அரசு அலுவக உதவியாளரை அதிகாரியாகவும், அதிகாரியை அலுவலக உதவியாளராகவும் மாற்றி வாக்கு சாவடி பணி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்!
தமிழகத்தில் தேர்தல் பணியாற்ற விண்ணப்பித்த அரசு அலுவக பியூனை அதிகாரியாகவும் அதிகாரியை பியூனாகவும் மாற்றி வாக்கு சாவடியில் பணியாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு வழங்கியுள்ளதாக பல்வேறு மாவட்டங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தேர்தல் பணியாற்ற தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் அலுவக பியூன் வரை அவர்களது கல்வி தகுதி, தற்போது பணியாற்றும் பணியின் பதவி நிலை, ஆகியவற்றை குறிப்பிட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலக உத்தரவின்படி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விண்ணப்பித்துள்ளனர்.
1500 வாக்காளர்கள் கொண்ட ஒரு வாக்கு சாவடி பணிக்கு வாக்கு பதிவு கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி ஒருவரும் அவரது கீழ் நிலையில் வாக்கு பதிவு நடத்தும் அலுவலர்கள் 1, 2, 3, என்ற நிலையிலும் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு சுமார் நான்கு அல்லது ஐந்துக்கும் மேற்பட்டோர் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வாக்கு பதிவு நடத்தும் அலுவலர் நிலை 2க்கு ( அரசு துறைகளில் எழுத்தர், தட்டச்சர், ஆசிரியர், உதவி அதிகாரி போன்ற பல பதவிகளில் பணியாற்றுவோர்) வாக்காளர்கள் வாக்கு அளிக்க கொண்டு வரும் ஆவணங்ளை ஒப்பிட்டு பட்டியலை சரிபார்த்தல், வாக்கு பதிவு குறித்தான வாக்காளர் பேரேட்டில் எழுதுதல், வாக்கு பதிவு குறித்தான சதவிகிதத்தை கணக்கு பார்த்தல் போன்ற பணிகள் இருக்குமாம்.
வாக்கு பதிவு நடத்தும் அலுவலர் நிலை3க்கு (அரசு துறைகளில் அலுவலக பியூனாக பணியாற்றுவோர் ) வாக்காளர்களின் விரலை துடைத்து மை இடுதல், மாற்று திறனாளிகளுக்கு வாக்களிக்க உதவுதல் போன்ற பணிகள் இருக்குமாம். ஆனால் தற்போது அரசு அலுவலர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கிய உத்திரவுகளைப் பார்த்தால் ஒரே அலுவலகத்தில் (அரசு துறைகளில் எழுத்தர், தட்டச்சர், உதவி அதிகாரி போன்ற பல பதவியில் பணியாற்றுவோர்) வாக்கு சாவடியில நிலை 3லும், பியூனுக்கு நிலை 2 பதவியிலும் அமர்த்தி உத்திரவு வழங்கப்பட்டுள்ளதாம்.
பல்வேறு மாவட்டங்களில் மேற்படியான தேர்தல் பணி உத்திரவு வழங்கிய அதிகாரிகளின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் அவர்களிடம் நேரில் சென்று நாங்கள் பணியாற்றும் அலுவலகத்தில் இடும் உத்திரவை செயல் படுத்தும் பியூனுக்கு வாக்குச்சாவடியில் எழுத்து பணியும், எங்களுக்கு மை இடும் பணியையும் கொடுத்தது ஏன் எனக் கேட்டு தேர்தல் பணியை மாற்றி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனராம்.
மேலும் ஆறாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள தமிழ் மொழியில் எழுதவே ததிங்கனத்தோம் போடுபவர்கள், பெரும்பாலான மக்கள் வாக்கு சாவடியில் வாக்களிக்க கொண்டு வரும் ஆவணங்ளை ஒப்பிட்டு பட்டியலை சரிபார்த்தல், வாக்கு பதிவு குறித்தான வாக்காளர் பேரேட்டில் எழுதுதல், வாக்கு பதிவு குறித்தான சதவிகிதத்தை கணக்கு பார்த்தல் போன்ற பணிகளை எப்படி செய்ய முடியும் என தேர்தல் பணி உத்திரவு வழங்கிய அதிகாரிகளிடம் கேள்வியும் எழுப்பினராம். பெரும்பாலானோர் தேர்தல் பணியே வேண்டாம் எனக் கூறினராம்.
ஆனாலும் தேர்தல் பணி உத்திரவு வழங்கிய அதிகாரி நான் அளித்த பணி உத்திரவை மாற்றம் செய்து தர முடியாது என்றும் தேர்தல் பணி கட்டாயம் செய்துதான் ஆக வேண்டும் என்றும் கூறிவிட்டதாக முக்கியமாக கோவை,திருப்பூர் மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் பரவலாக பேசப்படுகிறது.
பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் அலுவக பியூன் வரை அவர்களது கல்வி தகுதி, தற்போது பணியாற்றும் பணியின் பதவி நிலை, ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பத்தை பார்த்து அவருக்கு வாக்கு சாவடியில் என்ன பணி வழங்க வேண்டும் என்பதைக்கூட தீர்மானிக்கும் தகுதியில்லாதவர்களை எப்படி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கலாம் என பாதிக்கப்பட்டோர் வினாவும் எழுப்புகின்றனராம்.
எது எப்படியோ, தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள 16-ந் தேதி வாக்கு சாவடியில் என்னென்ன கூத்து நடைபெற போகிறதோ? அனைவரும் பொறுத்து இருந்து பார்ப்போம் .



