பொய்யாக பரப்பப்பட்டு வரும் செய்தியையும் ஒன்றாக சேர்த்து பதிவிட்டுள்ளார்.
மேலும், ’என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல; எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது.
எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 6ஆம் தேதி செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்கும் ’டிஜிகாப்’ என்ற காவல்துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ர மொபைல் செயலி அறிமுக விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘செல்போன் பறிப்பு சம்பவங்களால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி டிஜிகாப் செயலி மூலம் குறையும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
தான் பேசியது இதுதான் என்றும் அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.